01. உத்தேச இலங்கை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துடன் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பு (விடய இல. 09)

புயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமானளவு சட்ட விதிகளை ஏற்படுத்தி இலங்கையில் முழுமையான மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் பூரணமாக நிறைவேற்றப்படுவதனை உறுதிப்படுத்துமுகமாக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பை வரைவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய கௌரவ அமைச்சரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில், அக்குழு தனது கலந்தாய்வுகளை பூர்த்தி செய்து, தயாரித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைவு கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் மேலும் கலந்தாலோசிக்கவென தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் அவதானிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு குறித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைபை ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

02. அதிகாரங்களை ஒப்படைத்தல் (பிரதேச செயலாளர்களுக்கு) (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் (விடய இல. 11)

மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது தேவை என கண்காணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தினுள், 1982ம் ஆண்டு 58ம் இலக்க அதிகாரங்களை வழங்கும் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தினை மிகவும் அர்த்தமுள்ள, பயனுள்ள மற்றும் செயற்றிறன் மிக்கமுறையில் பிரயோக்கிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒப்படைத்தல் (பிரதேச செயலாளர்களுக்கு) (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தினை அரசாங்கத்தின் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 'கிராமிய இராஜ்யம்' எண்ணக் கருத்தியல் பத்திரம் மற்றும் செயல்முறைச் சட்டகம் (விடய இல. 13)

'கிராமிய இராஜ்யம்' எண்ணக் கருத்தியல் பத்திரம் மற்றும் செயல்முறைச் சட்டகம் ஒன்றினை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட எண்ணக் கருத்தியல் பத்திரம் மற்றும் செயல்முறைச் சட்டகம் , கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் கலந்தாலோசிப்பதற்கு உள்நாட்டலுவல்கள் மற்றும் அரச முகாமைத்துவம் தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்பு செயற்குழுவிற்கு குறித்த எண்ணக் கருத்தியல் பத்திரம் மற்றும் செயல்முறைச் சட்டகத்தை ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

04. அபிவிருத்தி மற்றும் கலாச்சாரம் தொடர்பான அறிவுசார் சொத்து வேலைத்திட்டத்தினை தேசிய மட்டத்தில் செயற்படுத்தல் (விடய இல. 14)
உலக அறிவுசார் சொத்து அமைப்பு (றுஐPழு) 'அபிவிருத்தி மற்றும் கலாச்சாரம் தொடர்பான அறிவுசார் சொத்து' தொடர்பான பிரேரிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்றினை இலங்கையில் செயற்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (ளுடுவுனுயு) மற்றும் உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க மற்றும் வட மேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. திறந்த அரசாங்க பங்குடைமை – தேசிய செற்றிட்டம் (விடய இல. 15)

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகளின் விளைவாகவும், திறந்த அரசாங்க பங்குடைமை குறிக்கோள்களுக்கமைய அமைந்திருந்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரலின் விளைவாகவும் 2015 ஒக்டோபரில் திறந்த அரசாங்க பங்குடைமையில் இணைவதற்கு அழைக்கப்பட்டிருந்தது. தற்போது திறந்த அரசாங்க பங்குடைமையானது 70 அங்கத்துவ நாடுகளை கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் அதனுடன் தொடர்பான தரப்பினரின் உதவியுடன் இலங்கை மூலம் தயாரிப்பட்ட திறந்த அரசாங்க பங்குடைமை – தேசிய செற்றிட்டத்தினை அமுலாக்குவதற்கும், அதன் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றத்தினை கண்காணிப்பதற்கும் தேசிய செயற்படுத்தல் குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இணங்க, அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் தலைமையில், தொடர்பான அமைச்சர்கள் மற்றும் தொடர்பான தரப்பினர் அடங்கிய கண்காணிப்பு குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

06. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கடல் துறைக்கான புரிந்துணர்வுகளை ஏற்றல் (விடய இல. 17)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐடுழு) 2006 சமுத்திர தொழிலாளர் ஏற்பாடுகள் மற்றும் 2003ம் ஆண்டு 185ம் இலக்க கடற்றொழிலாளர்கள் அடையாளப்படுத்தும் காகிதாதிகள் தொடர்பான ஏற்பாடுகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதற்கும், அந்த ஏற்பாடுகளை செயற்படுத்துவதற்கும் தேவையான சட்ட விதிமுறைகளை தயாரிப்பதற்கு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பெருக்கு மற்றும் சூழல் பாதிப்புக்களை கட்டுப்படுத்தல் (விடய இல. 18)

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் கலப்பிலிருந்து நீர் நிரம்பி வடிவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனை கருத்திற் கொண்டு குறித்த கலப்பின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் கலப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கலப்பினை சூழ வசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொது மக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கலப்பினை சூழ அணைக்கட்டு ஒன்றினை அமைப்பது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 'நீரினை மீள பயன்படுத்தல் மற்றும் மாற்று செயன்முறையொன்றின் மூலம் நீர் வழங்கல்' (றுயவநச சுந-ருளந ஃ யுடவநசயெவiஎந றுயவநச ளுரிpடல) தொடர்பில் கருத்தரங்கு ஒன்றினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 19)

இந்திய பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் ஒத்துழைப்புடன் 'நீரினை மீள பயன்படுத்தல் மற்றும் மாற்று செயன்முறையொன்றின் மூலம் நீர் வழங்கல்' (றுயவநச சுந-ருளந ஃ யுடவநசயெவiஎந றுயவநச ளுரிpடல) தொடர்பில் கருத்தரங்கு ஒன்றினை 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 01ம் திகதி தொடக்கம் 03ம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சாலாவ இராணுவ முகாமில் ஆயத களஞ்சியம் 2016-06-05ம் திகதி வெடித்ததன் விளைவாக விபத்துக்கு உள்ளானவர்களுக்கு மேலும் சலுகை வழங்கல் (விடய இல. 20)

