01. அரச நிதியங்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் விரயங்களைத் அதிகுறைவாக்குதல் (விடய இல. 06)

அரச நிதியினை செலவிடும் போது சிக்கனமாகவும், பொறுப்புடனும் செயற்படுத்துதல் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் அரச உத்தியோகத்தர்களினதும் பொறுப்பாகும். அதனடிப்படையில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முற்றிலும் மாற்றமான முறையில் விசேடமாக மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டு தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களை மேற் கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே அரச நிதியங்களைப் பயன்படுத்தும் போது குறிப்பாக வெளிநாட்டு நிதிகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபடுவது தொடர்பான பொருத்தமான முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குத்தகை அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ள வர்த்தகக் காணிகளுக்கு வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 12)
இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தக வியாபாரங்களுக்கு அரச காணிக் கட்டளைச் சட்ட மூலத்தின் விதி முறைகளுக்கு அமைய 30 வருட காலப் பகுதிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. காணி அடைந்துள்ள விருத்தி மற்றும் ஏனைய வசதிகள் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு சந்தைப் பெறுமதி கணிக்கப்படுவதுடன், அக் கணிப்பீட்டுத் தொகையின் 4% க்குச் சமனான தொகை வருடாந்தம் வரித் தொகையாக அறவிடப்படும். அவ்வாறே அவ்வரித் தொகை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை 50% இனால் அதிகரிக்கப்படும். வர்த்தக வியாபாரங்களுக்கென அரச காணிகளைக் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுக்கையில் அறவிடப்படுகின்ற வரித் தொகை உயரளவில் காணப்படுவதால் மகாவலி பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு வர்த்தகக் காணிகளுக்கு வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஒரு கொள்கை முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. புகையிரதத் துறை அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 318 மில்லியன் ஐ.அ.டொலர் கடன் திட்டம் (விடய இல. 14)
இலங்கையின் புகையிரத துறையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் பாரியளவிலான உதவிகளை வழங்கி வருகின்றது. 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் அவர்களினால் இலங்கை புகையிரத சேவையினை விருத்தி செய்வதற்காக 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார். நாட்டின் வடக்கு புகையிரத சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலும், அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலும் புகையிரத சமிஞ்ஞை முறையினை விருத்தி செய்வதற்கும், புகையிரத என்ஜின் மற்றும் பெட்டிகள் கொள்வனவின் கீழ், குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகளுடன் 6 டீசல் பல் கூறடங்கிய அலகுகள், 30 எண்ணெய் தாங்கிப் பெட்டிகள், 160 பயணிகள் சொகுசுப் பெட்டிகள், 10 உந்துப் பொறிகள் மற்றும் 20 கொள்கலன்கள் சுமை தாங்கிகள் என்பனவும் கொள்வனவு செய்வதற்கும் குறித்த கடன் தொகையினை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இந்தியா ஏற்றுமதி - இறக்குமதி வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தேசிய கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. வன சீவராசிகள் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுதல் (விடய இல. 15)
வன யானை – மனித மோதலினை குறைக்கும் நோக்கில் மத்திய மற்றும் நடுத்தர நடவடிக்கைகள் பல ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அவற்றின் மூலம் பலன்களை பெற்றுக் கொள்வதற்கு அதிக காலம் எடுக்கும். அதனால் குறித்த காலப்பகுதியில் யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான தேவை எழுந்துள்ளது. அதற்கான குறுகிய கால நடவடிக்கை ஒன்றாக குறித்த மோதல் இடம்பெற்றவுடன் அவ்விடத்துக்கு விரைந்து சென்று அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வாறான மோதல் இடம்பெறும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் வன சீவராசிகள் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுவதற்கு வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களின் மூலம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வன சீவராசிகள் கட்டுப்பாட்டு அலகுகள் ஐந்தினை துரித கதியில் ஸ்தாபிப்பதற்கும், அவற்றின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களில் மீண்டும் மீளாய்வு செய்வதற்கும் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வேலை பார்க்கும் வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ சுமேதா ஜீ. ஜயசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. சுயாதீனமான விமான விபத்து விசாரணை செயலகமொன்றினை நிறுவுதல் (விடய இல. 18)
இலங்கையும் சர்வதேச சிவில் விமானசேவைகள் அமைப்பின் அங்கத்தவராக இருப்பதனால் அதிகார எல்லைக்குள் ஏற்படுகின்ற விமன விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுயாதீன அமைப்பொன்றை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த சுயாதீன அமைப்பொன்றாக “இலங்கை விமான விபத்து விசாரணை செயலகமொன்றினை” ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
06. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதியை சீதுவை பகுதியில் நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளல் (விடய இல. 20)
