யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட  

ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச் சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

“உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார். 

பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11.02.2022