01. யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய கட்டுமான பணிக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட முழு செலவினை திருத்தம் செய்தல் (விடய இல 06 மற்றும் 07)

குறித்த 02 பொலிஸ் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியினை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது.
இதன்படி யாழ். பொலிஸ் நிலைய கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 294.8 மில்லியன் ரூபா 484.1 மில்லியன் ரூபாவாகவும், பருத்தித்துறை பொலிஸ் நிலைய கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 119 மில்லியன் ரூபா 176 மில்லியன் ரூபாவாகவும் திருத்தம் செய்து குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பொது மக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவாகார அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. விசர் நாய்க்கடி நோய் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் நாய்களை பதிவு செய்வதற்கான கட்டளைச்சட்டம் ஆகியவற்றினை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தியமைத்தல் (விடய இல. 10)

1893 ஆம் ஆண்டு 07 ஆவது இலக்க விசர் நாய்க்கடி நோய் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் 1901 ஆம் ஆண்டு 25 ஆவது இலக்க நாய்களைப் பதிவு செய்வதற்கான கட்டளைச் சட்டம் ஆகியவற்றினை ஒன்றிணைத்து ஒரு சட்டமாக ஆக்குவதற்கான நகல் சட்டத்தினை தயாரிப்பதற்கு சட்ட வரைபு திணைக்கள அதிகாரிக்கு ஆலோசனை வழங்க அரசாங்க நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு பணிக் கொடையினை பெற்றுக் கொள்வதற்கு தேவையான அரச வங்கிகளில் இருந்து வழங்கப்படும் கடன் வரையறையினை அதிகரித்தல் (விடய இல .11)

ஒவ்வொரு வருடமும் 25,000 அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடையினை கொடுப்பனவை தேவை ஏற்படும் போது அதிகரிப்பதற்கான பூரண அதிகாரத்தை திறைசேரிக்கு வழங்குவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. களுத்துறை நகர மத்திய நிலையம் புனருத்தாபனம் செய்தல் மற்றும் கெலிடோ கடற்கரை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 12)

குறித்த வேலைத்திட்டத்தை செய்து முடிப்பதற்காக வேண்டி 20 ஏக்கர் நிலப்பரப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. முன்னுரிமையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மூலம் குழாய் வழி நீர் சேவை வலையமைப்பை விஸ்தரிப்பதற்கு நீர் வழங்கல் வேலைத்திட்டங்கள் 22 இனை செயற்படுத்தல் (விடய இல .15)

நீர் வழங்கல் வேலைத்திட்டங்கள் 22 இனையும் செயற்படுத்துவதற்கு இலங்கை வங்கி மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுக்கு இடையில் 3,499 மில்லியன் ரூபா கடனினை பெற்றுக் கொள்வதற்கு திறைசேரியின் உத்தரவாதத்தை பெற்றுக் கொள்வதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. மத்திய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முதலீட்டு வேலைத்திட்டம் (விடய இல. 16)

குறித்த வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தினை செயற்படுத்துவதற்கு தேவையான 35 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. நெதர்லாந்து உதவியின் கீழ் களுத்துறை பெரிய வைத்தியசாலைக்கு விசேட தாய் சேய் சுகாதார சேவை வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 18)

களுத்துறை வைத்தியசாலையினை விசேட தாய் சேய் சுக நலன் வைத்தியசாலையாக மாற்றம் செய்வதற்கான தேவையை உணர்ந்து 28,782,948.30 யூரோவினை நெதர்லாந்திடம் இருந்து உதவியாக பெற்று குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. மஹரகம தேசிய புற்றுநோய் நிலையத்தினை நவீன வசதிகளுடன் கூடிய புற்று நோய் வைத்தியசாலையை நிர்மானித்தல் (விடய இல. 21)

நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மஹரகம தேசிய புற்றுநோய் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான ஆரம்ப பணிகள் லண்டன் அஹமட் தேயிலை கம்பனியினால் வழங்கப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் மேலதிக தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான 233 மில்லியன் ரூபா நிதியினை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஈராக் அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற் கொள்ளல் (விடய இல. 25)

சுற்றுலா துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஈராக் அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற் கொள்வதற்கு சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. இலங்கை துறைமுக அதிகார சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் (விடய இல. 28)

