2018.01.02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்.

01. நிதி ஆணைக்குழு சட்டத்தினை தயாரித்தல் (விடய இல. 06)

அரசியல் யாப்பின் உறுப்புரைகளுக்கு அமைய நிதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை மிகவும் பயனுள்ள விதத்தில் செயற்படுத்துவதற்காக ஆணைக்குழுவிற்கு மேலும் தேவைப்படுகின்ற அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சட்டங்களை இயற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்காக நிதி ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளையும் கவனத்திற் கொண்டு சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்கு சட்ட மாதிபருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. மருத்துவஃ மருத்துவபயிற்சி ஆய்வு கூடம் மற்றும் சுகாதார காப்புறுதி சேவை வழங்குபவர்களுக்காக தேசிய அங்கீகார (Accreditation) யோசனை முறையொன்றை செயற்படுத்தல் (விடய இல. 15)

மருத்துவ/ மருத்துவபயிற்சி ஆய்வு கூடம் (அரச மற்றும் தனியார்) மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவ நிறுவனங்களின் தரத்தினை அதிகரிக்கும் நோக்கில், தேசிய அங்கீகார (Accreditation) யோசனை முறையொன்றை சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சுடன் இணைந்து செயற்படுத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 'வரி அறிவிடுதலினை அடிப்படையாகக் கொள்ளல் மற்றும் இலாப மாற்றங்கள்' (BEPS) வேலைத்திட்டத்துக்காக பங்குதாரர் கட்டணத்தினை செலுத்துதல் (விடய இல. 19)

தேசிய மற்றும் சர்வதேச வரி அறவீட்டு வியூகத்தில் காணப்படுகின்ற இடைவெளி காரணத்தினால் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக இனங்காணப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வாக 'வரி அறிவிடுதலினை அடிப்படையாகக் கொள்ளல் மற்றும் இலாப மாற்றங்கள்' (BEPS) எனும் பெயரில் செயற்பாட்டு திட்டமொன்று The Organization for Economic Cooperation and Development – OECD நிறுவனம் மற்றும் G-20 நாடுகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அவ்வமைப்பில் 2016ம் ஆண்டு பூரண அங்கத்துவம் பெற்றுள்ளதுடன், இது வரை 107 நாடுகள் அச் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்துள்ளன. அதனடிப்படையில் குறித்த திட்டத்தில் உறுப்புரிமையினை வகிப்பதற்காக வேண்டி 30,000 யூரோவினை அங்கத்துவ கட்டணமாக The Organization for Economic Cooperation and Development நிறுவனத்துக்கு செலுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. அரசாங்கத்துக்கு உரிய மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை (விடய இல. 20)

அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் செலவுகள் முகாமைத்துவம் மற்றம் மேற்பார்வை செய்யும் நோக்கில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 07ம் திகதி முதல் செயற்படும் வகையில் கொம்ப்ட்ரோலர் நாயக பணியகம் ஒன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்பணியகத்துக்கு 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அரசாங்கத்துக்குரிய வாகனங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், அமைச்சரவையின் மூலம் அத்தகவல்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.
அரசாங்கத்துக்கு உரிய வாகனங்களின் எண்ணிக்கை 57,961
அவற்றில் பயன்படுத்தத்தக்க வகையில் காணப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை
மத்திய அரசாங்கம்
அரச வியாபாரங்கள் 50,238
26,732
23,506
அவற்றில் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை
மத்திய அரசாங்கம்
அரச வியாபாரங்கள் 7,723
5,922
1,801
இவற்றில் தற்போது பயன்படுத்தவதற்கு முடியாத வகையில் காணப்படுகின்ற வாகனங்களை துரித கதியில் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

05. 'சொதுரு பியச' சலுகை கடன் வழங்கல் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்ற பயனாளிகளின் எண்ணிக்கையினை விரிவுபடுத்துதல் (விடய இல. 22)