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோக்கத்தர் குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதியொன்றை அமைப்பதன் முதற் கட்டமாக 100,000 வர்க்க அடிப்பரப்பினை கொண்ட கட்டிட தொகுதியொன்றினை நிறுவுவது தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. விஞ்ஞானம், தொழில்நுட்பவியல், எந்திரவியல் மற்றும் எண்கணிதவியல் (STEM) ) கற்கையை பாடசாலைகளில் மேம்படுத்துவதற்கும், பிரபல்யப்படுத்துவதற்குமான கருத்திட்டம் (விடய இல. 22)
காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு விஞ்ஞானம், தொழில்நுட்பவியல், எந்திரவியல் மற்றும் எண்கணிதவியல் (STEM) கற்கையை பாடசாலைகளில் மேம்படுத்துவதற்கும், பிரபல்யப்படுத்துவதற்குமான கருத்திட்டம் ஒன்றை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கும் நோக்கில் விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேம ஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இரத்தினபுரி மாவட்ட பெரிய வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக்கொண்ட சிறுவர் வாட்டு தொகுதியொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 26)
இரத்தினபுரி மாவட்ட பெரிய வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட சிறுவர் வாட்டு தொகுதியொன்றை, 116 மேலதிக கட்டில்களுடன், தனவந்தர்களின் கொடைகளினை பயன்படுத்தி 70 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் நிர்மாணிக்கவும், மேலதிக வசதிகளை அரசாங்கத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கவும் சுகாதார, போசனை மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் வைத்திய ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. பயிற்றுவித்தல், உறுதிப்படுத்தல், மாலுமிகளை பாதுகாத்தல் (STCW 1978 – திருத்தங்கள்) விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளல் (விடய இல. 25)
சர்வதேச சமுத்திர அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் மற்றும் தற்கால தேவைகளுக்கு உகந்த விதத்தில் பயிற்றுவித்தல், உறுதிப்படுத்தல், மாலுமிகளை பாதுகாத்தல் (STCW 1978 – திருத்தங்கள்) விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இலங்கை ஜேர்மனி பயிற்சி நிறுவகம் (SLGTI), கிளிநொச்சி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள திறன் மேம்படுத்தல் நிலையங்கள் (Satellite Centers) ஆகியனவற்றில் ஆங்கில மொழி பயிற்சி வழங்கலினை அமுலாக்கம் செய்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 31)
இலங்கை ஜேர்மனி பயிற்சி நிறுவகம் (SLGTI), கிளிநொச்சி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள திறன் மேம்படுத்தல் நிலையங்கள் (Satellite Centers) ஆகியனவற்றில் ஆங்கில மொழி பயிற்சி வழங்கலினை அமுலாக்கம் செய்வதற்கு ஜேர்மனியின் ஜொஹான்ஸ் குடென்பேர்க் - மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனி சர்வதேச கூட்டுத்தாபனம் ஆகியவை முன்வந்துள்ளது. எனவே அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. மாகந்துர (மேற்கு) கைத்தொழில் பேட்டையில் தொழில் ஆரம்பிப்போர் (Inclubator) மற்றும் தொழில்நுட்ப இடமாற்ற நிலையத்தினைத் தாபித்தல் (விடய இல. 32)
46.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் மாகந்துர (மேற்கு) கைத்தொழில் பேட்டையில் தொழில் ஆரம்பிப்போர் (Inclubator) மற்றும் தொழில்நுட்ப இடமாற்ற நிலையத்தினைத் தாபிப்பதற்கு இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுக்கு அடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. கம்பொளையில் பிரேரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதி மற்றும் கிளைவழி அமைத்தல் (விடய இல. 34)
கம்பளையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்று வீதியொன்றை அமைப்பதற்கும், அதற்கு அண்டிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றை அமைப்பதற்கும், அதற்காக வேண்டி புகையிரத திணைக்களத்துக்கு உரித்தான காணி தொகுதியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உடைமையாக்கி கொள்வதற்கும் பாரிய நகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. ஆசிய பிராந்திய உற்பத்தித்திறன் அமைப்பின் ஆசிய உணவு மற்றும் விவசாய தொழில் முயற்சி தொடர்பான மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 37)

“விவசாயத்தொழில் முயற்சியினதும் மற்றும் உணவுக் கைத்தொழில் வியாபார நடவடிக்கைகளினதும் நிலைபெறுதகு தன்மை உயர்ந்த உற்பத்தித்திறனுக்கான புதிய கண்டுபிடிப்புகள்” என்ற தொனிப்பொருளினூடாக ஆசிய பிராந்திய உணவு மற்றும் விவசாயத் தொழில் முயற்சி பற்றிய மாநாட்டை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி இலங்கை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான பொறுப்புப்பணியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, இலங்கை அரசாங்க பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனியை மீள் ஒழுங்கமைக்க முன்னர், சம்பளம் மற்றும் நியாயாதிக்க கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான எற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 39)
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, இலங்கை அரசாங்க பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனியை மீள் ஒழுங்கமைக்க முன்னர், சம்பளம் மற்றும் நியாயாதிக்க கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான நிதியினை திறைசேரியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹசிம் அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் சர்வதேச ஆண்டு - 1987 (விடய இல. 40)
