அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அச்சிடும் திறனை அதிகரிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட புதிய இருபக்க நான்கு வண்ண (Two-sided Four-color) அச்சு இயந்திரத்தின் அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதும், நவீனமயமாக்கப்பட்ட அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.documents.gov.lk மீண்டும் ஆரம்பித்து வைப்பதும் இன்று (11) இடம்பெறவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அரசாங்க அச்சுத் திணைக்கள வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அச்சுத் திணைக்களத்தின் திறனையும் அச்சிடும் கொள்ளளவையும் மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய இருபக்க நான்கு வண்ண அச்சு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்தின் அச்சிடும் தேவைகளை மிகவும் திறம்படவும் விரைவாகவும் பூர்த்தி செய்ய முடியும்.

சுமார் 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த புதிய அச்சு இயந்திர அறிமுகத்துடன், அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் மிகவும் இலகுவான மற்றும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட www.documents.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளமும் இன்று மீண்டும் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் அச்சுச் சேவைகள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் ஊடகம் ஊடாக பொதுமக்கள் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.