01.கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்காக கட்டிட தொகுதி ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல 08)

கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடம் 06 வகுப்புக்களை கொண்டு 2004 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த பீடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் தற்போது ஐந்து தொகுதி மாணவர்கள் மருத்துவமானிப் பட்டத்தையும் சத்திர சிகிச்சைக் கற்கைநெறிப் பட்டத்தையும் பயில்கின்ற அதே வேளையில், நான்கு தொகுதி மாணவர்கள் விஞ்ஞான தாதியமைப் பட்டக் கற்கை நெறியையும் பயில்கின்றனர்.


தற்போதைய மாணவர் தொகை சுமார் 425 ஆகும். இந்த பீடமானது, தற்போது முன்னைய நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து எடுக்கப்பட்ட தற்காலிகமான கட்டடமொன்றில் செயற்பட்டு வருகின்றது. எனவே குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்காக பொருத்தமான சூழல் ஒன்றை வழங்கும் பொருட்டு, கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கருத்திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.

இந்தக் கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு 47.3 ஐக்கிய அமெரிக்க டொலர் (6,617.5 மில்லியன் ரூபா) ஆகும். குறித்த தொகையில் 34 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியினை அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியம் வழங்க முன்வந்துள்ளது. அது தொடர்பான குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) எம்பிலிப்பிட்டி சாலை அமைந்துள்ள இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான இரண்டு காணித் துண்டுகளை இ.போ.ச விற்கு சாட்டுதல் (விடய இல. 10)

எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் பயணங்களை மேற்கொள்ளும் போது பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் 1975 ஆம் ஆண்டு இ.போ.ச எம்பிலிபிட்டி சாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த சாலை அமைந்துள்ள காணி 1981 ஆம் ஆண்டிலிருந்து மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வரப்பட்ட போதும் ஒழுங்கு முறையான குத்தகை ஒப்பந்தம் எதுவும் கைச்சாதிடப்படவில்லை.

எனவே குறித்த சாலை அமைந்துள்ள காணித்துண்டுகள் இரண்டினையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சாட்டுவதற்கு போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03.தேசிய ஆராய்ச்சி மன்றத்தினை ஒரு நியதிச்சட்டமுறை அமைப்பாக தாபித்தல் (விடய இல. 15)

உச்ச பயன்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியலில் முன்னோக்கிய ஒரு சமூகத்தை கொண்ட அறிவுத்திறன் மிக ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் திட்டமிடல், கூட்டிணைவு மற்றும் ஆராய்ச்சிகளில் உதவுதல் போன்ற செயற்பாடுகளுக்கு அரசிற்கு துணையாக கௌரவ ஜனாதிபதி அவர்களினால் ஒரு விசேட முகவராண்மையாக 2007 ஜுலை மாதம் தேசிய ஆராய்ச்சி மன்றம் தாபிக்கப்பட்டது.

குறித்த மன்றத்தின் செயற்பாட்டை வினைத்திறனாக மாற்றும் பொருட்டு பாராளுமன்ற சட்ட மூலம் ஒன்றின் மூலம் நியதிச்சட்டமுறை அமைப்பாக தேசிய ஆராய்ச்சி மன்றத்தினை தாபிப்பதற்கு தேவையான சட்ட வரைபுகளை மேற்கொள்ள விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றம் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சுகாதார துறையில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய அபிவிருத்தி வேலைத்திட்டம் (விடய இல. 16)

சகல பிரஜைகளுக்கும் அவர்கள் செலவிடும் செலவினைக் கருதாது இலவச சுகாதார சேவை மற்றும் சிறந்த நோய் நிவாரண சேவையையும் பராமரிப்பு சேவையையும் வழங்கும் வலுவான பொது சுகாதார சேவை தொடர்பாடலை சமூக சேவை நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்வதனூடாக கிடைக்கும் சுகாதார பெறுபேறுகள் வெற்றி கண்டுள்ளது.

