2018.03.06 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

01. கிரிதர நீர்வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 06)


கிரிதர நீர்வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான 513.28 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு அதிகாரத்தினை வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


02. மக்கள் தொகை கணக்கெடுப்பு அலகுகளை முறைப்படுத்தல் (விடய இல. 08)


பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற குடிசன மதிப்பீடுகளை முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக இயந்திரத்தின் உதவியினையும் பெற்றுக் கொண்டு, நாடு முழுவதும் உள்ளடக்கப்படும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலகுகளை முறைப்படுத்தும் பணியினை 2018ம் ஆண்டினுள் மேற்கொள்வதற்கும், இதற்கு பின்னர் 02 வருடத்துக்கு ஒருமுறை அச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


03. மாகும்புர பல்சேவை மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 09)


சுற்றுவட்ட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 02ம் கட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராலயத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகையில் எஞ்சிய நிதியினை பயன்படுத்தி மாகும்புர பல்சேவை மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


04. புகையிரத குறுக்கு வீதிகள் பாதுகாப்பு பிரிவினை பொருத்துதல் மற்றும் வடக்கு புகையிரத மார்க்கத்தினை புனர் நிர்மாணம் செய்தலை துரிதப்படுத்துதல் ஆகியவற்றுக்காக வேலைத்திட்ட முகாமைத்துவ அலகொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 10)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வடக்கு புகையிரத வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்துவதற்காக வேலைத்திட்ட முகாமைத்துவ அலகொன்றை ஸ்தாபிப்பதற்கும், ஹங்கேரியா ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் நிதியுதவியுடன் புகையிரத குறுக்கு வீதிகள் பாதுகாப்பு பிரிவினை பொருத்தும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


05. வீட்டு பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தொழிலாளர் சட்டத்திட்டங்களை திருத்தம் செய்தல் (விடய இல. 11)


பல்வேறு காரணங்களை கவனத்திற் கொண்டு, தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சபரகமுவை அபிவிருத்தி அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, வீட்டு பணியாளர்களின் உரிமைகளினை பாதுகாப்பதற்காக தேவையான சட்டத்திட்டங்களை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது.


06. சிறு மற்றும் நடுத்தர வியாபார கடன் திட்டத்தினை செயற்படுத்துதல் (விடய இல.13)


சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தினை செயற்படுத்துவதற்காக அரசம ற்றும் தனியார் பிரிவுகளைச் சேர்ந்த 10 நிர்வனங்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அப்பங்குபற்றும் நிதி நிர்வனங்களுடன் உரிய கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. பொல்தூவ குறுக்கு வீதியினை 'சுஹுருபாய' விலிருந்து 'கொஸ்வத்தை சந்தி' வரை நீடித்தல் (விடய இல. 17)


வாகன நெரிசலினை குறைக்கும் நோக்கில் பொல்தூவ குறுக்கு வீதியினை கொஸ்வத்தை முச்சந்தி வரை 04 கிலோ மீட்டர் அளவில், 04 சுவடுகளைக் கொண்ட வீதியாக நீடிப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


08. முத்துராஜவெல மணல் நிரப்பும் பிரதேசத்தில் காணப்படுகின்ற 02 காணித்துண்டுகளை சேவை வேலைத்திட்டத்துக்காக குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 18)


முத்துராஜவெல மணல் நிரப்பும் பிரதேசத்தில் காணப்படுகின்ற 02 காணித்துண்டுகளை சேவை வேலைத்திட்டத்துக்காக குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்காக பத்திரிகை விளம்பரத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் அதிக விலையினை முன்வைத்துள்ள John Keels Logistics (Pvt) Ltd. நிர்வனத்துக்கு 30 வருட காலப்பிரிவிற்கு குறித்த இரண்டு காணித்துண்டுகளையும் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. கொழும்பு மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துதல் (விடய இல. 20)


கொழும்பு மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்தும் நோக்கில் சேதவத்தை – அம்பதலே வீதியில் காணப்படுகின்ற கித்தம்பஹுவ நீர் மார்க்கத்தில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் காலநிலை அச்சுறுத்தல்களை குறைக்கும் வேலைத்திட்ட அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொண்டு, குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


10. 2005ம் ஆண்டு 34ம் இலக்க உள்ளக வன்முறைகளை தடுக்கும் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 19)


காலத்தின் தேவைக்கிணங்க முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளை உள்ளடக்கி 2005ம் ஆண்டு 34ம் இலக்க உள்ளக வன்முறைகளை தடுக்கும் சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. திண்மக் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொருத்தமான காணிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 27)


திண்மக் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை முறையாக பெற்றுக் கொடுப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கு பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களுக்குரிய காணிகளை மற்றும் பிரதேச பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் போசிக்கப்படுகின்ற காணிகளை காணி சுவீகரிக்கும் சட்டத்தின் கீழ் அரசுக்கு உரித்தாக்கிக் கொண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கிக் கொடுப்பதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்கள் மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் ஆகியோர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


12. மேல் எலகர கால்வாய் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் களுகங்கை – மொரகஹகந்தை பரிமாறல் கால்வாயினை நிர்மாணித்தல் (விடய இல. 31)


