கல்வியின் எதிர்காலம் இணையத்தில் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இணைய வசதிகள் மற்றும் தேவையான கருவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள டெல்ஃப்ட் சைவப்பிரகாசா கல்லூரிக்கு அத்தியாவசியமான மடிக்கணினி மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

16 ஆசிரியர்களைக் கொண்ட இப்பாடசாலையில் 68 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் அவர்களின் எதிர்காலப் படிப்பிற்காக கணினி மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்இ நாட்டில் நிலவும் கல்வி ஏற்றத்தாழ்வை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

"இலங்கையில் 25% ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள்  பயிற்சி பெறாதவர்களே.  வட மாகாணத்தில் மாத்திரம் 53% பயிற்சி பெறாத ஆரம்பத் பிரிவு ஆசிரியர்கள் உள்ளனர்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இதற்கு மேல் உதாரணம் தேவையில்லை. நான் கல்வி அமைச்சராக இருந்த போது வடமாகாண கல்வித்துறையை ஆராய்ந்தேன். வடமாகாணத்தில் 22  தேசிய பாடசாலைகள் உள்ளதாக அப்போதுதான் தெரிய வந்தது.  ஜனாதிபதியின் ஆயிரம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றும் நிகழ்ச்சியில் வட மாகாணத்திற்கு தேசிய பாடசாலைகளாக 76 பாடசாலைகள் உயர்ந்துள்ளது.  இலங்கையில் 10142 பாடசாலைகள் உள்ளன.  ஒவ்வொரு பாடசாலைக்கும் இணையம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில்,  பிள்ளைகளின் கல்வி இணையத்தில் தங்கியிருக்கும்இ எனவே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதித் தலைவர், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன்இ மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். பிரதீபன், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, சைவப்பிரகாச கல்லூரியின் அதிபர் அகிலன் தேஷ்வரி மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.