சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் நேற்று (06) கொழும்பு பேராயர் இல்லத்தில் கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தற்போது நாட்டில் பரவலான சமூக கவனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நீதி மற்றும் சிறைச்சாலைத் துறையின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட மறுசீர்திருத்தச் செயல்முறைகள் குறித்து கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு தெளிவுபடுத்துவதும், இது தொடர்பாக தவறான தகவல்களை சமூகத்தில் பரப்புவதற்கு பல்வேறு நபர்கள் முயல்வதால் அதுகுறித்த உண்மைத் தகவல்களை தெளிவுபடுத்துவதும் இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இங்கு இத்துறை சார்ந்த தற்போதைய சவால்களுக்குத் தீர்வு காண்பது, நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மக்களுக்கு தாமதமின்றி நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் தற்போது எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசாங்கத்தின் மறுசீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து இரு அமைச்சர்களும் கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு விரிவாக விளக்கமளித்தனர்.
அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயතිஸ்ஸ, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பொதுமக்கள் எந்த நேரத்திலும் அறிந்து கொள்ள முடியும் என்றும்இ அதற்கான மக்களின் உரிமையைப் பாதுகாப்பதாகவும், அந்த உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்களின் அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அவர்கள் அரச சேவையிலோ அல்லது தனியார் சேவையிலோ ஈடுபடும் போது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில விஷயங்கள் நடக்கக்கூடும் என்றும், எனவே அந்தப் பிரிவுகளில் மட்டுமே இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசியலமைப்பை திருத்துவதானால் அதற்கு காலம் அவசியமானது என்றும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் மக்களிடையே விரிவான விவாதம் தேவை என்றும் தெரிவித்தார்.



