01. தேர்தல் ஆணைக்குழுவிற்காக நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்திய மத்திய தகவல் முகாமைத்துவ கட்டமைப்பொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 06)
வாக்காளர்களின் விபரங்களை ஒன்று திரட்டும் முறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய தரவுகள் முகாமைத்துவ கட்டமைப்பொன்றை பயன்படுத்துவது பொருத்தம் என இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமான இடங்களில் பதிய வேண்டிய நிலையினை இல்லாதொழித்தல், மாவட்ட மட்டத்தில் வெவ்வேறு தரவு களஞ்சியங்களை முன்னெடுத்துச் செல்வதால் ஏற்படும் செலவீனங்களை குறைத்தல், தரவுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் ஆகிய காரணங்களை அடைந்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தேர்தல் ஆணைக்குழுவிற்காக 31.8 மில்லியன் ரூபா செலவில் நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்திய மத்திய தகவல் முகாமைத்துவ கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கும், அதற்கு தேவையான நிதியினை 2016 ஆம் ஆண்டில் பெற்றுக் கொடுக்கவும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. அநுராதபுரம் வடக்கு நீர்ப்பாசன வேலைத்திட்டம் (கட்டம் 2) (விடய இல. 13)
ஆரோக்கியமற்ற நிலக்கீழ் நீரினை பயன்படுத்தும் பதவிய, கெபதிகொல்லாவ, ஹொரோபொதனை மற்றும் கஹடகஸ்திலிய ஆகிய அநுராதபுர மாவட்டத்தின் வட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுக ஆரோக்கியமுள்ள குடிநீரினை பெற்றுக் கொடுப்பதே அநுராதபுரம் வடக்கு நீர்ப்பாசன வேலைத்திட்டத்தின் கட்டம் 2இன் நோக்கமாகும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்திடம் (JICA) 32,169 மில்லியன் ரூபாய்கள் கடன் வசதியினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. உள்ளுராட்சி மன்றங்களினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்தல் (விடய இல. 14)
உள்ளுராட்சி மன்றங்களினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை மேலதிக சலுகை கடன் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க முன்வந்துள்ளது. எனவே உள்ளுராட்சி மன்றங்களினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான குறித்த நிதியினை ஆசிய அபிவிருத்தியிடம் இருந்து பெற்று கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. 2017 வரவு செலவு திட்டத்தினை தயாரித்தல் (விடய இல. 20)
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நடுத்தர இலக்கான பத்து இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கல், வருமானத்தை அதிகரித்தல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் ஆகிய இலக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டிற்குள் அடைந்து கொள்ள வேண்டிய நிலையான அபிவிருத்தி இலக்குகள் 17 இனை அடைந்து கொள்வதற்கு கவனத்தை செலுத்தி, அரச செலவீனங்களின் செயற்றிறனை அடிப்படையாகக் கொண்ட “செயற்றிறன் மிகு கலாச்சாரம்” ஒன்றை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவு முறையின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி மொத்த தலா தேசிய உற்பத்தியினை 2020 ஆம் ஆண்டளவில் 3.5வீதமான மட்டத்திலும், அரச கடன் தொகையினை 68 வீதமாகவும் கொண்டு வருதல் பொருளாதார இலக்காகும். அந்த இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் 2017 ஆம் ஆண்டில் 6% பொருளாதார விருத்தி வேகத்தை அடைந்து கொள்வதற்கும், மொத்த தலா தேசிய உற்பத்தியில் 5% இனை அரச முதலீடுகளின் மூலம் உறுதிசெய்து கொண்டு தல தேசிய உற்பத்தியில் 4.7% இனை வரவு செலவு திட்ட தட்டுப்பாடு ஏற்படும் விதத்தில் 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயாரிக்க நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. ஆணமடுவவிலுள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியினை மீள் இட அமைவு செய்தலும் தரமுயர்த்துதலும் (விடய இல. 21)
ஆணமடுவ தொழில்நுட்பவியல் கல்லூரியினை சிலாபம் - நவகத்தேகம பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற வடக்காருவ பிரதேசத்தில் அமைந்துள்ள 4 ஏக்கர் இடப்பகுதியில் தேவையான அனைத்து வசதிகளுடன் மீள இட அமைவு செய்வதற்கு திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. கரைவலை மீன்பிடிக் கைத்தொழிலை முறையாகப் பேணல் (விடய இல. 24)
1950 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மீன்பிடிக் கைத்தொழிலாக கரைவலை கைத்தொழில் அமைகின்றது. இது தேசிய மீன் உற்பத்திக்கு 40% பங்களிப்பினை வழங்குகின்றது. பல்வேறு காரணங்களினால் கரைவலை மீன்பிடி கடந்த 06 தசாப்த காலப்பிரிவில் பெரிதும் குறைவினை காட்டுகின்றது. குறித்த மீன்பிடி முறையில் பின்பற்றப்படும் சில நடைமுறைகளினால் அம்முறை சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முறையாகவும் கணிக்கப்படுகின்றது. குறித்த மீன்பிடி தொடர்பான சட்டத்திட்டங்கள் 1984 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததாகும். எனவே காலத்தின் தேவைக்கிணங்க அவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் குறித்த சட்டத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஆழமான கற்கையொன்றினை மேற்கொண்டு நிலையான கரைவலை மீன்பிடி துறையினை முன்னெடுப்பதற்கு சிபார்சுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றினை முன்வைப்பதற்காக துறைசார்ந்தோரை உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அரச வெசாக் உற்சவம் - 2017 (விடய இல. 25)
