கிராமப்புற மக்களின் பன்முக வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய வியாபாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” நிகழ்ச்சித்திட்டம் இன்று (02) ஆரம்பமாகிறது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 25,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் ஆரம்பக் கட்டமாக நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் 1,000 திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விழாஇ கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகஸ்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் பின்வல பகுதியில் கிராமிய அபிவிருத்திஇ சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேபோன்று நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்திலான பிரதான நிகழ்ச்சித்திட்டங்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த பிரதான திட்டத்தின்கீழ் பின்வல அணைக்கட்டு (அமுண) புனரமைப்பு மற்றும் அதன் பக்கச்சுவர்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தது 3 முதல் 5 திட்டங்களின் வேலைகளை ஆரம்பிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
‘பிரஜா சக்தி’ தேசிய வியாபாரத்தின் கீழ் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகளினால் அடையாளம் காணப்பட்ட உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் திட்டங்களுக்குத் தேவையான நிதிகள் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதுடன், கிராமப்புற மக்களின் பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்கு இதுவொரு முக்கியமான படியாக அமையும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.