குறித்த வேலைத் திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை தொடர்பில் விளக்கமளிக்குமாறு விடய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமைச்சர் அவர்களின் மூலம் குறித்த கடன் விபரங்கள் அமைச்சரவைக்க முன் வைக்கப்பட்டது. இதன் படி மொத்த கடன் தொகை 215 பில்லியன் ரூபா என அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

11. தேசிய வாசிகசாலை மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபையின் காணியினை இலவச கொடுப்பனவாக குறித்த நிறுவனத்திடமே ஒப்படைத்தல் (விடய இல. 29)

குறித்த நிறுவனத்தின் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக வேண்டி ஒரு ஏக்கர் நிலப்பரப்பை இது வரை காலமும் வழங்கப்பட்டிருந்தது வரி பணம் செலுத்தும் முறையிலாகும். எனவே அதனை இலவச கொடுப்பனவாக கருதி குறித்த நிறுவனத்திடமே ஒப்படைப்பதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. நகர புகையிரத சேவையினை மின்னியல் படுத்தல் (விடய இல. 30)

கொழும்பு நகர புகையிரத சேவையினை மின்னியல்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கும், இலங்கை பொறியியலாளர் நிறுவனம், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆரம்ப பரிசீலனையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளுர் போக்குவரத்து அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. 2015 தேசிய பாதுகாப்பு தின அனுஸ்டிப்பு (விடய இல. 34)

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்வருடம் குறித்த தினத்தில் “பாதுகாப்பான இலங்கை” எனும் பிரதான கருப்பொருளின் கீழ் “ஒன்றிணைவோம், அனர்த்தத்தை விட்டு விலக” எனும் உப கருப்பொருளின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாக வைத்து அனுஸ்டிப்பதற்கும் இது தொடர்பில் ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம். பௌசி அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14. இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை சங்கமாக நிறுவுவது சம்பந்தமான கோரிக்கை (விடய இல.40)

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி துறைக்குத் தேவையான பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மூலம் நவீன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அதன் பிரதிபலன்களை பொது மக்களுக்கிடையில் பகிர்ந்தளித்து சிறந்த வழி முறைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசனை இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சங்கம் ஒன்றை நிறுவுவதற்கான நோக்கம் மற்றும் காரணமாகவும் உள்ளது. இன்று வரை சங்கத்தினால் இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி மற்றம் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இச்சங்கத்தை நிறுவுவதற்கு கடற்றொழில் மற்றம் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15. தேசிய அளவீட்டு ஆய்வு கூட நிர்மாண வேலையினை பூர்த்தி செய்தல், மிகவும் துல்லியமான குளிரூட்டல் முறைமையினை நிறுவுதல் (விடய இல. 41)

2009 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது நிர்ணயிக்கப்பட்ட பாதீட்டின் மூலம் செய்து முடியாத நிலைக்கு உள்ளாகி உள்ளது. எனவே இதுவரை ஒதுக்கப்பட்டிருந்த 1,950 மில்லியன் ரூபாவினை 2,433 ரூபாவாக திருத்தம் செய்யவும், துல்லியமான குளிரூட்டல் முறைமையினை நிறுவுவதற்கும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ காமினி விக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. மன்னார் கடற்கரைக்கு அண்மித்த கடல் பிரதேசத்தில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள இயற்கை வாயு கையிருப்பினை அபிவிருத்தி செய்வதல் மற்றும் அதனை உற்பத்தி செய்தல் (விடய இல. 46)

குறித்த கடற்கரை பகுதியில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள இயற்கை வாயுப்படிவை வணிக மட்டத்திற்கு அபிவிருத்தி மற்றும் உற்பத்தி செய்வதற்கு சர்வதேச போட்டி கேள்வி மனுக்கோரலை மேற் கொள்வதற்கும், அதற்காக வேண்டி அமைச்சரவைக்கு விதப்புரையினை வழங்குவதற்கு அமைச்சரவையின் மூலம் பேரம் பேசும் குழு ஒன்றினை நிறுவுவதற்கும் மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி மற்றும் பிரதிச் செயற்பாடு (விடய இல. 49)