மேல் எலகர கால்வாய் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் களுகங்கை – மொரகஹகந்தை பரிமாறல் கால்வாயினை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 6,111.91 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் சீனாவின் Sinohydro Corporation Limited நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


13. விமான நிலைய ஓய்வு மண்டபத்துக்கான உணவு வகைகளை பெற்றுக் கொடுக்கும் சேவையினை (Catering Services) பெற்றுக் கொள்ளல் (விடய இல. 35)


விமான நிலைய ஓய்வு மண்டபத்துக்கான உணவு வகைகளை பெற்றுக் கொடுக்கும் சேவையினை (Catering Services) பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அது தொடர்பில் பொருத்தமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையுடன் தொடர்பான M/s Sri Lankan Catering Limited நிறுவனத்துக்கு 03 வருட காலத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. NERD Technology முறையினை உபயோகித்து அரச நிர்வனங்களில் நிர்மானப்பணிகளை மேற்கொள்ளல் (விடய இல. 37)


அரச நிர்வனங்களில் நிர்மானப்பணிகளை மேற்கொள்வதற்காக NERD Technology முறையினை உபயோகிப்பதற்கு வழிசமைத்து, 50 மில்லியன் ரூபா அதிகூடிய தொகைக்கு உட்பட்டு, அவ்வாறான நிர்மான நடவடிக்கைகளுக்கான ஆலோசனை சேவை, திட்டமிடல் மற்றும் நிர்மானித்தல் போன்ற நடவடிக்கைகள், கொள்முதல் செயன்முறைக்கு புறம்பாக இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்துக்கு நேரடியாக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


15. நாட்டினுள் தொடர்ச்சியாக மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்துவதற்காக 100 மெகாவொட் மேலதிக மின் கொள்ளளவினை கொள்முதல் செய்தல் (விடய இல. 39)


நாட்டினுள் தொடர்ச்சியாக மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்துவதற்காக 100 மெகாவொட் மேலதிக மின் கொள்ளளவினை கொள்முதல் செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் குழுவின் சிபார்சின் பெயரில் M/s Aggreko International Projects Limited, M/s Heyleys Aventura (Pvt) Ltd & SES Smart Energy Solutions Fzco ஆகிய நிர்வனங்களிடம் இருந்து 06 மாத கால எல்லைக்காக கொள்வனவு செய்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. வவுனதீவு சூரிய மின்னுற்பத்தி நிலையத்தினை நிர்மானித்தல் (விடய இல. 40)


அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வவுனதீவு சூரிய மின்னுற்பத்தி நிலையத்தினை நிர்மானித்தல், (Build, Own & Operate) ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தினை M/s Ex-Pack Corrugated Cartons (Pvt) Ltd. வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


17.உள்ளுராட்சி மன்றங்களில் கழிவு போக்குவரத்து நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக குப்பை போக்குவரத்து வண்டிகள் 100 இனை கொள்வனவு செய்தல் (விடய இல. 42)


உள்ளுராட்சி மன்றங்களில் கழிவு போக்குவரத்து நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக குப்பை போக்குவரத்து வண்டிகள் 100 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 622.13 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் சீனாவின் ZXY Hong Kong Company Limited க்கு வழங்குவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தாபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


18. இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 45)


இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை ஸ்தாபிப்பதற்காக இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் படுஹேன பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள கணக்காய்வாளர் திணைக்களத்துக்குரிய கட்டிடத் தொகுதி மற்றும் காணியினை உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு சட்டரீதியாக ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் முன்னால் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை, தற்போதைய குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களின் இணக்கத்துக்கு அமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


19. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் பரிசீலனை சபைக்காக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 50)


பல்வேறு குறைப்பாடுகள் காரணமாக 1994ம் ஆண்டு 19ம் இலக்க இலன்ஞம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் பரிசீலனை சபை சட்டத்துக்கு பதிலாக குறித்த நிர்வனத்தினை மேலும் சுயாதீனப்படுத்தும் நோக்கில் புதியதொரு சட்டத்தினை தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. நட்ட ஈடு வழங்கும் அலுவலகம் (விடய இல. 51)


மக்கள் பாதிக்கப்படுகின்ற இனங்காணப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தொடர்பில் பூரண நட்டஈட்டு விண்ணப்பப்படிவங்களை முன்வைப்பதற்காக 'நட்ட ஈடு வழங்கும் அலுவலகம்' ஒன்றை சட்ட ரீதியாக ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


21. 2017ஃ2018 பெரும்போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 52)


2017ஃ2018 பெரும்போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை நெல் விற்பனை சபையின் மூலம் செயற்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா நிதியினை திறைசேரியில் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


22. SAITM நிறுவனத்தின் மருத்துவ பீட மாணவர்களின் கல்வியியல் பிரச்சினைகளை தீர்த்தல் (விடய இல. 57)


SAITM நிறுவனத்தின் மருத்துவ பீட மாணவர்களை ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்வதற்கு உகந்த முறையொன்றை முன்வைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் சிபார்சுகளை செயற்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


•SAITM நிறுவனத்தில் தற்போது கல்வி பயில்கின்ற மாணவர்களை மாத்திரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளல் மற்றும் அதன் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரும் மாணவர்களுக்காக மருத்துவ பட்டத்தினை பெற்றுக் கொடுத்தல்.
• குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் நிதியுதவி செய்தல்.