2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழியப்பட்ட 'சொதுரு பியச' சலுகை கடன் வழங்கல் திட்டத்தின் மூலம் 2020ம் ஆண்டளவில் கடன் பெறுநர்களின் எண்ணிக்கையினை 100,000 ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2017ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 14ம் திகதி வரையில் குறித்த கடன் யோசனை முறையின் கீழ் 3,354 கடன் பெறுநர்கள் பதிவாகியுள்ளனர். இத்தொகையினை மேலும் அதிகரிப்பதற்காக குறைந்த வருமானம் பெறுகின்ற நபர்களின் வீடுகளின் பரப்பளவினை 750 சதுர அடியிலிருந்து 1,000 சதுர அடி வரை உயர்த்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. பேரே வாவியினை அண்மித்த வலயத்தினை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள காணியினை விடுவித்துக் கொள்ளல் (விடய இல.26)

பேரே வாவியினை அண்மித்த வலயத்தினை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள காணியினை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த காணியில் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா வலயத்தினை அமைப்பதற்காக ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த காணிப்பகுதியினை விடுவித்துக் கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்துக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அவ்விடத்துக்காக அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒன்றிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக யோசனைகளை கோருவதற்கும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. நிலக்கீழ் நீரினை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 28)

நிலக்கீழ் நீரினை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் குழாய் கிணறு தோன்றும் தொழிலாளர்களின் மூலம் பின்பற்ற வேண்டிய செயன்முறையானது, 2017-03-16ம் திகதிய 2010ஃ23ம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களின் மூலம் வரையறுக்கப்படுகின்றது. அச்சட்டத்திட்டங்களுக்கு அமைவாக செயற்படாத நபர்களுக்காக நீர் வளங்கள் சபை சட்டத்தின் உறுப்புரைகளின் கீழ் விதிக்கப்படுகின்ற தண்டப்பணத்தினை அதிகரிப்பதற்கும், குழாய் கிணறு தோன்றும் உபகரணங்களுக்காக வருடாந்த பதிவு கட்டணமொன்றை அறவிடுவதன் மூலம் குறித்த பணியில் தரத்தினை ஏற்படுத்துவதற்கும் நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. 'தச சில் மாதா' கல்வி நிறுவனங்களை விருத்தி செய்தல் (விடய இல. 29)

'தச சில் மாதா' கல்வி நிறுவனங்களுக்காக முறையான நிர்வாக கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கும், முறையான பாடநெறியொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், அந்நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக ஆலோசனை சபையொன்றை நியமிப்பதற்கும், அதன் பராமரிப்பு செலவினை அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்வதற்குமாக புத்தசாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. இரண்டாம் நகர நிலைபேறான அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கான கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 34)

இரண்டாம் நகர நிலைபேறான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உப வேலைத்திட்டங்களை திட்டமிடல், அடிப்படை கொள்முதல் மற்றும் முறையான நிர்வாக முறைமையினை இனங்காண்பதற்காக ஆலோசனை சேவையினை கொள்முதல் செய்வதற்கும், அத்தொழில்நுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் விஞ்ஞான துறை தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 39)

தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் விஞ்ஞான துறை தொடர்பில் பல்வேறு நன்மைகளை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 42)

முன்மொழியப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக இனங்காணப்பட்டுள்ள காணி பகுதியினை 02 கட்டங்களின் கீழ் இலங்கை முதலீட்டு சபைக்கு உரித்தாக்கிக் கொள்வது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.தலவதுகொடை, ஸ்ரீ ஜயவர்தனபுற வைத்தியசாலை வீதி வீடமைப்பு வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 45)

400 அலகுகளைக் கொண்ட தலவதுகொடை, ஸ்ரீ ஜயவர்தனபுற வைத்தியசாலை வீதி வீடமைப்பு வேலைத்திட்டத்தினை திட்டமிடல், கட்டுமானங்களை மேற்கொள்ளல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 6,997 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s. Yanjian Group Co. Ltd. கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கொழும்பு 05, காலிங்க மாவத்தை, குறைந்த வருமானம் பெரும் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் எஞ்சிய வேலைகளை முடிவுக்கு கொண்டு வரல் (விடய இல. 46)

