2018.02.20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

01. 'அபே சுவய – ரடே சவிய' (எமது ஆரோக்கியம் - நாட்டின் பலம்) தேசிய சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் (விடய இல. 05)
தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து வளமான பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் 'அபே சுவய – ரடே சவிய' (எமது ஆரோக்கியம் - நாட்டின் பலம்) எனும் பெயரில் தேசிய சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள இவ்விசேட பிரிவின் ஒருங்கிணைப்பின் கீழ் சுகாதார, போசணை மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்பான ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்தவும், இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திலிருந்து பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து செயற்படுத்தவும், அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. ஒருகொடவத்தை – அம்பதளை வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு சமாந்தரமாக குழாய் நீர் பிரிவினை விருத்தி செய்தல் (விடய இல. 10)

ஒருகொடவத்தை – அம்பதளை வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு சமாந்தரமாக குழாய் நீர் பிரிவினை விருத்தி செய்ய வேண்டியுள்ளது. அதனடிப்படையில், அத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்துவதற்கு தேவையான நிதியினை திரட்டிக் கொள்ளும் நோக்கில், ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள ஒஸ்ரியாவின் யுனிகிரடிட் வங்கி (Unicredit Bank Austria AG) மற்றும் மக்கள் வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் (விடய இல. 11)

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு பிரவேசிக்கும் வழிகளை மேம்படுத்தும் நோக்கில் 4,000 பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நேரடி கடன் வழங்கும் வசதிகள் (Direct Lending Facility) இவ்வேலைத்திட்டத்துக்காக நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உகந்த கடன் மூலாதாரம் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 50 மில்லியன் பிரித்தானிய பவுன் மதிப்பீட்டு செலவில் கிராமிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நிர்மாணிப்பு நிறுவனங்களிடத்தில் இருந்து கேள்வி மனுக்களை கோருவதற்கான அதிகாரத்தினை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு வழங்குவதற்கும், அதன் போது முன்வைக்கப்படுகின்ற யோசனைகள் மற்றும் விலை மனுக்களை மதிப்பீடு செய்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக உரிய தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் கொள்முதல் குழுவுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. General Education Modernization – GEM க்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 13)

காலத்துக்கு ஏற்றாற் போல் கல்வி முறையினை மாற்றி உயர் தரத்திலான விளைவுப் பொருளாக மாணவர்களை வெளியேற்றும் நோக்கில் General Education Modernization – GEM எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக வேண்டி உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையத்தின் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொள்வதற்கான கடன் ஒத்துழைப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், குறித்த கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. விமான போக்குவரத்து சட்டமூலம் (விடய இல. 14)

1998ம் ஆண்டில் மொன்ட்ரியலில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விமான போக்குவரத்து சேவை தொடர்பான கூட்டில் இலங்கையும் இணைந்துள்ளது. அவ்விணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் இதற்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும், அது மேலதிக ஆய்விற்காக அரசியல் அமைப்பு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிற்கு முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில் அக்குழுவின் மூலம் வழங்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் உள்ளடக்கி சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 'விமான போக்குவரத்து சட்டமூலத்தினை' அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கான வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. மீத்தொடமுல்லை திண்மக் கழிவு அகற்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவுகளை வழங்குதல் (விடய இல.17)

மீத்தொடமுல்லை திண்மக் கழிவுஅகற்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு சொத்து மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து நட்டஈட்டு தொகையினை பெற்றுக் கொடுக்கும் வரை அவர்களுக்கான வீட்டு வாடகையினை தொடர்ந்து வழங்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இனங்காணப்பட்டுள்ள 60 குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா வீதம் தொடர்ந்தும் வீட்டு வாடகை கொடுப்பனவாக வழங்குவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளல் (விடய இல. 19)

இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்காக இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் ஜேர்மனியின் German Academic Exchange Service – DAAD ஆகிய அமைப்புகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. மத்திய வருமானம் பெறும் வீட்டு கடன் யோசனை முறையினை செயற்படுத்தல் (விடய இல. 23)

மத்திய வருமானம் பெறும் வீட்டு கடன் யோசனை முறையினை செயற்படுத்துவதற்கு 2018ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடனை மீள செலுத்தும் ஆக உயர்ந்த கால எல்லை 25 வருடங்களுக்கு உட்பட்டு, ஆகக் கூடிய தொகையாக 05 மில்லியன் ரூபா வரை சேமிப்பு வங்கிகளின் மூலம் கடன் தொகையினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் போது 05 வருடத்துக்காக வேண்டி 7மூ சலுகை வரி வீதத்தின் அடிப்படையில் அக்கடன் தொகையினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் போது அவ்வங்கியினால் அறவிடப்பட வேண்டிய 5மூ வட்டி வீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கும். இக்கடன் யோசனை முறையினை செயற்படுத்துவதற்காக தேசிய சேமிப்பு வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. நிலைபேறான நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துதல் (விடய இல. 25)