சம்புத்த சாசனத்தில் ஸ்ரீ புத்த வருடம் 2561 ஆக கொள்ளப்படும் 2017 ஆம் ஆண்டின் அரச வெசாக் உற்சவத்தினை கேகாலை மாவட்டத்தின், வட்டாரம் ஸ்ரீ அரஹன் மலியதேவ ரஜமஹ விகாரையில் நடாத்துவதற்கும், 2017 ஆம் ஆண்டின் மே மாத வெசாக போயா தினத்துடன் ஒட்டியதாக காணப்படும் வாரத்தை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் புத்தசாசன அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. பாரம்பரிய கண்டிய நடனம் மற்றும் கலாசார உரிமைகளைப் பேணுவதன் பொருட்டு ஸ்ரீ தலதா மாளிகையுடன் இணைந்ததாக பல்லேகலையில் கலைப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்தல் (விடய இல. 26)
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமை அவர்களின் யோசனைகளுக்கு அமைவாக பாரம்பரிய கண்டிய நடனம் மற்றும் கலாசார உரிமைகளைப் பேணுவதன் பொருட்டு ஸ்ரீ தலதா மாளிகையுடன் இணைந்ததாக பல்லேகலையில் கலைப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு புத்தசாசன அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. பயிற்றுவித்தல், உறுதிப்படுத்தல், மாலுமிகளை பாதுகாத்தல் (STCW 1978 – திருத்தங்கள்) விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளல் (விடய இல. 25)
சர்வதேச சமுத்திர அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் மற்றும் தற்கால தேவைகளுக்கு உகந்த விதத்தில் பயிற்றுவித்தல், உறுதிப்படுத்தல், மாலுமிகளை பாதுகாத்தல் (STCW 1978 – திருத்தங்கள்) விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. நலன்புரி முகாம்களிலுள்ள அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் மீள்குடியேற்றல் (விடய இல. 29)
நலன்புரி முகாம்களிலுள்ள அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் மீள்குடியேற்றுவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நலன்புரி முகாம்களிலுள்ள அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் மீள்குடியேற்றுவதற்காக 971 மில்லியன் ரூபா செலவில் நிலையான வீடுகளை துரித கதியில் நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்குமிட கட்டிடமொன்றை நிருமாணித்தல் (விடய இல. 30)
நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் சேவைக்கு பல்வேறு பங்களிப்பை செய்து வருகின்ற களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு 199.69 மில்லியன் ரூபா செலவில் புதிய தங்குமிட கட்டிடமொன்றை நிருமாணிப்பதற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கை தொழில்நுட்ப, தொழில்கல்வி மற்றும் பயிற்சி துறைசார் பயிற்சி மத்திய நிலைய முகாமையாளர்களிற்காக சிங்கப்பூரில் நடாத்தப்படவுள்ள தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் (விடய இல. 33)
இலங்கை தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறைசார் பயிற்சி மத்திய நிலைய முகாமையாளர்களிற்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை நடாத்துவது தொடர்பாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றான ITE கல்வி சேவைகள் நிறுவனத்திற்கும் இடையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிங்கப்பூர் விஜயத்தின் போது மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. பெருந்தோட்டத்துறை சேவையாளர்களுக்காக வேண்டி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மாதாந்த 2,500 ரூபா வேதன உயர்வினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 37)
பெருந்தோட்டத்துறை சேவையாளர்களுக்கு மாதாந்த 2,500 வேதன உயர்வை வழங்குவதற்கு, சந்தையில் தேயிலையின் விலை குறைந்துள்ளமையினால் குறித்த பிரதேசங்களில் காணப்படுகின்ற பெருந்தோட்டத்துறை கம்பனிகளுக்கு பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. இந்நிலையினை கருத்திற் கொண்டு குறித்த கம்பனிகளுக்கு மாதாந்த வேதன உயர்வை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவ தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரதேச பெருந்தோட்டத்துறை கம்பனிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் ஊடாக அரச வங்கிகளின் வழியாக கடன் உதவிகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் திறைசேரியின் மூலம் ஒப்புதலை வழங்க நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனத்திற் கொண்டது.
14. உத்தேச போக்குவரத்துக் கருத்திட்ட முன்னேற்பாட்டு வசதிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து தொழில்நுட்ப உதவிக் கடன் (விடய இல. 38)
உத்தேச போக்குவரத்துக் கருத்திட்ட முன்னேற்பாட்டு வசதியினை மேம்படுத்தும் நோக்கில் 24.42 மில்லியன் அமெரிக்க டொலர் தொழில்நுட்ப உதவிக் கடன் தொகையொன்றினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. களனிப் பாலத்திலிருந்து ராஜகிரிய வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் உயர்த்தப்பட்ட வீதியின் 3 ஆவது கட்டத்திற்காக கடன் உதவியொன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 37)
களனிப் பாலத்திலிருந்து ராஜகிரிய வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் உயர்த்தப்பட்ட வீதியின் 3 ஆவது கட்டத்திற்காக கடன் உதவியொன்றினை மிட்சுபி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார முகாமைத்துவ தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16. கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவில் 2015-06-05 ஆம் திகதி சாலாவ இராணுவ ஆயத களஞசியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல் (விடய இல. 41)
கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவில் 2015-06-05 ஆம் திகதி சாலாவ இராணுவ ஆயத களஞசியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்புக்கு உள்ளான வீடுகள் தொடர்பில் அரச மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்சன யாப்பா அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.