01.குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்/கட்டானை களுதியவளை தோட்ட காணியிலிருந்து ஒரு பகுதியை பெற்றுக் கொடுத்தல் (விடய இல 09)
அண்மைக்காலமாக எமது நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதுடன், அநேகமான வெளிநாட்டவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள வீசாவின் முதிர்வுக் காலத்தின் பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் ஒரு நிலை காணப்படுவதுடன் தற்போது இத்திணைக்களம் தமது எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கணனி மயப்படுத்தியதன் மூலம் உரிய காலத்தின் பின்னணி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை குறுகிய காலப் பகுதிக்குள் அடையாளம் காணமுடிந்துள்ளது.
குறித்த விடயத்தை அடிப்படையாக கொண்டு கம்பஹா மாவட்டத்தில் கட்டானை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கம் 3803 வரைபடத்தில் 30 ஆம் இலக்க களுதியவளை தோட்ட காணியில் 100 பர்ச்சஸ் காணியை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கையளிப்பதற்கு மக்கள் ஒழுங்கு, கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02.இளம் வயதினரின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கையும் மூலோபாயமும் (விடய இல. 15)

கடந்த சில தசாப்த காலப்பகுதியில், இலங்கையில் இளம் பராயத்தினரின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இளைஞர்களின் சுகாதாரம் தொடர்பான தெசிய கொள்கை மற்றும் தந்திரோபாயம், இளைஞர்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும் சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை தடுப்பதற்கும், இளைஞர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை தேசிய தாய் சேய் நலம் தொடர்பான கொள்கை, தேசிய போசாக்கு கொள்கை, குடித்தொகை மற்றும் இனவிருத்தி சுகாதார கொள்கை, தேசிய HIV/AIDS ஒழிப்பு கொள்கை மற்றும் தொற்றா நோய் கொள்கை போன்ற ஏனைய பல்வேறு தேசிய நிகழ்ச்சித் திட்டங்களுடனும், கொள்கைகளுடனும் ஒத்திசைவாகின்றது. எனவே குறித்த கொள்கை தொடர்பில் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. கெரவலப்பிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான வட பிராந்திய பகுதி 11 இன் சிவில் வேலைகளின் நிர்மாணமேற்பார்கைக்கான ஆலோசனை சேவைகள்(விடய இல. 17)

கெரவலப்பிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான வட பிராந்திய பகுதி 11 இன் சிவில் வேலைகளின் நிர்மாண மேற்பார்கைக்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான செவிற்கு நிதியளிப்பதற்கான கடனின் எஞ்சிய தொகையை உள்ளடக்கும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசாபையின் சார்பில் இலங்கை வங்கிக்கு திறைசேரி உத்தரவாதத்தினை வழங்க நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குபிப்பு அமைச்சர் கபீர் ஹசீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. புதிய சிறைச்சாலைகள் நிருவாகச் சட்டம் (விடய இல. 21)

தற்போது வலுவிலுள்ள சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் 1877 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்டதுடன், சிறைச்சாலைகள் நிருவாகம் சம்பந்தமாக பல வருடங்களாக இனங் காணப்பட்டுள்ள குறைபாடுகள் பல அங்கு நிலவுகின்றன. அக் குறைபாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக மற்றும் தற்போது இனங்காணப்பட்டுள்ள சர்வதேச தரக் கட்டளைகள் போலவே உள்ளதான சிறந்த திறன்களை அடைந்து கொள்வதற்காக புதிய சிறைச்சாலைகள் நிருவாகச் சட்டம் ஒன்றை ஆராய்ந்து சிபார்சு செய்ய நியமிக்கப்பட்ட முன்னால் உணர் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஹெக்டர் யாப்பா அவர்களின் தலைமையிலான குழுவின் சிபார்சின் பெயரில் புதிய சிறைச்சாலைகள் நிருவாகச் சட்டமொன்றாக ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகள் வரைபொன்றை முன்வைக்க நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் பட்டறை ஒன்றை அமைத்தல் (விடய இல. 25)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் பட்டறை ஒன்றை அமைப்பதற்காக உள்ள சாதகமான அம்சங்களை கருத்திற் கொண்டு, அதற்கு தேவையான விடயங்கள் அடங்கிய திட்டம் ஒன்றையும், உறுதிச் சான்றிதழ் ஒன்றையும் தயாரிப்பது தொடர்பில் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கொளரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் மூலம் கருத்திற் கொள்ளப்பட்டது.