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் 13 நகரங்கள் உபாய முறையிலான நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ளது. அதன் கீழ் செயற்படுத்தப்படுகின்ற 'நிலைபேறான நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்' மூலம் நாடு பூராகவும் வியாபித்துள்ள மேற்படி 13 நகரங்களையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற குறித்த அபிவிருத்தி திட்டங்களின் விளைவாக கொழும்பிற்கு வெளியில் அமைந்துள்ள நகர கேந்திர நிலையங்கள் விருத்தி செய்யப்படுகின்றன. பல்வேறு அமைப்புக்களில் மேற்கொள்ளப்படுகின்ற குறித்த அபிவிருத்தி திட்டங்களைக் கொண்ட முன்மொழியப்பட்டுள்ள நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும், அதற்கான நிதியினை திரட்டிக் கொள்வதற்கும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பாராளுமன்றத்தில் அலுவலக, தேசிய ஆணைக்குழு அலுவலகங்கள், அமைச்சரவை அலுவலகம் மற்றும் வேறு உரிய அரச அலுவலகங்களுக்காக கட்டிட தொகுதியொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 26)

பாராளுமன்றத்தில் அலுவலக, தேசிய ஆணைக்குழு அலுவலகங்கள், அமைச்சரவை அலுவலகம் மற்றும் வேறு உரிய அரச அலுவலகங்களுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேசத்தில் ஜப்பான நட்புறவு வீதியினை அண்மித்ததாக காணப்படுகின்ற பூமிப்பகுதியில் கட்டிட தொகுதியொன்றை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 03 வருட காலப்பகுதிக்குள் இக்கட்டிட தொகுதியினை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்துக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தென்னாசிய வலயத்தில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக South Asian Regional Intelligence and Coordination Centre – SARICC இனை ஸ்தாபித்தல் (விடய இல. 30)

தென்னாசிய வலயத்தில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், அவ்வலய நாடுகளுக்கு இடையில் South Asian Regional Intelligence and Coordination Centre – SARICC இனை ஸ்தாபிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்நிலையத்தினை இலங்கையில் அமைப்பதற்கும், ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை சூழலில் குறித்த நிலையத்தினை தற்காலிகமாக ஸ்தாபிப்பதற்கும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12.1980ம் ஆண்டு 31ம் இலக்க சுயேட்சை சமூக சேவை அமைப்பு (பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்) சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 31)

காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு அரச சார்பற்ற நிர்வனங்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் தலையீடுகளை ஆராய்ந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு உட்பட உரிய தரப்பினரின் கருத்துக்களையும் கவனத்திற் கொண்டு, 1980ம் ஆண்டு 31ம் இலக்க சுயேட்சை சமூக சேவை அமைப்பு (பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்) சட்டத்தினை திருத்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் அடங்கிய குறித்த சட்டமூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் அதனை சமரப்பிப்பதற்கும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேஷன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தென் கொழும்பு மணலினை போசிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்கிஸ்சை தொடக்கம் அங்குலானை வரையான கடற்கரை பகுதியினை தயார்படுத்தல் (விடய இல. 32)
மேல் மாகாண கடற்கரையில் மணல் அரிப்பு இடங்களாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் கொள்ளுபிட்டிய தொடக்கம் கல்கிஸ்சை வரையான பகுதியில் Sand Engine Methodology முறை மூலம் கடற்கரையினை ஸ்டாய் செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற தென் கொழும்பு மணலினை போசிக்கும் வேலைத்திட்டத்துக்காக வேண்டி 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மூலம் 800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்கிஸ்சையிலிருந்து அங்குலானை வரையான 5.5 கி.மீ. வரையான கடற்கரையில் மணலினை போசிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக வேண்டி சர்வதேச போட்டி விலை மனுக்களை கோரும் செயன்முறையின் கீழ் தகுதியான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சூற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. மத்திய அதிவேக வீதியின் 03ம் கட்டத்தினை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 33)

மத்திய அதிவேக வீதியின் 03ம் கட்டமான பொதுஹர தொடக்கம் ரம்புக்கன ஊடான கலகெதர வரையான 32.5 கி.மீ. நீளமான வீதியினை நிர்மானிப்பதற்காக 100 பில்லியன் ஜப்பான் யென் நிதியினை வழங்குவதற்கு ஜப்பானின் டொகியோ மிட்சுபிஷp வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தினை ஜப்பானின் M/s Taisei Corporation நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கொழும்பு துறைமுக நகர பூமிக்காக கழிவு நீர் வெளியேற்றும் வசதிகளை வழங்குதல் (விடய இல. 37)

