அடுத்த ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாங்கம் (நிகழ்வு நேரங்கள் அடங்கிய சீட்டு) புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் இன்று (17) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கம கெதர திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த முறை சிங்கள புத்தாண்டுக்கான பஞ்சாங்கம் தொடர்பாக ஜோதிடர்களிடையே ஏற்பட்ட விமர்சனங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளால் பொதுமக்கள் எதிர்கொண்ட அசெளகரியங்களை கருத்திற் கொண்டு, இம்முறை புதிதாக நிறுவப்பட்ட பஞ்சாங்கக் குழு உறுப்பினர்களின் பொதுவான உடன்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2027 சிங்கள புத்தாண்டுக்கான பஞ்சாங்கம், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் கம கெதர திஸாநாயக்கவினால் மல்வத்து மற்றும் அஸ்கிரி உபய மகா விகாரைகளின் மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கலைக்கப்பட்டிருந்த பஞ்சாங்கக் குழு, கலாச்சார அமைச்சினால் மீண்டும் நிறுவப்பட்டதாகவும், பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 19 ஜோதிடர்களைக் கொண்டு தேசிய பஞ்சாங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தார்.
பஞ்சாங்கக் குழுவிற்குள் உடன்பாடு இல்லாமல் நிகழ்வு நேரங்களை வெளியிட்ட பின்னர், குழுவின் சில உறுப்பினர்கள் அவற்றை விமர்சிக்கும் போது பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர் என்றும், இம்முறை அதற்கு இடமளிக்காமல் பொதுவான உடன்பாட்டுடன் நிகழ்வு நேரங்களை முன்னதாகவே வெளியிடுவது நல்லது என்றும் இதன்போது மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிபூஜை திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்களுக்கும் அனுநாயக்க தேரர் தேரர்களுக்கும் பஞ்சாங்கத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கம கெதர திஸாநாயக்க, பஞ்சாங்கக் குழுவை மீண்டும் அமைப்பதற்கு கலாச்சார விவகார அமைச்சு தீர்மானித்த பின்னர், அதற்காக விண்ணப்பிக்குமாறு பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், அதற்கு அமைய பெருமளவிலானோர் விண்ணப்பித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அவர்களில் மிகவும் பொருத்தமான 19 பேர் பஞ்சாங்கக் குழுவிற்காகத் தேர்வு செய்யப்பட்டதாகவும், கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரினால் இன்று (17) பஞ்சாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என தேர்தல் காலத்தில் சிலர் எவ்வித ஆதாரமுமின்றி அறிக்கைகளை வெளியிட்டதாகவும், விகாரைகளில் புத்த பூஜைகளை நடத்தவோ, தலதா பெரஹரவை நடத்தவோ முடியாமல் போகும் எனக் கூறியவர்களுக்கு, தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மூலம் அவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.



