வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டம்

*அரச ஊழியர்களுக்கு ரூ.3500 கொடுப்பனவு
*வடக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி
நாளை முதல் 12 வரை விவாதம்


2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு - செலவு, திட்டமான இந்த வரவு - செலவுத் திட்டம், சாதாரண மக்களைப் பலப்படுத்தவும் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அனைத்து மக்களினதும் அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை நோக்காகக் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 3500 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 1500 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த வருடம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தின் காரணமாக வரவு செலவுத்திட்டத்திற்குப் பதில் இடைக்கால கணக்கறிக்ைக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில், அபிவிருத்தி மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களுடன் வடக்கு அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கை அபிவிருத்தி செய்வதில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் உதவ முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்ட மூலம் என்டபிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், வர்த்தகம் மற்றும் மனித வளத்தை பலப்படுத்துவதற்கு தேவையான வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துவதாகவும் அமையவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வறுமையிலுள்ளோரை பலப்படுத்தும் வேலைத் திட்டத்தை மேலும் முன்னேற்றகரமான வகையில் முன்னெடுத்துச் செல்லவும் அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க 2019 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச செலவினம் 4550 பில்லியனாக உள்ளதுடன், அரச வருமானம் 2400 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இம்முறை வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை தேசிய உற்பத்தியில் 4.5 வீதமாக உள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2020 ஆகும்போது தேசிய உற்பத்தியில் 3.5 வீதமாக குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 2015ஆம் ஆண்டிலிருந்து அந்த இலக்கை நோக்கி கட்டம் கட்டமாக முன்னேறி வந்துள்ளதுடன், 2015ஆம் ஆண்டு 7.6 வீதமாக இருந்த வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை, 2018ஆம் ஆண்டு 5.3 வீதமாக குறைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அதனை 4.4 வீதமாக மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க 2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை எதிர்பார்க்கும் விதத்தில் தேசிய உற்பத்தியை 3.5 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐந்து தசாப்தங்களில் வரவு செலவுத் திட்டத்தில் ஆரம்ப நிலுவை முதற் தடவையாக கடந்த வருடம் மேலதிகமாக இருந்ததுடன் 2019ஆம் ஆண்டு அதனை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலுவை அதிகரிப்பதனால் அரசாங்க வருமானத்தின் கடன்களைக் குறைத்துக்கொள்வதுடன் கடன் பெற்றுக்கொள்வதன் எல்லைகளை மட்டுப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இதற்கிணங்க 2019ஆம் ஆண்டு கடன் சேவைகள் சம்பந்தமாக ஒதுக்கப்பட்டுள்ள 2200 பில்லியனுக்கு ஒத்ததாக கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வீதம் 2079 பில்லியனாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை 06ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகலில் இரண்டாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு குழு நிலை விவாதம் இம்மாதம் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 05ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதுடன் அதனையடுத்து ஏப்ரல் 05ஆம் திகதி பிற்பகல் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறுமெனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மொத்த செலவினம் 2,31,200 கோடி ரூபாவாகவுள்ளதுடன் செலவின மதிப்பீட்டு பிரேரணை கடந்த மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் தயாரிப்பு பணிகளில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோருக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர நன்றி தெரிவித்துள்ளார்.