தேசத்தின் இசைக்குயில் எனப் போற்றப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி கலாநிதி நந்தா மாலினி அவர்கள் தனது இன்னுயிரை நீத்தார்.

ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக நாட்டின் இசை இலக்கியத்தில் அழியாத முத்திரையைப் பதித்த அவர், தனது 83வது பிறந்தநாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் காலமானார்.

1943 ஆகஸ்ட் 23 ஆந் திகதியன்று அளுத்கம, லேவந்துவ பிரதேசத்தில் பிறந்த நந்தா மாலினி அவர்கள் சிறு வயது முதல் பாடும் திறமையை வெளிக்காட்டினார்.

கொட்டாஞ்சேனை ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் காலத்தில், ரி.என். மார்கரெட் பெரேராவின் வழிகாட்டலில் இலங்கை வானொலியின் கருணாரத்ன அபேசேகரவின் 'சிறுவர் மன்றம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 'புது சாது' பாடலைப் பாடி இசைத்துறைக்கு நுழைந்தார்.

1961 ஆம் ஆண்டில் இலங்கையின் முதல் வர்ணத் திரைப்படமான 'ரன்முத்து தூவ' திரைப்படத்திற்காக நாரத திசாசேகரவுடன் இணைந்து 'கலன கங்கிகி ஜீவிதே' பாடலைப் பாடி திரைப்படப் பின்னணிப் பாடகியானார். இந்தியாவின் பாத்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 'சத்யயே கீதய', 'பவன', 'ஹேமந்தயேதி', 'பெம்பர லங்கா' போன்ற மேடை நிகழ்ச்சிகளையும், சிறுவர்களுக்காக 'சிந்து ஹோடிய' போன்ற அழியாத கலைப் படைப்புகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சிறந்த பின்னணிப் பாடகிக்காக 12 சரசவிய விருதுகள் மற்றும் 10 ஜனாதிபதி விருதுகள் உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளைப் பெற்று தனது திறமையை நிரூபித்தார்.

சமூக அநீதிகளுக்கு எதிராகப் பாடல்களைப் பாடியதால் ஒரு காலத்தில் இவரது பாடல்கள் வானொலியில் தடை செய்யப்பட்டன. 88-89 காலப்பகுதியில் 'சத்யயே கீதய' மற்றும் 'பவன' இசை நிகழ்ச்சிகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தன. இப்பாடல்களைப் பாடியதற்காக அன்றைய ஆட்சியாளர்களிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள்கூட விடுக்கப்பட்டன.  இவரது உடல் இன்று (21) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் நாளை (22) சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை இலக்கம் 30, விஜயபா மாவத்தையில் உள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். பிற்பகல் 3.30 மணிக்கு இறுதி ஊர்வலம் பொரளை மயானத்தை நோக்கி நகரும். மாலை 5.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும்.

மேலும், இவரது நினைவாக எந்தவொரு அனுதாபக் கூட்டமும் நடத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.