01. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு வலய வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள்/ இராணுவ வீரர்களுக்கு பாடநெறிகள் பயில்வதற்கு வாய்ப்பளித்தல்(விடய இல 07)

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழக சங்கத்தில் அங்கத்தவம் பெற்றுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும்.
ஆபிரிக்க மற்றும் ஆசிய வலய நாடுகளுடன் காணப்பட்ட நட்பு மற்றும் இராஜதந்திரத் தொடர்புகளை அதிகரித்துக் கொள்வதன் பொருட்டு வெளிநாட்டு அதிகாரிகள் / மாணவ அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பட்டப்படிப்புக் கற்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பூட்டான், மாலைதீவு, நேபாளம், வங்களாதேசம், சீனா, ருவாண்டா, நைஜீரியா, சம்பியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள், கெடெட் அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் 81 பேரும் ஏனைய வலயங்களின் 59 மாணவ மாணவிகளும் இங்கு கல்வி கற்கின்றனர்.

இதனடிப்படையில், ஓமான் இராச்சிய ரோயல் ஓமான் கடற்படையின் தொழில்நுட்பவியலாளர்கள் 19 பேர்களையும் கடற்படையின் துணையுடன் பணம் அறவிட்டு பயிற்றுவிப்பதற்கும், இலங்கை ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் பேணிவரும் நட்பு மற்றும் இராஜதந்திரத் தொடர்புகளைப் போன்று மத்திய கிழக்கு நாடுகளுடன் காணப்படும் நட்பு மற்றும் இராஜதந்திரத் தொடர்புகளை விருத்தி செய்து கொள்வதும், இப் பல்கலை சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெறுவதையும் நோக்காக கொண்டு மத்திய கிழக்கு, ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஏனைய வலய நாடுகளுக்கும் இப்பல்கலையில் (பணம் அறவிட்டு) விசேட பாடநெறிகளை எதிர்காலத்தில் நடாத்தவும் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், தென் ஆசிய ஒத்துழைப்பு சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் (SACEP) மற்றும் ஏனைய பாதுகாப்பு சுற்றாடல் சமவாயங்கள், ஒழுங்குமரபுகள் மற்றும் இணக்கப்பாடுகளுக்கு பங்களிப்புத் தொகைகளை செலுத்துதல் (விடய இல. 10)

இலங்கை சுற்றாடல் பேணலுக்குள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்ற வகையில் ரியோ மாநாட்டுக்கு முன்னர் இருந்தே உலக பேணிப்பாதுகாத்தல் சங்கம் போன்ற சர்வதேச பேணிப்பாதுகாத்தல் அமைப்புக்களை இந்நாட்டில் தாபித்து செயற்படுவதற்கான வசதிகளை வழங்கியுள்ளது.

பாதுகாப்பு சுற்றாடல் இணக்கப்பாடுகள், சமவாயங்கள், ஒழுங்கு மரபுகள், நிகழ்ச்சித்திட்டங்கள், ஒத்துழைப்புகள், பிரகடனங்கள் மற்றும் பேணல் சங்கங்களுடன் இராஜதந்திர தொடர்புகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து சுற்றாடல் பேணல் நடவடிக்கைகளின் போது இலங்கையின் நீண்டகால நிலைபேறான அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை உலகளாவிய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டுவதை முன்னிட்டு செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகையுடன் சேர்த்து செலுத்துவதற்கு தேவையான நிதியினை ஒதுக்குவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. மொரகஹகந்தை களுகங்கை பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்துக்கென ஆட்படுத்தப்பட்ட வணக்கஸ்தல இடங்களை மீள் குடியேற்றும் பிரதேசங்களில் நிர்மாணிப்பதற்குக் கருத்திட்டத்தின் மூலம் பொருளியல் நன்கொடைகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 12)

மொரகஹகந்தை களுகங்கை பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்துக்கென நாஉல, லக்கல பல்லேகம மற்றும் மெதிரிகிரியா ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலிருந்து காணிகளை ஆட்படுத்தும் நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ் அபிவிருத்திப் பணிகளின் காரணமாக இப் பிரதேசங்களிலுள்ள 12 விகாரைகளையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஏனைய மத வழிபாட்டுத் தலங்கள் கருத்திட்டப் பிரதேசத்தில் காணப்படவில்லை.

