அரசின் டிஜிட்டல் மாற்ற செயல்முறைக்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், அரச சேவையின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சேவையை அகில இலங்கை சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சிற்குச் சொந்தமான 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கலந்துரையாடலில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வறிவுறுத்தல்களை வழங்கினார்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் அரசின் திட்டத்தின்கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புப் பிரிவு, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, GovTec நிறுவனம், இலங்கை டெலிகொம் - மொபிடெல் நிறுவனம், கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன.
டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வழங்குவது தொடர்பான செயன்முறையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பொதுமக்கள் அரசுடன் மேற்கொள்ளும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இலகுபடுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள govPay திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து மோட்டார் வாகன அபராதக் கட்டணங்களையும் ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
பொதுமக்களின் வசதிக்காக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய டிஜிட்டல் சூப்பர் ஆப் (National Super App) திட்டம், இலங்கைக்குள் பணப் பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பிரபலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "National QR Drive" திட்டம், அரசு நிறுவனங்களுக்கு இடையே பாதுகாப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் சேவை வழங்கல் செயன்முறைகளை சீரமைக்கவுமான தேசிய தரவுப் பரிமாற்றம் (National Data Exchange - NDX), நாட்டிற்குள் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு வழியமைக்கும் Number Portability திட்டம், அரசு டிஜிட்டல் கொள்முதல் மற்றும் சேவைத் தளம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின்கீழ் அரசு சேவையை டிஜிட்டல் மயமாக்கி பொதுச் சேவை வழங்கல்களைத் திறம்படச் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள PIC-Net (Public Impact Champions Network) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் Data Transmission Unit (DTU) எனப்படும் தரவு பரப்புகை அலகு, AI தரவு மையம், அரசு மற்றும் பொதுச் சேவைத் துறைக்கான டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாக்கக் கொண்ட GovTech Academy பயிற்சி மற்றும் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது.
Govtec நிறுவனத்தைத் தொடங்குதல், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