பொது நிதியத்திலிருந்து கிட்டத்தட்ட 100 சதவீத நோய் தடுப்பு சேவை, கிட்டத்தட்ட 90 – 95 சதவீத வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் கவனிப்பு மற்றும் 50 சதவீத வெளி நோயாளர் சிகிச்சை சேவை என்பவை செயற்படுத்தப்படுவதுடன், இவை அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் சுகாதார சேவை நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கமைய சுகாதார துறையை மேம்படுத்தும் தேவை மக்கள் ஒன்றுகூடலின் போது கூட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமூக நலன்களை திட்டமிடுவதற்கு கூடிய முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவ்வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம்) தொகைக்கு மேலதிகமாக 2016 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒதுக்கீட்டின் மூலம் சுகாதார துறையில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ள சிகிச்சை சேவை (திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை, பல், மகப்பேற்று, பிரசவ மற்றும் சிறுவர் நோய்கள்), ஆய்வு கூட தொடர்பாடல், வைத்தியசாலை உதவி சேவை, மருத்தவ நிபுணர்களின் சேவை மற்றும் மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி என்பவற்றை மேலும் மேம்படுத்துடுத்துவதற்கு தேவையான திட்டங்களை முன்னெடுக்க சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் மற்றும் எகிப்து நாட்டின் கமத்தொழில் மற்றும் காணிகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கும் இடையில் விவசாயம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளில் கூட்டுறவுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 23)

நைல் நதியை அண்மித்து மானிடக் குடியேற்றங்கள் தோன்றிய வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள எகிப்து நாடானது வெப்ப மற்றும் இடைவெப்ப காலநிலை வலயங்களில் உள்ளடங்குகின்ற நாடுகளில் ஒரு நாடாகும். பயிரிடக் கூடிய காணிகள் மிகக் குறைந்த அளவில் காணப்பட்டாலும், விவசாயத் துறை அந்த நாட்டின் முக்கிய ஒரு அங்கமாக மாறியுள்ளது.

வாழ்வாதாரங்களையும் மற்றும் தொழில்களையும் எடுத்து நோக்குகின்ற போது விவசாயத் துறை அந்த நாட்டில் முக்கிய ஒரு இடத்தை வகிக்கின்றது. நவீனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் விவசாயத்தை நவீனமயப்படுத்தல், விவசாய அபிவிருத்தி போன்ற விடயங்களுக்கு உரிய விதத்தில் பயண்படுவதால் அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்திற்கு விவசாயத் துறை கணிசமான அளவு பங்களிப்புச் செய்கின்றது. ஆகையால், அந்த நாட்டின் நவீனத் தொழில்நுட்பங்களையும், அறிவையும் குறிப்பாக எமது நாட்டின் உலர் வலய விவசாய அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தக் கூடிய சாத்தியம் நிறையவே காணப்படுகின்றது. எனவே பயிர் உற்பத்தி, உணவு தயாரித்தல், விளம்பரப்படுத்தல், விவசாய உற்பத்திகள் விற்பனை, விவசாய இயந்திர உபகரணங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அனுபவம் ஆகிய இத்துறை சார்ந்த தகவல்களையும் அநுபவங்களையும் பறிமாற்றிக் கொள்ளும் நோக்குடன் இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் மற்றும் எகிப்து நாட்டின் கமத்தொழில் மற்றும் காணிகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திஸாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்ற உக்கிர குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக அந்தரகஸ்யாய நிலக்கீழ் நீர் தாங்கியிலிருந்து கொன்னொருவ வரை நீர்க் குழாய்க் கட்டமைப்பை பொருத்தும் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்தல் (விடய இல. 26)

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதகிரிய, கெலியபுற, கெடென்வெவ, கொன்னொருவ, அந்தரவெவ, குடா இதிவெவ மற்றும் ஹெடில்ல ஆகிய பிரதேசத்தில் காணப்படும் 3000 குடும்பங்களில் வசிக்கும் 12,000 மக்கள் காணப்படும் உக்கிர குடிநீர் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை நிவர்த்திக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது கட்ட திட்டத்தின் மூலம் 250 நீர் இணைப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. மேலும்,214.93 மில்லியன் ரூபா செலவில் அந்தரகஸ்யாய நிலக்கீழ் நீர் தாங்கியிலிருந்து மேலும் 2,818 நீர் இணைப்புக்களை பெற்றுக் கொடுப்பதனால் 11,272 பேர் நன்மையடையும் படி குறித்த அதன் இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