இதனடிப்படையில் ஒரு விகாரைக்கென ரூ. 200,000 பெற்றுக் கொடுக்க பெறப்பட்ட அனுமதியை ஒரு விகாரைக்குப் பெற்றுக் கொடுக்கின்ற பொருளியல் நன்கொடைத் தொகையை ரூ.150,000 ஆன உச்ச அளவுக்கு உட்பட்டதாகத் திருத்தியமைப்பதற்கும் 12 விகாரைகளுக்குச் செலவாகும் ரூ. 18 மில்லியன் ஆன பொருளியல் நன்கொடையை மொரகஹகந்தை – களுகங்கைப் பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. திகன விக்டோரியா / கொத்மலை கருத்திட்டத்தின் மாற்று வணிகக் காணிகளுக்கென கொடைப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 13)

விக்டோரியா நீர்தேக்கக் கருத்திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் காரணமாக வர்த்தக வியாபாரங்களை இழந்தவர்களுக்குப் புதிய அபிவிருத்திப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட கரல்லியத்த, இரஜவெல்ல, குண்டசாலைப் புதிய நகரம், ஹாரகம, குருதெனிய, கொலொன்கஸ்வத்தை, அம்பகொட்டே / அலுத்வத்தை ஆகிய குடியேற்றங்களிலிருந்து மாற்றும் வணிக காணிகளும், கொத்மலை நீர்தேக்கக் கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு காரணமாகப் பழைய சங்கிலி காளம் நகரில் நடாத்திக் கொண்டிருந்த வியாபார இடங்களை இழந்தவர்களுக்கு கொத்மலைப் புதிய நகரில் மாற்று வணிகக் கட்டிடங்களுடன் கூடிய காணிகளும், பொல்கொல்லை நீர்தேக்கக் கருத்திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் காரணமாக வியாபாரங்களை இழந்தவர்களுக்குக் கட்டுகஸ்தோட்டைப் புதிய நகரிலிருந்தும் மாற்றுக் காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வணிகக் காணிகளைப் பெற்றுக் கொடுத்த சட்ட ரீதியான உரிமையுள்ள அனைவருக்கும் அரச காணிச் சட்ட மூலத்தின் கீழ் குத்தகைக்கு வழங்குவதற்குப் பதிலாக விலை உத்தேசிப்புப் பெறுமதியின் கீழ் அறிவிட்டு கொடைப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்குச் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கையில் அவசர முன் வைத்தியசாலைப் பாதுகாப்பு அம்பியூலன்ஸ் சேவையைத் தாபித்தல் (விடய இல. 14)

குறித்த சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு 7.6 மில்லியன் ஐ.அ. டொலர்களை நன் கொடையாக வழங்குவதற்கு பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இதன் படி இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவென கூட்டு கருத்திட்டக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்து M/s GVK EMRI இற்கும் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாதிடுவதற்கும் குறித்த திட்டத்தை மேல் மற்றும் தென் மாகாணங்களில் முதலில் செயற்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணைக் கணித்தல் (விடய இல. 16)

தற்போது தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் கணிப்பிடப்படும் ஒரே நுகர்வோர் விலைச் சுட்டெண் 2006/2007 அடியாண்டாகக் கொண்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணாகும். இது மாதாந்தம் கணிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மாதத்திலும் நடைசி வேலை நாளன்று வெளியிடப்படும். எனினும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மூலம் கொழும்பு மாவட்டத்தின் நகரப் பிரதேச எல்லைக்குள் ஏற்படும் விலை மாற்றங்கள் மாத்திரமே பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தின் மூலம் தேசிய மட்டத்திலான விலைச் சுட்டெண் மற்றும் அதற்கமைவாகப் பண வீக்க வீதத்தைக் கணிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலைச் சுட்டெண் மாதாந்தம் கணிக்கப்படுவதுடன் மாதம் முடிவடைந்து 21 தினங்கள் இடைவெளியில் வெளியிட தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தான நிதியுதவி (விடய இல. 17)

3108 கிலோ மீற்றர் கிராமிய வசதிகளையும் 248 கிலோ மீற்றர் தேசிய வீதிகளையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 906 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 806 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் மிகுதி 106 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்தினாலும் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியிடுவதற்காக ஐக்கிய அமெரிக் டொலர் 200 மில்லியன் பெறுமதியான 03 ஆவது கடனுதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் உடன்பாட்டு ஒப்பந்தமொன்றினை மேற் கொள்வதற்கு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. திறைசேரி உத்தரவாதத்துடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து நிதியுதவிகளுடன் கொழும்புக்கு கிழக்கே உள்ள நகரங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்தின் கட்டம் 11 இனை செயற்படுத்துதல் (விடய இல. 18)

உள்ளூர் வங்கி நிதியினை பாவித்து 39.19 பில்லியன் செலவில் 34 நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்திட்டங்களில் ஒரு திட்டமாகவே கொழும்பு நகருக்கு கிழக்கே அமைந்துள்ள நகரங்களுக்கான நீர் வழங்கல் திட்டமாகும். இதற்காக 1,159 மில்லியன் ரூபாய்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை வங்கிக்கு திறைசேரி உத்தவாதங்களை வழங்க தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. தேசிய பேணுகை தினத்தைக் கொண்டாடுதல் - 2015 (விடய இல. 24)

