போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) கூடிய 'ரடம எகட' (முழு நாடும் ஒன்றாக) தேசிய செயல்பாட்டு சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று முழு பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளமையையும், அது தடையின்றி வளர்ந்து வருகின்றமையையும் கருத்திற் கொண்டு, போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் அளப்பரிய பணத்தைச் சுற்றி உருவாகியுள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் 'ரடம எகட' தேசிய செயல்பாட்டு சபையில் விவாதிக்கப்பட்டது.

முழு சமூக அமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியை பலியெடுத்து வரும் போதைப்பொருள் பேரழிவை வேரோடு பிடுங்குவதற்காக நாட்டிற்குள் நடைமுறை சாத்தியமான செயல்பாட்டையும் விரைவான கருத்தியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் செயலில் உள்ளவர்களின் பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த தேசிய பேரழிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதிப் கட்டத்தில் உள்ளன. அதை விரைவாக வர்ரதமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்கு காரணமான அரசு இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரசு இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் சிறையில் உள்ள நபர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவின் அடிப்படையில் (5 கிராமிற்கும் குறைவு, 10 கிராமிற்கும் குறைவு என்ற அடிப்படையில்) குறிப்பிட்ட தரவு வகைப்பாட்டை சமர்ப்பிக்குமாறும், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கை கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அரசு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிப்பது மற்றும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதற்கு கடற்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கேமரா அமைப்புகளை நிறுவுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மேலும், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்ட திருத்த வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும், சட்ட வரைஞர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்து பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

பாடசாலை அமைப்பில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து நடைமுறைப்படுத்தும் 'மிதுரு பாசல' (நட்பு பாடசாலை) திட்டத்தின் முன்னேற்றமும் இங்கு மறுஆய்வு செய்யப்பட்டது. இதன்போது மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருளைப் பயன்படுத்தும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டுவது குறித்து ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஆபத்து அதிகமான மற்றும் மக்கள் தொகை அடர்த்தி அதிகமான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் குழந்தைகளிடையே போதைப்பொருள் பரவும் போக்கு அதிகரித்துள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டதுடன், அது குறித்து தேசிய சபையின் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளாரா என்பதை பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கும் வகையில், போதைப்பொருள் பரிசோதனை கருவிகளை (test kits) மருந்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், பெற்றோர்கள் பிள்ளைகள் குறித்து விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருளை விளம்பரப்படுத்தும் குழுக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், போதைப்பொருளுக்கு எதிரான கருத்தியலை சமூகமயமாக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வு பணியகம், இலங்கை பொலிஸ், முப்படை, சமூக சீர்திருத்த திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், தற்காலிக பராமரிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் 'பிரஜா சக்தி' திட்டம் ஆகியன இணைந்து போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து மறுஆய்வு செய்தன.

மேலும் ஆரம்பத்திலேயே கண்டறிதல், புனர்வாழ்வு, சட்டத் திருத்தம் மற்றும் நிறுவன மாற்றங்கள், மீண்டும் அடிமையாதலைத் தடுத்தல் மற்றும் பின்தொடர்தல், திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மறுஆய்வு செய்தல் மற்றும் அறிக்கை செய்தல் ஆகிய திருத்தப்பட்ட 06 உத்திகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பன்முக தேசிய மூலோபாய திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு மறுஆய்வு செய்யப்பட்டது.

அஸ்கிரி பிரிவின் அனுநாயக்க நாரம்பனாவே ஆனந்த தேரர், ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க வலபோட குணசிரி, குப்பியாவத்தே போதானந்த தேரர், ஜூட் பெர்னார்ட் தந்தை, ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள், ஷேக் முகமது அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட மதத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் படையினரின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.