முன்னைய பிரதமர் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் கடமையாற்றி மறைந்த ரணசிங்க பிரேமதாச அவர்களினால் அயராத முயற்சியினால் ஐக்கிய நாடுகள் சபையின் 35 ஆவது கூட்டத்தொடரில் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் சர்வதேச ஆண்டாக 1987 ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் படி அதன் 30 ஆண்டு பூர்த்தி 2017 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கப்பட உள்ளது. அதனை கொண்டாடும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றை நிர்மாணிக்கும் பணியினை ஆரம்பிக்கவும், மனித குடியிருப்பு வேலைத்திட்டங்கள் சிலவற்றை திறப்பதற்கும் மற்றும் அதனை நினைவு கூறும் வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16. பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையினை நிறுவுதல் (விடய இல. 47)
பல்வேறு நன்மைகளை பயக்கும் வகையில் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நிறுவுவதற்கான சட்ட மூலம் ஒன்றினை மசோதா ஒன்றினை சட்டபூர்வ ஆவணமாக வடிவமைப்பதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17. இலங்கை அரசாங்கம் மற்றும் கனடா அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தல் கருத்திட்டம் (NLEAP) தொடர்பில் கைசாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 48)
தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தல் கருத்திட்டத்தினை (NLEAP) கனடா அரசாங்கத்தின் மூலம் வழங்கப்பட உள்ள 11.2 மில்லியன் கனேடிய டொலரினை பயன்படுத்தி முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் கனடா அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
18. களுத்துறை மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிட நிர்மாணிப்பு (விடய இல. 50)
பல்வேறு தேவைகளினை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 110.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் களுத்துறை மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிட நிர்மாணிப்பது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19. களுத்துறை பிரதேச செயலகத்திற்கான புதிய நான்கு மாடி கட்டிட நிர்மாணிப்பு (விடய இல. 50)
பல்வேறு தேவைகளினை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 180 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் களுத்துறை பிரதேச செயலகத்திற்கான புதிய நான்கு மாடி கட்டிடத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
20. இலங்கை மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் வெளிநாடு அலுவல்கள் அமைச்சிற்கிடையில் இருதரப்பு அரசியல் கலந்துரையாடல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 56)
இலங்கை மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் வெளிநாடு அலுவல்கள் அமைச்சிற்கிடையில் இருதரப்பு அரசியல் கலந்துரையாடல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-4 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சு மட்டத்திலான கலந்துரையாடலின் போது கைச்சாத்திட வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
21. அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு திறைசேரியிடம் இருந்து கடனினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 58)
அரச நிறுவனங்களின் அதிகளவிலான ஒப்பந்தங்களினை அரச பொறியிலாளர் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளதுடன், அவற்றினை மேற்கொண்டு செல்வதற்கான நிதி வசதிகளினை கடன் பெற்றுக் கொள்வதற்காக பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழுவின் சிபாரிசின் பெயரில் திறைசேரியின் முறியொன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
22. 2016 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட பலத்த மழையினால் ஏற்பட்ட மண் சரிவினால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளில் இருந்து அவர்களை நன்னிலைமைக்கு கொண்டுவருவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் (விடய இல. 61)
2016 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட பலத்த மழையினால் ஏற்பட்ட மண் சரிவினால் 151 பேர் உயிரிழந்துடன், 9,620 குடும்பங்களை சேர்ந்த 34,833பேர் பாதிக்கப்பட்டனர். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 2016-06-01 ஆம் திகதி இடம்பெற்ற அவசர மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த மக்களினை வாழ்க்கையினை துரித கதியில் நன்னிலைமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாதியளவில் பாதிக்கப்பட்ட 1,845 வீடுகள் தொடர்பில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், முழுமையாக பாதிக்கப்பட்ட 230 வீடுகள் உட்பட தேசிய கட்டிட பரிசீலனை அமைப்பின் மூலம் மீள் குடியமர்த்த சிபார்சு செய்யப்பட்டுள்ள 1,682 வீடுகளினை 2,018.4 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் நிர்மாணிப்பதற்கும், தமது தனிப்பட்ட காணிகளில் வீடுகளை கட்ட முனையும் நபர்களுக்கு 400,000 வீதம் 500 பேருக்கு 200 மில்லியன் ரூபாவினை வழங்கவும், மண் சரிவுக்கு இழக்கான பகுதிகளை பாதுகாப்பான வலயமாக பிரகடனப்படுத்துவதற்கும், வீடுகளை அமைப்பதற்கான பாதுகாப்பான முறைகளுக்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான பொறுப்பினை தேசிய கட்டிட பரிசீலனை அமைப்பின் சுமத்துவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.