2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 09 வருடங்களாக தேசிய பேணுகை தினம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இவ்வருடத்தில் தேசிய பேணுகை தினம் “பாதுகாப்பான இலங்கை” எனும் பிரதான தொனிப்பொருளிலும் “ஒருங்கிணைவோம், அனர்த்தங்களை தவிர்ப்போம்” எனும் உப தொனிப் பொருளிலும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் நுடத்தில் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளமையினால், இத்தினத்தை பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடாத்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரயதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. இலங்கை விபத்து மற்றும் அவசர பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தல் (விடய இல. 26)

இலங்கை முழுவதிலும் வியாபித்துள்ள வைத்திய சேவை 1000 இற்கு மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களை நிறுவியுள்ளது. இலங்கையின் அடிப்படை அவசர சிகிச்சை மற்றும் மனக்காயங்களுக்கான பராமரிப்பு வேறு பல வைத்தியசாலைகளைத் தொடர்ந்து 1988 இல் நுவரெலியா தள வைத்தியசாலையில் முதன் முறையாக தாபிக்கப்பட்டது.

அரசாங்க வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் கிட்டத்தட்ட வருடாந்தம் ஆறு மில்லியன் நோயாளர்களில் 80 சத வீதமானோர் அவசர சிகிச்சை நோயாளிகளாவர். எனவே குறித்த பிரிவை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 28 வைத்தியசாலைகளில் ஆறு வருடத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைக்கமைய விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்காக 9,525 மில்லியன் ரூபாய்களை திரட்டிக் கொள்வதற்கும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்னஅவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கான உலக நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 27)

உலகளாவிய ரீதியில் சுகாதாரப் பிரச்சினையாகியுள்ள எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் உலக தலைவர்களின் பங்கேற்புடன் “ எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய நிதியம்” ஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிதியம் ஆரம்பித்த நாள் முதல் இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நோய்கள் பரவக்கூடிய நாடுகளின் அரச நிறுவனங்களுக்கும் வேறு அமைப்புக்களுக்கும் நிதி வசதிகளை வழங்கும் நிறுவனமாக உலகளாவிய நிதியம் செயற்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து இலங்கையில் மலேரியா நோய் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் பதிவாகவில்லை. எனவே தற்போது இலங்கையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளரையும் இனங்காண முடியாது.

அத்துடன் மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய முதலாவது வெப்பமண்டல நாடொன்றாக உலக சுகாதார நிறுவனத்தினால் உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிதியினை உலக நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒப்பந்தமொன்றில் கைச்சாதிடுவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


12. தாய்லாந்து - இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு சமய நிகழ்வுகளை நடாத்துதல் (விடய இல. 31)

இலங்கையும் தாய்லாந்தும் சமய, கலாச்சார மற்றும் வர்த்தக வாணிப துறைகளில் பல நூற்றாண்டுகளாக உறவுகளைப் பேணும் இரு நாடுகளாகும். இத் தொடர்புகள் ஏற்பட்டு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு 60 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனடிப்படையில் புத்தசாசன அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தாய்லாந்திற்கான இலங்கை தூதுவராலயம் என்பன இணைந்து சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சாதாரணத்தை நிலைநாட்டும் செயன்முறையை வலுப்படுத்துவதற்கான புதிய செயற்றிட்டமொன்றை ஆரம்பித்தல் (விடய இல. 32)

நீதிமன்ற முறைமையுடன் மற்றும் அது சர்ந்த ஏனைய நிறுவனங்களில் நீண்ட காலமாக நிலவுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகக் கடந்த தசாப்தத்தினுள் செய்யப்பட்ட கற்கைகள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அப்பிரச்சினைகளுக்காக நீண்ட காலத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் மொத்த நீதிமன்றச் செயற்பாட்டையும் மேவுகின்ற வகையில் அபிவிருத்திச் செயற்றிட்டமொன்றை அமுல்படுத்த நீதி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய கருத்திட்டம் 05 பிரதான பகுதிகளைக் கொண்டது.

அ. நீதிமன்றங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
ஆ. நீதிமன்றச் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்காக வழக்குகளை முகாமைத்துவம் செய்யும் புதிய தொழில்நுட்ப கணினி முறைமையொன்றை அறிமுகம் செய்தல்
இ. சட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆராய்ச்சிகள்
ஈ. நீதி வழங்குதல் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட அதிகாரிகளின் பயிற்சிகள் மற்றும் திறன் விருத்தி செய்தல்
உ. நீதித்துறையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்காக நிரந்தர கற்கைகளில் ஈடுபடுதல் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கக்கூடிய வகையில் நிரந்தர தொழிற்பாட்டுக் குழுவொன்றைத் ஸ்தாபித்தல்.

