2018.05.09 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்
(இது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நேரடியாக பெறப்பட்ட தமிழ்மொழிபெயர்ப்பாகும்)


01.புதிய குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டமூலம் (விடய இல. 05)
காலத்தின் தேவையினை கவனத்திற் கொண்டு, 1948ம் ஆண்டு 20ம் இலக்க குடிவரவு, குடியகழ்வு சட்டத்தினை சாராம்சம் செய்து புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக துறைசார்ந்தோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் சிபார்சுகளை கருத்திற் கொண்டு குறித்த திணைக்களத்தினால் புதிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்களை உள்ளடக்கி, புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. அமெரிக்காவின் Millennium Challenge Corporation – MCC மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் வழங்குதல் மற்றும் செயற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (விடய இல. 07)

அமெரிக்காவின் Millennium Challenge Corporation – MCC நிறுவனமானது இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக வேண்டி அடுத்து வருகின்ற 05 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான திட்டங்களுக்காக வேண்டி, 7.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த தொகைக்கு மேலதிகமாக 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மற்றும் அதன் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் Millennium Challenge Corporation – MCC நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தினை, முழுத்தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாக திருத்தம் செய்து கைச்சாத்திடுவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் முறையினை மேலும் முறைப்படுத்தல் (விடய இல. 08)

சர்வதேச பாடசாலைகளை முறையான முறையில் பதிவு செய்ய வேண்டிய அத்தியவசியமான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதனடிப்படையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு முறையான வரையறைகளை தயாரிக்கும் வரையில், கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற சிபார்சுகளின் அடிப்படையில், சர்வதேச பாடசாலை அமைப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முறையினை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்தல், வரையறுத்தல், நிர்ணயித்தல், தரத்தினை உறுதி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கு தேவையான சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை ஸ்தாபித்தல், அப்பாடசாலைகளின் ஆசிரியர்களை பயிற்றுவித்தல், சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் உள்நாட்டு மாணவர்களுக்கு சிங்களம், தமிழ், சமயம் மற்றும் வரலாறு ஆகிய பாடவிதானங்களை கற்பிப்பதை கட்டாயப்படுத்தல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றினை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

04. சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புக்களை விருத்திச் செய்து கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 09)

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புக்களை விருத்திச் செய்து கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. சுகாதார பிரிவினை விருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 11)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியின் கீழ் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சுகாதார பிரிவினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயற்படுத்துவதற்காக, சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் மற்றும் உரிய மாகாண மட்டங்களில் வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கும், அதற்கு அவசியமான ஆளணிகளை சேர்த்துக் கொள்வதற்குமாக சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. தேசிய ஒளடத உற்பத்தியினை விருத்தி செய்வதற்காக வேண்டி இலங்கை அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் முதலீட்டாளர்களுடன் இணை வியாபாரங்களை ஆரம்பித்தல் (விடய இல.14)

தேசிய ஒளடத உற்பத்தியினை விருத்தி செய்வதற்காக வேண்டி இலங்கை அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் முதலீட்டாளர்களுடன் இணை வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த இணை வியாபார முறையில் உள்வாங்கப்படுவதற்காக இலங்கை அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில், 1987-07-04ம் திகதிய 456ஃ21ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் பிரிசுரிக்கப்பட்டுள்ள 1957ம்ஆண்டு 49ம் இலக்க அரச கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை திருத்தம் செய்வது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. யாழ். போதனா வைத்தியசாலையின் இரண்டு மாடி புனர்வாழ்வளிப்பு நிலையத்தினை நிர்மாணித்தல், உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் மூன்று வருட பயிற்சி நிகழ்ச்சிகளை செயற்படுத்தல் (விடய இல. 15)

யாழ். போதனா வைத்தியசாலையின் இரண்டு மாடி புனர்வாழ்வளிப்பு நிலையத்தினை நிர்மாணித்தல், உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் மூன்று வருட பயிற்சி நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 605 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் குறித்த யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. 'பெண் தொழில்முயற்சி நிதியுதவி நிகழ்ச்சித்திட்டம்' இனை செயற்படுத்தல் (விடய இல. 16)

பெண் தொழில் முயற்சியாளர்களை உற்சாகப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தினை கவனத்திற் கொண்டு 'பெண் தொழில்முயற்சி நிதியுதவி நிகழ்ச்சித்திட்டம்' இனை செயற்படுத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிதியுதவியினை பயன்படுத்தி, தற்போது செயற்படுத்தப்படுகின்ற சிறு மற்றும் நடுத்தர வியாபார கடன் யோசனை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இக்கடன் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கீழ்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு இதன் கீழ் கடன் உதவியினை பெற்றுக் கொடுப்பதற்கும், பெற்றுக் கொடுக்கப்படுகின்ற கடன் தொகையில் நூற்றுக்கு 20 – 30 வரையிலான தொகை மீள செலுத்துவதற்காக அவசியம் ஏற்படாத வகையில் இக்கடன் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

01. விண்ணப்பிக்கின்ற கடன் தொகையானது ரூ. 750,000 அல்லது அதற்கு மேல் எனின் மற்றும் உரிய தொழில் முயற்சி உரிமையாண்மையில் நூற்றுக்கு 51 வீதம் அல்லது அதற்கு மேல் பெண்களுக்கு உரித்தாதல்.