06. உள்நாட்டு போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மூலம் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் புறச் செயற்பாடுகளுக்காக செய்யப்பட்ட செலவுகள் (விடய இல. 27)

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் மூலம் புற செயற்பாடுகளின் நிமித்தம் பயன்படுத்தப்பட்ட செலவுகள் தொடர்பில் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் கௌரவ மந்தும பண்டார அவர்களின் மூலம் பின்வரும் விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

1 . தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மூலம் முன்னால் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக 802 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2 . இலங்கை போக்குவரத்து சபையினால் குறித்த தேர்தல் நடவடிக்கைகளுக்காக முற்பணமாக 50 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. நிலுவை தொகையான 142.5 மில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை.

3 . இலங்கை போக்குவரத்து சபை அரசியல் செயற்பாடுகளுக்காக கொழும்பு ஸாலிகா விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தியமையினால் குறித்த மைதானத்திற்கு பல சேதங்கள் ஏற்பட்டதுடன், குறித்த மைதானத்தின் மதிலின் 50 அடி அளவில் உடைக்கப்பட்டமையினால் அதனை புனரமைக்க குறிப்பிட்ட அளவு தொகை செலவானது.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு குறித்த நிலுவை தொகையினை மீள பெற்றுக் கொள்வதற்கும், குறித்த சேதங்களுக்காக நட்ட ஈட்டு தொகையினை பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

07.தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இரண்டு மாடி விடுதி ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 32)

2007 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) 2008 ஆம் ஆண்டு கலேவத்தை, அகலவத்தை எனும் முகவரியில் தாபிக்கப்பட்டது. இந் நிறுவனமானது, அரச கரும மொழிகள் கொள்கையை வினைத்திறனாக அமுலாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மொழி கற்பதற்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு இரு மொழி மற்றும் மும்மொழி திறனை மேம்படுத்துவதை தனது பணியாக கொண்டுள்ளது. இங்கு மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது விடுதி பற்றாக்குறையாகும். எனவே தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 90 பேருக்கு தங்குமிட வசதியை வழங்க முன் மொழியப்பட்டுள்ள புதிய விடுதியை அமைக்க மத்திய பொறியியல் ஆலோசனை பணி மனையினால் தயாரிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக்கு அமைய 98.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே குறித்த மதிப்பீட்டின் படி திட்டத்தை முன்னெடுக்க பொது நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. உள்ளுர் வங்கி நிதியிடலுடனான நீர் வழங்கல் கருத்திட்டங்களினை நடைமுறைப்படுத்தல் - மெதிரிகிரிய நீர் வழங்கல் செயற்றிட்டம் - கட்டம் 11 (விடய இல. 33)

குறித்த வேலை திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இத் திட்டத்தின் மூலம் 15,000 நீர் இணைப்புக்களை மேற் கொள்ள முடியும். இது அரசாங்கத்தின் 400,000 நீர் இணைப்புக்களை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்துக்கு மேலும் வலுவாக அமைகின்றது. எனவே குறித்த செயற்திட்டதை மேற் கொள்வதற்கு தேவையான நிதியினைபெற்றுக் கொள்வது தொடர்பில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து நிலையத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 39)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சை நிலைய கட்டடம் சம்பந்தமாக சுகாதார அமைச்சு மற்றும் அவுஸ்திரேலியா விக்டோரியா அரசின் “பவுண்டேசன் சப்போட்டின் ஏ நஸனல் ரோமா சேர்விஸ் இன் ஸ்ரீலங்கா” ஆகியவற்றுக்கிடையே மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் 100 கட்டில்களுடன் கூடிய 06 சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளுடன் கூடிய மூன்றுமாடி திடீர் விபத்து தொகுதி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை 807 மில்லியன் மதிப்பீட்டு தொகைக்கு பொறியியல் தொடர்பான மத்திய ஆலோசனைக்குழுவுக்கு வழங்க சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாராத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. மத்திய அதிவேக பாதை (விடய இல. 41)