இச்செயற்றிட்டத்திற்கான மொத்தத் செலவுத் தொகை 14,681 மில்லியன் ரூபாய்களாகும். இந்நிதியினை வெளிநாட்டு நிதியம் ஒன்றிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க திட்டமிடல் வேலைகளை 2016 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ள நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நன் மதிப்பினை வெளிப்படுத்தும் வகையில் மோதல் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும் சந்தேகத்தின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் மேற் கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் (விடய இல. 38)

மோதலின் இறுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னால் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12,000 பேரில் பயங்கரவாத குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையவர்களில் பெரும்பாலானோர் புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் மூலம் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டு விளக்கமறியலில் இருப்பவர்கள், குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டு பாதியளவில் விசாரணை நடாத்தப்பட்டிருக்கும் நபர்கள், இன்னும் விசாரணை நடாத்தப்படாத நபர்கள் மற்றும் குற்றப் பத்திரிகை ஒன்று இதுவரையிலும் ஒப்படைக்கப்படாத நபர்கள் என இன்னும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வகைப்படுத்தலாம்.

புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற் கொண்டு குறித்த நபர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த சிபார்சுகளை அமைச்சரவைக்கு முன் வைக்குமாறு அமைச்சரவையின் மூலம் நீதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

15. ஐ.வீ பாவனைக்கான ஹியுமன் இமியுனோகொபியுலின் கிறாம் 5-6 வயலஸ் 24,000 இனை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரல் (விடய இல. 42)

உலகளாவிய திறந்த விலைமனுக்கோரலின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை மனுக்களில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவினால் தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழுவின் சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு ஐ.வீ பாவனைக்கான ஹியுமன் இமியுனோகொபியுலின் கிறாம் 5-6 வயலஸ் 24,000 இனை கொள்வனவு செய்வதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இலங்கை தேசிய வைத்தியசாவையின் கால் - கை வலிப்பு நோயாளர் பிரிவிற்கு மருத்தவ உபகரணங்கள் வழங்குதல் மற்றம் நிறுவுதல் (விடய இல. 42)

இலங்கை தேசிய வைத்தியசாலையின் கால் -கை வலிப்பு நோயாளர் பிரிவிற்கான நோய் உபகரணங்கள் வழங்குவதற்காக உலகளாவிய திறந்த விலைமனுக்கோரலின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை மனுக்களில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவினால் தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழுவின் சிபார்சினை அடிப்படையாகக் கொண்டு வழங்க சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. பிபிதென பொலன்னறுவை நகர அபிவிருத்தி செயல் திட்டம் (விடய இல. 43)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பெயரில் முன்னெடுக்கப்படும் “பிபிதென பொலன்னறுவை நகர அபிவிருத்தி செயல் திட்டம்”திட்டத்தின் முகாமைத்துவ நிர்வனமாக நகர அபிவிருத்தி அதிகார சபையினை நியமிப்பதற்கும், கட்டமைப்பு மற்றும் மின் பொறிமுறை பொறியியல் சேவைகளுக்கான கணியப் பட்டியல் மற்றும் பொறியியல் மேற்பார்வையிடல் ஆகியனவற்றை மேற்கொள்ள மத்திய பொறியியல் கலந்தாலோசனை பணியகத்திடம் வழங்குவதற்கும் பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 2016 வரவு செலவுத் திட்டத்திற்கான திருத்தப்பட்ட பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 44)
கடந்த அமைச்சரவையின் சந்திப்பின் போது 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நிகழ்ச்சி நிரலில் மேலும் சில திருத்தங்களை மேற் கொள்ள கௌரவ நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1. 2016 ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தினை சமர்ப்பித்தல் (முதலாம் வாசிப்பு) – 2015-10-23
2. வரவு செலவுத்திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு) – 2015-11-20
3. இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் (12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது)
4. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு – 2015-12-05
5. குழுநிலை விவாதம் (2015.12.07 ம் திகதி முதல் 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.)
6. மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு (2015-12-19)

19. வடக்கு மற்றும் கிழக்கு உள்@ராட்சி சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து மேலதிக நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுதல் (விடய இல. 47)

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து மேலதிக நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. 2015 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான திருத்தம் (விடய இல. 47)

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சம்மதிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அப்போது காணப்பட்ட அமைச்சுகளுக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உருவான அமைச்சுகளுக்கும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் குறித்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டத்தினை திருத்துவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. தண்டனை சட்டக் கோவைக்கான திருத்தங்கள் (விடய இல. 49)
குறித்த தண்டனை சட்டக் கோவைக்கான திருத்தங்கள் தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.