2018.04.03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்
01. 2007ம் ஆண்டு 58ம் இலக்க இரசாயன ஆயுத ஒப்புதல் தொடர்பான சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 08)
இரசாயன ஆயுத ஒப்புதல் என்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புபடுவதால் 2007ம் ஆண்டு 58ம் இலக்க இரசாயன ஆயுத ஒப்புதல் தொடர்பான சட்டத்தில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சராக பாதுகாப்பு அமைச்சரவை உள்வாங்கி குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. இலங்கையில் மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சட்டங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் (விடய இல. 14)
இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளை முறைப்படுத்தி அதன் சுயாதீன தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கியினை ஸ்தாபிப்பதற்காக உரிய நிதி சட்ட மூலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டத்திட்டங்களை திருத்தம் செய்வதற்கான அவசியம் இணங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் சட்டத்திட்டங்களை பொருத்தமான முறையில் திருத்தம் செய்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. 100 வயதினை கடந்த வயோதிபர்களுக்காக மாதாந்த கொடுப்பனவொன்றினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 19)
இலங்கையில் 100 வயதினை கடந்த 250 வயோதிபர்கள் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், அவர்களது வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்யும் நோக்கில், 100 வயதினை கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா வீதம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. 1939ம் ஆண்டு 32ம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம் மற்றும் 1954ம் ஆண்டு 19ம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக பணியாளர் (பணி மற்றும் வேதனங்களை முறைப்படுத்தல்) சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 20)
1939ம் ஆண்டு 32ம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம் மற்றும் 1954ம் ஆண்டு 19ம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக பணியாளர் (பணி மற்றும் வேதனங்களை முறைப்படுத்தல்) சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. வங்காளவிரிகுடாவினை அண்மித்த வலய நாடுகளுக்கு (BIMSTEC)) இடையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளல் (விடய இல. 24)
வங்காளவிரிகுடாவினை அண்மித்த வலய நாடுகளுக்கு (BIMSTEC)) இடையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில், தொழில்நுட்ப பரிமாற்றல் வசதிகள் (Technology Transfer Facility) இனை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள சங்கத்தின் பதிவுக்குறிப்பில் (Memorandum of Association) கைச்சாத்திடுவதற்கும், அதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்வதற்கும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. பேருவளை, பதனாகொடை பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் சன சமூக நிலையம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக காணிகளை ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 25)
பேருவளை, பதனாகொடை பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் சன சமூக நிலையம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக நமுணுகலை அரச தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்லேகொடவத்தை எனும் காணியில் 127.6 பேர்ச்சஸ் அளவிலான காணி துண்டினை அரசாங்கத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அரச துறையில் செயற்றிறனை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் (விடய இல. 28)
அரச துறையில் செயற்றிறனை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக முறையே 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பவற்றை உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவை பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. பல்வேறு நோக்கங்களை அடைந்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட உள்ள குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. அரச நிர்வனங்களுக்கு அவசியமான வாகனங்களை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 30)
அமைச்சரவை அங்கீகாரத்துக்கு இணங்க ஒவ்வொரு செயன்முறைகளுக்கு கீழ் வாகனங்களை கொள்வனவு செய்யும் போதும், பெற்றுக் கொடுக்கும் போதும் பின்பற்றப்பட வேண்டிய நிர்ணயங்களை உள்ளடக்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 31)
இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளை விருத்தி செய்யும் நோக்கில், இலங்கையில் வியாபார சுட்டியினை உயர் மட்டத்தில் பேணும் நோக்கில் 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 5,9 மற்றும் 10 பிரிவுகளில் திருத்தம் செய்வது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. 2003ம் ஆண்டு 09ம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை சட்டத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் (விடய இல. 32)
சர்வதேச நாடுகளில் நுகர்வோர் தொடர்பில் பின்பற்றப்படுகின்ற அம்சங்கள் மற்றும் காலத்தின் தேவைக்கிணங்க திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பவற்றை உள்ளடக்கி 2003ம் ஆண்டு 09ம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் கௌரவ ரிஷட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. துறைமுகத்தினை அண்டிய பிரதேசங்களில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புளூமெண்டல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 35)
துறைமுகத்தினை அண்டிய பிரதேசங்களில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புளூமெண்டல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. சிறு தேயிலை தோட்டங்களின் பலனை அதிகரித்தல் (விடய இல. 39)
இலங்கை தேயிலை உற்பத்தி வருமானத்தில் 76மூ பங்களிப்பினை பெற்றுக் கொடுக்கின்ற சிறு தேயிலை தோட்டங்களை மேலும் பலன் தரும் வகையில் விருத்திச் செய்வதற்காக 03 பிரதான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 1456 தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கங்களுக்கு உரங்களை இடும் இயந்திரம் ஒன்று எனும் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த தோட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு உகந்த இயந்துரோபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், கிராமிய பிரவேச மார்க்கங்களை மனதுக்கு உகந்த விதத்தில் புனருத்தாபனம் செய்வதற்கும் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. சர்வதேச அணுசக்தி முகவராலயத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை பாதுகாப்பு நடைமுறைகள் ஒப்பந்தத்தின் மேலதிக நெறிமுறைகளை செயற்படுத்தல் (விடய இல. 40)
