இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடலொன்று நேற்று (03) நடைபெற்றது.
இதன்போது, அரச ஊழியர்களுக்காக மின்-கற்றல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் எழுத்தறிவைக் கட்டாயமாக்குதல், சைபர் பாதுகாப்பு அறிவை வளர்த்தல் மற்றும் கைபேசிகள் ஊடாக 'மைக்ரோ லேர்னிங்' முறையொன்றைச் செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அரச சேவையை நபர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பிலிருந்து, கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட நவீன சேவை வடிவமாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இவ்வேலைத்திட்டம் முப்பரிமாணத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ளதுடன், தற்போது சேவையிலுள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்தல், புதிய நியமனங்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவைக் கட்டாயமாக்குதல் மற்றும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப மேம்படுத்துதல் என்பன இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் முதற்கட்டமாக, சைபர் பாதுகாப்பு குறித்த அடிப்படை விழிப்புணர்வுப் பாடநெறிகள் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் மற்றும் கூட்டுக் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளை அரச அதிகாரிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, அரச நிர்வாக அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதுடன், தொடர்புடைய தரப்பினருடன் மேலதிகமாகக் கலந்துரையாடி அறிவியல் ரீதியான திட்ட வரைபொன்றைத் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.




