கொல்லுப்பிட்டி வாலுகாராம மகா விகாரையின் வருடாந்த அசல பெரஹரா விழா இன்று (07) மாலை 6.30 மணிக்கு வீதி உலா வரவுள்ளதாக கொல்லுப்பிட்டி வாலுகாராமய உள்ளிட்ட பஞ்ச மகா விகாராதிபதி, ஷ்யாமோபாலி மகா நிகாயவின் ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் ரத்மலானை விகாரைப் பிரிவின் மகா உபாத்தியாயர், கொழும்பு திசை மற்றும் ஊவா மாகாணத்தின் பிரதான சங்கநாயக வணக்கத்திற்குரிய மகரகம நந்த தேரர் தெரிவித்தார்.
நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அரச அனுசரணை பெற்ற இந்த பெரஹரா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இம்முறை பெரஹராவைக் காண்பதற்கு வருகை தருமாறு பக்தர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இம்முறை பெரஹராவில் கண்டி, சபரகமுவ, தாழ்நில, நாட்டுப்புற மற்றும் தமிழ் நடனப் பிரிவுகள் உட்பட 28 நடனப் பிரிவுகள் இடம்பெறவுள்ளதுடன், சுமார் 15 யானைகளும் பங்கேற்கவுள்ளன.
1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அசல பெரஹரா, கொழும்பு நகரில் நடத்தப்படும் பழமையான பெரஹரா விழாவாக 63 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாக கொல்லுப்பிட்டி வாலுகாராம விகாராதிகாரி சாஸ்திரபதி உடவெல கோலித தேரர் தெரிவித்தார்.
இம்முறை பெரஹராவை முன்னிட்டு ஜூலை மாதத்தில் 'கப் சிட்டு' நிறுவியதன் பிற்பாடு (கால் நடுதல்) மத வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி போதி பூஜையும் பிரீத் போதனையும், 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை மலர் பெரஹராவும், 06 ஆம் திகதி பாரம்பரிய பாவாட பெரஹராவும் விகாரை வளாகத்தில் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பெரஹராவில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் கலந்துகொள்வதுடன், பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலுடன் (வஜிர கோவில்) ஒருங்கிணைந்து கணபதி தெய்வத்தின் சிலை மற்றும் வேல் வண்டியும் பெரஹராவின் ஓர் அங்கமாக வீதி உலா வரவுள்ளது.
பெரஹராவைக் காண்பதற்காக காலி வீதியை ஒட்டி பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் வாகன நிறுத்த வசதிகளுக்காக கொழும்பு மகாநாம கல்லூரியின் வாகன நிறுத்துமிடம் மற்றும் ஆர்.ஏ. டி மெல் மாவத்தையின் பம்பலப்பிட்டி பகுதியின் ஒரு தடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் கொண்ட பெரஹரா வீதி உலா, வாலுகாராம விகாரையில் தொடங்கி காலி வீதி வழியாக கொல்லுப்பிட்டி சந்தியை அடைந்து, லிபர்ட்டி சுற்றுவட்டம் வழியாக ஆர்.ஏ. டி மெல் மாவத்தை சென்று மீண்டும் விகாரையை வந்தடையவுள்ளது.