அல்லது

02. விண்ணப்பிக்கின்ற கடன் தொகையானது ரூ. 750,000 அல்லது அதற்கு மேல் எனின் மற்றும் கீழ்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருத்தல்.

- குறைந்தபட்சம் நிறுவனத்தின் உரிமையில் நூற்றுக்கு 20 வீதம் பெண்களுக்கு சொந்தமாதல்,
- குறித்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது பிரதான செயற்பாட்டு அதிகாரியாக பெண்கள் காணப்படல்.
- பணிப்பாளர் சபை காணப்படுகின்ற நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைந்த பட்சம் நூற்றுக்கு 30 வீதமாக காணப்படல்.
அதனடிப்படையில், ஊவா, சப்ரகமுவ, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை அளித்து, 10 நிதி நிறுவனங்களின் வாயிலாக குறித்த கடன் திட்டத்தினை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. 'நீரினுள் வாழ்க்கை' (பசுமைமிக்க நிலைபேறான அபிவிருத்தி நோக்கம்) தொடர்பில் வலய நாடுகளின் மாநாட்டினை 2018ம் ஆண்டு ஜுன் மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் கொழும்பில் நடாத்துதல் (விடய இல. 23)

நீரினுள் வாழ்க்கை எனும் பசுமைமிக்க நிலைபேறான அபிவிருத்தி நோக்குகளை அடைந்துக் கொள்ளும் போது காணப்படுகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டாக தயாராக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அதனடிப்படையில், குறித்த விடயம் தொடர்பான வலய நாடுகளின் மாநாடொன்றினை 2018ம் ஆண்டு ஜுன் மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் கொழும்பினை மையமாகக் கொண்டு நடாத்துவதற்கும், அதனை நடாத்துவதற்குன செலவாகும் என்று மதிப்பீடப்பட்;டுள்ள தொகையினை பூர்த்தி செய்து கொள்வதற்காக நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 3.48 மில்லியன் ரூபாய் நன்கொடைகளை பெற்றுக் கொள்வதற்குமாக முன்னாள் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் முன்வைத்த யோசனைகளை தற்போதைய மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் வழங்கப்பட்ட இணக்கத்தினையும் கவனத்திற்கொண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2002ம் ஆண்டு 25ம் இலக்க குற்றவியல் காரணங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்கும் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 24)

பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ள 2002ம் ஆண்டு 25ம் இலக்க குற்றவியல் காரணங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்கும் சட்டத்தினை திருத்த சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி சமர்ப்பிப்பதற்குமாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தினை பலப்படுத்தல் (விடய இல. 28)

தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தினை பலப்படுத்தி, விரிவுபடுத்துவதற்காக அவசிமாகும் நிதியினை திரட்டிக் கொள்வதற்காக திறைசேரி முறியொன்றின் மூலம் கடன் தொகையொன்றினை பெற்றுக் கொள்வது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.இலங்கையினுள் முதலீட்டு சேவைகளை வழங்கும் Single Window Investment Facilitation Taskforceஒன்றினை ஆரம்பித்தல் (விடய இல. 38)

இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 14 அங்கீகாரங்கள் அல்லது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இது மிகவும் சிக்கலான விடயமாகும். காலதாமதத்தினை ஏற்படுத்தவும் கூடும். இதற்கு சிறந்ததொரு தீர்வாக முறையான ஒருங்கிணைப்புடன் பின்னூட்டல் மற்றும் நிர்ணயித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும் செயற்பாடுகளுடன் கூடிய முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்காக முதலீட்டு சேவைகளை வழங்கும் Single Window Investment Facilitation Taskforce ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்காக விமான பயண முகாமைத்துவ பிரிவொன்றை வழங்குதல் (விடய இல. 38)

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்காக விமான பயண முகாமைத்துவ பிரிவொன்றை வழங்குதல் மற்றும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் M/s Thales Air System S.A.S. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. கொழும்பு நெரிசல் மிகுந்த புகையிரத சேவையினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை (CSREIP) செயற்படுத்துதல் (விடய இல. 29)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படுகின்ற CSREIP வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரை ஏனைய பிரதேசங்களுடன் இணைக்கும் நெரிசல் மிகுந்த புகையிரத மார்க்கங்களை விருத்தி செய்யும் கொழும்பு நெரிசல் மிகுந்த புகையிரத சேவையினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை (CSREIP) செயற்படுத்துவதற்காக சில உப வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. குறித்த உப வேலைத்திட்டங்களை உள்ளடக்கி கொழும்பு நெரிசல் மிகுந்த புகையிரத சேவையினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை (CSREIP) செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சைகளை அளிப்பதற்கு அவசியமான ஒளடதங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 40)

நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சைகளை அளிப்பதற்கு அவசியமான 1,350,000 ஒளடதங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 2.55 அமெரிக்க டொலர் மில்லியன் ரூபா ஒப்பந்த தொகைக்கு Novo Nordisk A/s நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16.மாதம்பிடிய, கிம்புலா எலவத்தை வீடமைப்பு திட்டத்தின் உயர் செயற்றியன் பணியினை திட்டமிடல், நிர்மாணித்தல் மற்றும் நிதியிடல் (விடய இல. 41)

மாதம்பிடிய, கிம்புலா எலவத்தை வீடமைப்பு திட்டத்தின் உயர் செயற்றியன் பணியினை திட்டமிடல், நிர்மாணித்தல் மற்றும் நிதியிடுவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 2,247 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s CML-MTD Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. இலங்கையின் கடற்கரை எல்லையினை வரைவதற்கு அவசியமான அளவீடுகளை மேற்கொள்வதற்காக வேண்டி Multi Beam Echo Sounder இனை கொள்வனவு செய்தல் (விடய இல. 42)

இந்நாட்டின் கடல் எல்லையினை வரைவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒரேயொரு நிறுவனமான தேசிய நீர் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய நீர் கல்வியியல் அலுவலகத்துக்காக வேண்டி இலங்கையின் கடற்கரை எல்லையினை வரைவதற்கு அவசியமான அளவீடுகளை மேற்கொள்வதற்காக வேண்டி Multi Beam Echo Sounder இனை கொள்வனவு செய்வதற்கும், அதற்காக திறந்த சர்வதேச விலைமனுக்களை கோருவதற்குமாக முன்னாள் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் முன்வைத்த யோசனைகளை தற்போதைய மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் வழங்கப்பட்ட இணக்கத்தினையும் கவனத்திற்கொண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. யப்பான் அரசாங்கம், இந்தியா அரசாங்கம், சீனா அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவை இணைந்து இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையங்கள் 03 இனை ஸ்தாபித்தல் (விடய இல. 49)

அரசாங்கம் ஒன்றினால் அரசாங்கம் ஒன்றுக்கு பெற்றுக் கொடுக்கும் அடிப்படையில் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையங்கள் 03 இனை ஸ்தாபித்து பெற்றுக் கொடுப்பதற்கு யப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் சீன அரசாங்கத்துடன் இணைந்து அம்பாந்தோட்டை பிரதேசத்தில் 400 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமொன்றினையும், யப்பான் அரசாங்கத்துடன் இணைந்து 500 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமொன்றினையும், இந்தியா அரசாங்கத்துடன் இணைந்து 500 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமொன்றினையும் ஸ்தாபிப்பதற்கு அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் மின்னுற்பத்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


19. இலங்கை மத்திய வங்கியின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (விடய இல. 56)

இலங்கை மத்திய வங்கியின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டதுடன், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. அரச பிரிவில் செயற்றிறனை உயர்த்தும் வேலைத்திட்டம் (PSEP) (விடய இல. 57)

அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச நிறுவனங்களை பலப்படுத்தல் மற்றும் அதன் தகைமைகளை விருத்தி செய்வதற்காக 10 மில்லியன் யூரோ நிதியினை பெற்றுத் தருவதற்கு ஐரோப்பிய சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தினை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு வழங்குவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. களனி பழைய புகையிரத பாலத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 58)

களனி பழைய புகையிரத பாலத்தினை தற்காலத்துக்கு உகந்த வகையில் மீள நிர்மாணிப்பதற்கு அவசியமான 09 மில்லியன் யூரோ நிதியினை வட்டி அற்ற கடன் தெகையாக பெற்றுத் தருவதற்கு ஒஸ்ரியாவின் யுனிகிரடிட் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அக்கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் ஒப்புதல்களை மேற்கொள்வதற்கும், குறித்த கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இடங்களை விடுவித்தல் (விடய இல. 60)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கரினை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாமினை வேறு இடத்தில் மீள ஸ்தாபிப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாயினை இலங்கை இராணுவத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. கிலய்போசேட் பயன்பாட்டின் தாக்கம் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணத்துவம் கொண்டோரின் குழுவொன்றினை நியமித்தல் (விடய இல. 69)

மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகளின் அடிப்படையில், பெருந்தோட்;ட துறைகளுக்கு மாத்திரம் கிலய்போசேட் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணத்துவம் கொண்டோர் அடங்கிய குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. அக்குழுவின் சிபார்சுகளுக்கு அமைவாக கிலய்போசேட் பயன்பாட்டின் தாக்கத்தினை மேற்பார்வை செய்வதற்காக வேண்டி கட்டுப்பாட்டு இயந்திரம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு பணிந்து, கடும் கட்டுப்பாட்டுக்கு மத்தியில், தேயிலை மற்றும் இறப்பர் பயிர்செய்கைகளுக்கு மாத்திரம் 36 மாத கால இடைவெளிகளுக்கு மாத்திரம் கிலய்போசேட் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.