07. மகாவலி நீர் பாதுகாப்பு மற்றும் முதலீட்டுத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்குக் கருத்திட்ட நிகழ்ச்சிகளை முகாமைத்துவப்படுத்துதல், திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வை ஆலோசனை தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குதல்(விடய இல. 33)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் நீர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் பின்வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. 65 கிலோ மீட்டர் நீளமான மேல் எலஹெர கால்வாய்க் கருத்திட்டத்தின் மூலம் மகாவலி நீரை களுகங்கை மற்றும் மொரகஹகந்தை நீர்த்தேக்கத்திலிருந்து பகிர்தலிக்கும் பணிகள் வட மத்திய மாகாண கால்வாய்க் கருத்திட்டத்தின் மூலம் மேற் கொள்ளல்

2.வடமேல் மாகாணத்தின் நீர்ப் பற்றாக்குறையை வடக்கு உலர் வலயத்திலுள்ள ஹக்குவட்டுனா ஓயா பள்ளத்தாக்குக்கும், மேல் மீ ஓயா பள்ளத்தாக்குக்கும், தம்புலு ஓயா மற்றும் நாலந்தா நீர்த்தேக்கத்திலுள்ள மேலதிக மகாவலி நீரைக் கால்வாய் வழிகள் மற்றும் நீரைக் களஞ்சியப்படுத்தக்கூடிய வாவிகளை நிர்மாணிப்பதன் மூலம் வழங்குவதற்கு வட மேல் கால்வாய்க் கருத்திட்டத்தின் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

3.மகாவலி ஆற்றுக்குக் குறுக்காக மினிப்பேயில் தற்சமயமுள்ள அணைக்கட்டின் உயரத்தை மேலுயர்த்துவதற்கும், 74 கிலோ மீட்டர் நீளமான மினிப்பே இடக் கரைப் பிரதான கால்வாயைப் புணர் நிர்மாணித்தல்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை குழுவின் சிபார்சின் பெயரில் இவ் வேலைத்திட்டத்திற்கு உரித்தான திட்ட முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் மேற்பார்வையிடல் ஆகியவற்றிற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை வழங்குவதற்காக வேண்டி மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. தொழில்நுட்ப பாடம் தொடர்பான பட்டத்திற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 35)

தொழில்நுட்ப பாடம் தொடர்பான பட்டப் பாடநெறியை பயிலுவதற்காக 2016 ஆம் ஆண்டில் 1800 மாணவர்களை முதன் முறையாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் கற்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் இலங்கை ராஜரட்ட, கொழும்பு, வயம்ப, றுகுணு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களில் அவசியமான அளவு கட்டிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கிடும் நோக்கில் பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - சப்ரகமுவ மாகாணத்தில் நான்கு சிவில் வேலைகள் ஒப்பந்தப் பொதிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அனுமதியளித்தல் (விடய இல. 36)

கிராமிய பிரதேசங்கள் மற்றம் சமூக பொருளாதார மையங்களுக்கிடையிலான அணுகுகை வழிகளை மேம்படுத்தும் பொருட்டு தொடர்ச்சியாக பல்வேறு கட்டங்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் 1,972 மில்லியன் ரூபா செலவில் கேகாலை மாவட்டத்தில் 75 கிலோ மீட்டர் கிராமிய வீதிகளையும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6,425 மில்லியன் ரூபா செலவில் 255 கிலோ மீட்டர் கிராமிய வீதிகளையும் புனரமைக்கும் ஒப்பந்தத்தின் நான்காம் கட்டத்தை அமைச்சரவையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நிலையியல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. மேற்கு பிராந்திய பாரிய நகர பெருந் திட்டம் (விடய இல. 40)

மேல் மாகாணத்தில் பாரிய நகர பெருந் திட்டத்தினை முன்னெடுப்பதற்காக தகவல்களை சேகரித்தல், அடிப்படை திட்டங்களை வரைதல் மற்றும் சட்டத்திட்டங்களை வரையறுத்தல் போன்ற விடயங்கள் பெருமளவில் முடிவடைந்துள்ளன. குறித்த வேலைத்திட்டத்தினை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி தேவையான ஆலோசனைகளை வழங்கும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களின் சேவையினை மேலும் நான்கு மாதங்களுக்கு பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11. மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரியினை அதிகரித்தல் (விடய இல. 42)

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 03 ஆம் பிரிவின் கீழ் 2015.10.02 ஆந் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி சிகரட், மதுபானம் மற்றும் வெளிநாட்டு மதுபானம் ஆகியவற்றுக்கான வரியினை அதிகரிக்கும் நோக்கில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.