சமாதான நோக்கங்களுக்காக மாத்திரம் அணுச்சக்தி மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பினை வெளிக்காட்டி, சர்வதேச அணுசக்தி முகவராலயத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை பாதுகாப்பு நடைமுறைகள் ஒப்பந்தத்தின் மேலதிக நெறிமுறைகளை இலங்கையில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. விவசாயத்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை கட்டியெழுப்புதல் (விடய இல. 41)
கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் அரச பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் விவசாயத்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை கட்டியெழுப்புவது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் மற்றும் இந்தியாவின், அரச வியாபார நிறுவகம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 51)
அரச துறையில் செயற்றிறனை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் மற்றும் இந்தியாவின், அரச வியாபார நிறுவகம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 59)
3,939 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவின் கீழ், ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக கட்டிடம் மற்றும் பொறியியல் பீடத்துக்காக கடல்சார் கல்வி நடவடிக்கைகளுக்கான கட்டிடம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும், வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. வொடர்ஸ் ஏஜ் (Waters Edge) ஹோட்டலுடன் இணைந்த வகையில் சிறிய சொகுசு ஹோட்டல் (Boutique Hotel) ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 62)
வொடர்ஸ் ஏஜ் (Waters Edge) ஹோட்டலுடன் இணைந்த வகையில் 48 மாடிகளைக் கொண்ட சிறிய சொகுசு ஹோட்டல் (Boutique Hotel) ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
18. களனியிலிருந்து அருவக்காலு வரை திண்மக் கழிவுகளை கொண்டு செல்வதற்காக புகையிரத என்ஜின்களை (Locomotive Engines) கொள்வனவு செய்தல் (விடய இல. 58)
களனியிலிருந்து அருவக்காலு வரை திண்மக் கழிவுகளை கொண்டு செல்வதற்காக 04 புகையிரத என்ஜின்களை (Locomotive Engines) இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்திணைக்களத்துக்கான புகையிரத என்ஜின்கள் பெற்றுக் கொள்ளும் கொள்முதல் முறையின் கீழ் கொள்வனவு செய்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19. மீனின உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பிடிக்கப்படுகின்ற மீன்களின் தரத்தினை அதிகரிப்பதற்காக மீன்பிடி முறையினை விருத்தி செய்தல் (விடய இல. 65)
மீனின உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பிடிக்கப்படுகின்ற மீன்களின் தரத்தினை அதிகரிப்பதற்காக மீன்பிடி முறையினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகளால் 50மூ பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் முறையின் கீழ் இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக 23 மீன்பிடி இயந்திரங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. ஒலுவில் துறைமுகத்தின் நடவடிக்கைகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்காக அங்கு தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்தல் (விடய இல. 66)
ஒலுவில் துறைமுகத்தின் நடவடிக்கைகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்காக அங்கு தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகளான துறைமுகத்துக்கு தெற்காக உள்ள கடற்கரை பகுதியில் மணல் அகழ்வுகளை மேற்கொள்ளல் மற்றும் வடக்கு கரையில் மணல் நிரப்புவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டு குறித்த அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதற்கு உகந்த இயந்திரங்களை அரச கொள்முதல் முறையின் கீழ் கொள்முதல் செய்வதற்கும் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. இராணுவ ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ரஷ;யா ஆகிய நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 68)
இராணுவ ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ரஷ;யா ஆகிய நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. இளம் விவசாயிகளை உருவாக்கும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தினை குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தல் (விடய இல. 69)
உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளம் விவசாயிகளை உருவாக்கும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தினை குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. கொழும்பு தலைநகரை அண்டிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புதிய முதுவெல்ல மற்றும் டொரின்டன் ஆகிய பகுதிகளில் மழை நீர் வழிந்தோடும் வகையில் சுரங்க பாதையொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 73)
கொழும்பு தலைநகரை அண்டிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புதிய முதுவெல்ல மற்றும் டொரின்;டன் ஆகிய பகுதிகளில் மழை நீர் வழிந்தோடும் வகையில் சுரங்க பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், M/s China Petroleum Pipeline Engineering Co.Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. பொய் தகவல்கள் மற்றும் மோசமான வெளியீடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 75)
பொய் தகவல்கள் மற்றும் மோசமான வெளியீடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக எடுக்க முடியுமான அதியுயர்ந்த சட்ட நடவடிக்கைகளை தொடர்பில் அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைக்குமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சு, தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமைச்சு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகிய நிர்வனங்களுக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
25. கண்டி நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்குவதனை துரிதப்படுத்துதல் (விடய இல. 76)
கண்டி நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்குவதனை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.