கொழும்பு 05, காலிங்க மாவத்தை, குறைந்த வருமானம் பெரும் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் எஞ்சிய வேலைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிதிவசதிகளை திரட்டிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,898.7 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s. Maga Engineering (Pvt) Ltd. கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14.பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப கற்றல் மற்றும் அதனை முயற்சித்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல் (விடய இல. 47)

பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப கற்றல் மற்றும் அதனை முயற்சித்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தும் நோக்கில் தேவையான மென்பொருட்கள் மற்றும் தேவையான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 99.21 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் Oral Corporation நிறுவனத்துக்கு நேரடி ஒப்பந்தமொன்றாக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியின் நிர்மானப்பணிகளை நிறைவுச் செய்தல் (விடய இல. 48)

கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியின் நிர்மானப்பணிகளை துரித கதியில் நிறைவுச் செய்து பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எஞ்சிய பணிகளை 141.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவின் கீழ் இலங்கை இராணுவத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இரத்மலானை – மொரடுவை கழிவு நீர் வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் படி - I – கட்டம் II இனை செயற்படுத்தல் (விடய இல. 52)

இரத்மலானை – மொரடுவை கழிவு நீர் வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் படி - I – கட்டம் II இனை செயற்படுத்துவதற்காக 105.5 மில்லியன் யூரோ நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 75 மில்லியன் யூரோநிதியினை பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அந்நிதியினை பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் ஆய்வு நடவடிக்கைகள் காரணமாக உரிய அடிப்படையில் நீரினை வெளியிடுவதற்கு முடியாமல் போனமையினால் 2017ஃ2018 பெரும்போகத்தில் தமது பயிர் செய்கையினை கைவிட்டுள்ள கவுடுல்ல நீர்ப்பாசன திட்டத்தின் 4,000 விவசாய குடும்பங்களுக்கு சலுகை அளித்தல் (விடய இல. 57)

மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் ஆய்வு நடவடிக்கைகள் காரணமாக உரிய அடிப்படையில் நீரினை வெளியிடுவதற்கு முடியாமல் போனமையினால் 2017/2018 பெரும்போகத்தில் தமது பயிர் செய்கையினை கைவிட்டுள்ள கவுடுல்ல நீர்ப்பாசன திட்டத்தின் 4,000 விவசாய குடும்பங்களுக்காக 10,000 ரூபா வீதம் விசேட சலுகையினை, அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபா கூப்பனுக்கு மேலதிகமாக அடுத்து வரும் 03 மாத காலங்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 2018ம் ஆண்டில் அரச கடன் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி முறிகளை வெளியிடல் (விடய இல. 58)

2018ம் ஆண்டினுள் இலங்கை அபிவிருத்தி முறிகளை வெளியிடுவதன் மூலம் 3,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 456 பில்லியன் ரூபா) பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அம்முறிகளை விற்பனை செய்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. 2018ம் ஆண்டின் அரச கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சர்வதேச இறையாண்மை முறிகளை வெளியிடல் (விடய இல. 59)

2018ம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட அரச கடன் பெறும் எல்லையினுள், 2,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி வரையில், சர்வதேச இறையாண்மை முறிகளை வெளியிடுவதன் மூலம் திரட்டிக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. உமா ஓயா பல்தேவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதான நிலக்கீழ் மார்க்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவினால் பாதிப்புக்கு உள்ளான நிலையில் தமது வீடுகளில் இருந்து ஒதுங்கிய குடும்பங்களுக்காக பெற்றுக் கொடுக்கப்படுகின்ற வீட்டு வாடகை கொடுப்பனவினை தொடர்ந்தும் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 62)

உமா ஓயா பல்தேவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதான நிலக்கீழ் மார்க்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவினால் பாதிப்புக்கு உள்ளான நிலையில் தமது வீடுகளில் இருந்து ஒதுங்கிய குடும்பங்களுக்காக பெற்றுக் கொடுக்கப்படுகின்ற வீட்டு வாடகை கொடுப்பனவினை அவ்விடயம் தொடர்பில் பரிசீலனை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் சிபார்சின் பெயரில், தொடர்ந்தும் மேலும் 06 மாத காலத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.