மத்திய அதிவேக பாதையின் முதற் கட்டமாக கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான பகுதி நிர்மாண பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கட்டத்தில் கடவத்தை தொடக்கம் கொஸ்ஹின்ன வரையான 05 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட பாதை ஏற்கனவே மேற் கொள்ளப்பட்டு வரும் அதிவேக பாதை நிர்மாண பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் எஞ்சிய தொகையினை வைத்து குறித்த ஒப்பந்தக்காரர்கள் மூலமே மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவையின் உப குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் குறித்த பாதையின் கொஸ்ஹின்ன தொடக்கம் மீரிகம வரையான 32.55 கிலோ மீட்டர் பாதை நிர்மாண பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. சிறுநீரக நோயாளர்களுக்காக வேண்டி பொலன்னறுவையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டிடத் தொகுதிக்கான காணியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 46)

இலங்கையில் வட மத்திய மாகாணம் சிறுநீரக நோயினால் அதிகமாக பாதிக்கபட்ட நோயாளர்களை கொண்ட பிரதேசமாகும். அண்மைய கணக்கெடுப்பின் படி பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் 2500 நோயாளர்கள் பதிவாகி உள்ளனர். இவ்வாறான நிலைமைகளை கருத்திற் கொண்டு குறித்த மாவட்டத்தில் சிறுநீரக வைத்தியசாலை கட்டடிடத் தொகுதி ஒன்றை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலன்னறுவை வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியில் இவ் வைத்தியசாலை கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்க தேவையான கட்டிட வசதிகளோ இட வசதியோ இல்லை. இதற்கிணங்க குறித்த வைத்தியசாலை கட்டிடத் தொகுதியை அமைக்க நன்னீர் மீன் பிடி நிலையம் மற்றும் தேசிய நீர் வாழ் அதிகாரி சபைக்கு சொந்தமான பொலன்னறுவை மாவட்ட கட்டடிடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள 7.27 ஹெக்டேயர் நிலப்பரப்பை பெற்றுக் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாராத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. 2015 ஆம் ஆண்டிற்கான பசளைகள் கொள்வனவு (ஆகஸ்ட் மாத/ செப்டம்பர் நடுப்பகுதி விநியோகம்) (விடய இல. 47)

பசளை நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சலுகை விலையில் விவசாயிகளுக்கு பசளைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித் திட்டம் நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் பற்றிய அமைச்சின் கீழ் இயங்குகின்ற வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட கொழும்பு உரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் புதிய கேள்வி விலை மனுக்களை வேறோரு அமைப்பும் முன்வைக்காத காரணத்தினால் குறித்த இரண்டு அரசாங்க நிறுவனங்களுக்கும் பசளையைக் கொள்வனவு செய்யும் பொருட்டு, அமைச்சரவை நியமித்த கொள்வனவு பற்றிய நிலையியல் குழு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. இலங்கை சுங்க திணைக்களத்தின் தேவைக்கிணங்க கொள்கலன் ஸ்கேனிங் முறை ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 48)

இலங்கை சுங்க திணைக்களத்தின் வெற்றிகரமான செயற்பாட்டிற்கு கொள்கலன் ஸ்கேனிங் முறை இன்றியமையாததாகும். எனவே அரச மற்றும் தனியார் துறையினரின் பங்குபற்றலுடன் இலங்கை சுங்த திணைக்களத்திற்காக வேண்டி கொள்கலன் ஸ்கேனிங் முறை ஒன்றினை நிர்மாணிக்க நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.