குறித்த வேலைத் திட்டத்தினை மேற் கொள்வதற்கு தேவையான கேள்வி மனுக்கோரலை மேற் கொள்வதற்கும், அவர்களின் விருப்பங்களை கேட்டறிவதற்கும், அதற்காக வேண்டி அமைச்சரவைக்கு விதப்புரையினை வழங்குவதற்கு அமைச்சரவையின் மூலம் பேரம் பேசும் குழு ஒன்றினை நிறுவுவதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அர்ஜுன ரனதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் கட்டத்தின் பல்நோக்கு முனையத்தின் ரோ-ரோ செயற்திட்டத்தினை மேற் கொள்வதற்கு கூட்டு முயற்சிக்கு விருப்பம் தெரிவிப்பதற்கான மனுக்கோரல் (விடய இல. 50)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் கட்டத்தின் பல்நோக்கு முனையத்தின் ரோ-ரோ செயற்திட்டத்தினை மேற் கொள்வதற்கு கூட்டு முயற்சியினை மேற் கொள்வதற்கு தேவையான கேள்வி மனுக்கோரலை மேற் கொள்வதற்கும், அவர்களின் விருப்பங்களை கேட்டறிவதற்கும், அதற்காக வேண்டி அமைச்சரவைக்கு விதப்புரையினை வழங்குவதற்கு அமைச்சரவையின் மூலம் பேரம் பேசும் குழு ஒன்றினை நிறுவுவதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அர்ஜுன ரனதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

19. கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டிற்காக வேண்டி துறைமுக டக் இயந்திரம் இரண்டினை மீள் கட்டண முறையில் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 51)

கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டிற்காக வேண்டி துறைமுக டக் இயந்திரம் இரண்டினை மீள் கட்டண முறையில் பெற்றுக் கொள்வதற்கு கேள்வி மனுக் கொரலை மேற் கொள்வதற்கும், அதில் ஏற்புடையதை தெரிவு செய்வதற்கும் அமைச்சரவையின் மூலம் பேரம் பேசும் குழு ஒன்றினை நிறுவுவதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அர்ஜுன ரனதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

20. மத்திய அதிவேக பாதை (விடய இல. 54)

பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் சிபார்சின் படி இவ் மத்திய அதிவேக பாதைகளை 04 கட்டங்களாக பிரித்து நிர்மான பணிகளை மேற்கொள்ள ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
1. கடவத்தை – மீரிகம
2. மீரிகம – குருனாகல் (அம்பேபுஸ்ஸ ஊடாக)
3. பொதுகரை – கண்டி
4. குருனாகல் - தம்புள்ளை

மேற் குறிப்பிடப்பட்ட திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் டென்டர் கமிட்டி, கலந்துரையாடல் தொடர்பில் முடிவெடுக்கும் குழு, கடன் தொடர்பில் கலந்துரையாடும் குழு ஆகியவற்றை பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் சிபார்சின் கீழ் திறைசேரியின் மூலம் நியமிப்பதற்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

21. போதைப் பொருட்கள் தடுப்பு பற்றிய தேசியக் கொள்கை மற்றும் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 57)

தேசிய போதைப் பொருட்கள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய போதைப் பொருட்கள் தடுப்புக் கொள்கை மற்றும் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும், சகல அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், பகுதி அரசு சார்ந்த நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் தேசிய போதைப் பொருட்கள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

22. லங்கா சதோச நிர்வனத்தை மீள் ஒழுங்கமைத்தல் (விடய இல. 61)

லங்கா சதோச நிர்வனத்தின் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் அரிசியினை திறந்த டென்டர் மூலம் விற்பனை செய்து பெறப்படும் நிதியினை, அரிசி இறக்குமதியின் போது பெறப்பட்ட கடன் தொகையினை தீர்த்துக் கொள்வதற்கும்,மேலும் 4 பில்லியன் ரூபா கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி கடன் வசதி கடிதம் ஒன்றினை திறைசேரியில் இருந்து அரச வங்கிகளுக்கு அனுப்புவதன் மூலம் லங்கா சதோச நிர்வனத்தை மீள் ஒழுங்கமைப்பதற்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

23. 2015 ஆம் ஆண்டிற்கான பசளைகள் கொள்வனவு – (செப்டம்பர் மாத விநியோகம்) (விடய இல. 64)

அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட விசேட நிலையான கொள்முதல் குழுவின் மற்றும் கொள்முதல் மேன் முறையீட்டு சபையின் சிபார்சின் படி 2015 செப்டம்பர் மாதத்திற்கு தேவையான பசளைகளைக் கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தங்களை மேற் கொள்வதற்காக வேண்டி கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.