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பிரதேசத்தில் சேர்கின்ற கழிவு நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தில் இருந்து மாதம்பிட்டிய கழிவகற்றும் தொகுதி அமைந்துள்ள பகுதி வரையான 5.5 கி.மீ. நீளத்துக்கு 900 மி.மீ பரப்பினை கொண்ட பிரதான கழிவு நீர் குழாய்யொன்றை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மார்க்கத்தில் அமைந்துள்ள பேரே வாவிக்கு குறுக்காக குறித்த குழாயினை அமைப்பதற்காக அவகாசம் காணப்படுவதால் தற்போது அவ்விடத்தில் காணப்படுகின்ற கழிவு நீர் குழாய் மார்க்கங்கள் 02 க்காக பொது குழாய் மார்க்கம் ஒன்றை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், அப்பகுதிக்கான பொது குழாய் வசதியினை பொருத்துவதற்கான டெப் அத்திவாரத்தினை ஈடும் ஒப்பந்தத்தினை 48 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s ELS Construction (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 'பசுமை சக்தி வளங்கள் அபிவிருத்தி மற்றும் சக்தி வளப்பயன்பாட்டினை விருத்தி செய்யம் முதலீட்டு நிகழ்த்திட்டத்தின்' கீழ் கிரிட் துணை மின்னிலையத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 38)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 'பசுமை சக்தி வளங்கள் அபிவிருத்தி மற்றும் சக்தி வளப்பயன்பாட்டினை விருத்தி செய்யம் முதலீட்டு நிகழ்த்திட்டத்தின்' கீழ் எஞ்சியுள்ள நிதியினை பயன்படுத்தி பன்னல கிரிட் துணை மின்னிலையத்தினை விருத்தி செய்யவும், பன்னிப்பிட்டிய மற்றும் வெயாங்கொடை கிரிட் துணை மின்னிலையங்களுக்காக மின்சார ட்ரான்ஸ்போம்பர்கள் இரண்டினை கொள்வனவு செய்வதற்கும், களுத்துறை, கெஸ்பேவ, பழைய அனுராதபுரம், கப்பல்துறை மற்றும் கெரவலபிட்டிய ஆகிய கிரிட் துணை மின்னிலையங்களுக்காக 36kV GIS இணைப்புக்களை தொடர்புபடுத்தும் 05 தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கும் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கொழும்பு மாநகர சபைக்கு அவசியமான தீயணைக்கம் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதல் (விடய இல. 40)

கொழும்பு மாநகர சபைக்கு அவசியமான தீயணைக்கம் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 10.3 மில்லியன் யூரோ மதிப்பீட்டு தொகைக்கு ஒஸ்ட்ரியாவின் M/s Rosenbauer International AG க்கு வழங்குவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 61)

கொழும்பு பல்கலைக்கழகத்தின், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மேற்படிப்பினை தொடரும் மாணவர்களின் நன்மைக்கருதி பின்வரும் வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்காக வேண்டி மாணவர்கள் சேவை நிலையமொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை 381.49 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குதல்.

• இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் மொழி தகைமைகள் அபிவிருத்தி நிலையம் மற்றும் பரீட்சை மண்டபமொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை 215.42 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு மத்திய பொறியியல் சேவை தனியார் நிறுவனத்துக்கு வழங்குதல்.

• கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பல் சேவை கேட்போர் கூடமொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை 674.47 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Link Engineering (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குதல் .

• கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவ பீடத்துக்காக கட்டிட தொகுதியொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை 701.18 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்குM/s Edward and Christie (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குதல் .

19. விவசாய நடவடிக்கைகளுக்காக நீண்டகால குத்தகையின் அடிப்படையில் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற காணிகளுக்காக வரி சலுகையினை அளித்தல் (விடய இல. 47)

நாட்டில் விவசாய துறையில் அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு விவசாய நடவடிக்கைகளுக்காக அரச காணிகள் கட்டளை சட்டத்தின் கீழ் நீண்டகால வரி அடிப்படையில் எதிர்காலத்தில் காணிகளை பெற்றுக் கொடுக்கும் போது பின்வரும் வரி சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• வருடாந்த வரிப்பணத்தினை போன்று மூன்று மடங்காக ஒரே தடவையில் அறவிடப்படுகின்ற தவணை கட்டணத்தினை அறவிடாது விடல்.
• வரி மறுசீரமைப்பு செய்யப்படும் வருடத்துக்கு முன்புள்ள வருடத்தில் காணப்படுகின்ற தொகைக்கு 20% மாத்திரம் ஒன்றுசேர்த்து மறுசீரமைப்பு செய்தல்.
• முதல் வரி அறவிடும் காலம் முடிவடைந்ததன் பின்னர் வரி அறவிடும் காலத்தினை மீண்டும் நீடிக்கும் போது, ஆரம்ப வரி அறவிடும் கால முடிவில் அறவிடப்பட்ட வரி பணத்துக்கு 20% தொகையினை சேர்த்து பெறப்படுகின்ற தொகையினை இரண்டாம் வரி அறவிடும் காலப்பிரிவின் ஆரம்ப வரி பணமாக கருதுதல்.

20. இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியின் மூலம் நிதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 48)

திண்மக் கழிவு வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புத்தளம், அருவக்காடு பிரதேசத்தில் திண்மக் கழிவு வெளியேற்றும் சூழல் ஒன்றை ஸ்தாபிப்பது உட்பட தீர்வுகளை செயற்படுத்துவதற்காக இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு ஆகியவை இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தின் முழு மதிப்பீட்டு தொகை 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இம்மதிப்பீட்டு தொகையில் 115 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி வழங்குவதற்கும், மேலும் 115 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கி வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளன. எஞ்சிய 44 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை இலங்கை அரசாங்கம் முதலிட உள்ளது. அதனடிப்படையில் குறித்த தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியுடன் கடன் ஒத்துழைப்பு கலந்துரையாடலில் ஈடுபடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.