சாலாவ இராணுவ முகாமில் ஆயத களஞ்சியம் 2016-06-05ம் திகதி வெடித்ததன் விளைவாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் காணப்பட்ட உபகரணங்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கும், வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வியாபார நிலையங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்ட வியாபாரிகளுக்கு அவ்வியாபார நிலையங்கள் பழைய நிலைமையை அடையும் வரை தற்காலிக பொது வியாபார நிலையம் ஒன்றினை நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஸ்தாபிப்பதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. மிகப்பலம்வாய்ந்த பௌதீக வி ஞ்ஞானம் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (விடய இல. 21)

அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்புடன் இணைந்து செயற்படுத்தும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவித்ததுடன் மற்றும் அவ்வமைப்புடன் தொடர்பான உறுப்பினர்களாக செயலாற்றுவதற்கு இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுத்து, மிகப்பலம்வாய்ந்த பௌதீக விஞ்ஞானம் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பில் அவ்வமைப்புடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வருவது தொடர்பில் தொழில்நுட்ப, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தொழில்நுட்பம் மற்றும் புதிய உற்பத்திகள் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் கியூபா அரசாங்கத்திற்குமிடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் (விடய இல. 22)

தொழில்நுட்பம் மற்றும் புதிய உற்பத்திகள் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் கியூபா அரசாங்கத்திற்குமிடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தொழில்நுட்ப, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. களுத்துறை மாவட்ட பெரிய வைத்தியசாலை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 24)

களுத்துறை மாவட்ட பெரிய வைத்தியசாலை அபிவிருத்தி செய்யும் நோக்கில் களுத்துறை மாவட்ட பெரிய வைத்தியசாலையின் வாட்டுத்தொகுதி, நிர்வாக கட்டிடம், பணியாளர்களின் உத்தியோகபூர்வ வீடுகள் மற்றும் ஒளடதங்கள் களஞ்சியசாலை என்பவற்றை 4,121 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அமைப்பதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு அனுமதி பத்திரங்களை கொண்ட நபர்களுக்கு விசா அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் (விடய இல. 30)

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு அனுமதி பத்திரங்களை கொண்ட நபர்களுக்கு 30 நாட்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்காக மற்றைய நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு விசா அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வட மேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பெரே வாவி புனரமைப்பு மற்றும் மீள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் (விடய இல. 33)

கொழும்பு நகரத்தினுள் அழகிய சூழலுடன் கூடிய பல வசதிகள் நிறைந்த பிரதேசமாக பெரே வாவி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு, பிரேரிக்கப்பட்ட பெரே வாவி மீள் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை 12,550 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மேற்கொள்வதற்கு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2017ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை அங்கத்தவர்களின் பங்களிப்புடன் நடாத்தப்படும் சர்வதேச வெசாக் கொண்டாட்ட விழா மற்றும் மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் (விடய இல. 41)

2017ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை அங்கத்தவர்களின் பங்களிப்புடன் நடாத்தப்படும் சர்வதேச வெசாக் கொண்டாட்ட விழா மற்றும் மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அணுகு வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளினை புதுப்பித்தலும் நிர்மாணித்தலும் (விடய இல. 43)
விசேட பொருளாதார நிலையங்களுக்கான அணுகு வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளினை 25.2 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் புதுப்பிப்பதற்கும், நிர்மாணிப்பதற்கும் குறித்த பொருளாhதார மத்திய நிலையங்கள் அமைந்துள்ள மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள கிராமிய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. இலங்கை தலைமைத்துவம் வகிக்கின்ற காலப்பகுதிக்குள் கொழும்புச் செயன்முறை மற்றும் அபுதாபி கலந்துரையாடலுக்கான செயலகம் மற்றும் ஆலோசனைக் குழுவைத் தாபித்தல் (விடய இல. 48)

இலங்கை தலைமைத்துவம் வகிக்கின்ற காலப்பகுதிக்குள் கொழும்புச் செயன்முறை மற்றும் அபுதாபி கலந்துரையாடலுக்கான செயலகம் மற்றும் ஆலோசனைக் குழுவைத் தாபிப்பது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான துரித செயல் திட்டத்தின் கீழ் விடுதிகளை நிர்மாணித்தல் (விடய இல. 61)

பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான துரித செயல் திட்டத்தின் கீழ் மேலும் 9,600 மாணவ, மாணவியருக்கு விடுதி வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புதிய 24 விடுதிகளை, 1,430 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் 2016ம் ஆண்டுக்குள் ஆரம்பிப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. பல்கலைக்கழகங்களில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்த வேலையை வழங்குதல் (விடய இல. 62)

களனி, கிழக்கு, றுஹுணு மற்றும் இலங்கை பிக்குமார்களுக்கான பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்த வேலையை அமைச்சரவையினால் நியிமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் ஒப்படைப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. கிளிநொச்சி மாவட்டத்தில் களஞ்சியசாலைத் தொகுதியை நிர்மாணித்தல் (விடய இல. 63)

கிளிநொச்சி மாவட்டத்தில் களஞ்சியசாலைத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியிமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. வரவு செலவு திட்டம் 2017 - இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதம் (விடய இல. 71)

வரவு செலவு திட்டம் 2017 - இரண்டாம் வாசிப்பு 2016-11-10ம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதம் ஆகியவை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 26 நாட்கள் தொடர்ந்து இடம்பெற இருப்பதாகவும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொள்ளப்பட்டது.