உலக சுற்றுச்சூழல் தினம் (05) இன்றாகும். தேசிய சுற்றுச்சூழல் தின விழா ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. “காலநிலை நடவடிக்கைகளுக்கான உலகளாவிய அழைப்பு என்பது இம்முறை சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாகப் பெயரிடப்பட்டுள்ளது.
இருப்பினும்இ “துளிர்க்க இடமளிப்போம் - காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாட இலங்கை தீர்மானித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 (இன்று) வரை சுற்றுச்சூழல் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமையஇ சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினால் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, இம்முறை சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரிடிகல காப்பகம், அலியாவெடுனு வெவ காப்பகம், புலேகல காப்பகம், கோன்கெட்டியாவ காப்பகம் மற்றும் கல்லஞ்சிய காடு ஆகிய ஐந்து காடுகளும் பாதுகாக்கப்பட்ட காப்பகங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன. ‘குடா புபுல’ நீர்ஊற்று காப்பகமும் புதிய காப்பகமாக மாற்றப்பட்டது. இந்த ஐந்து காப்பகங்கள் உட்பட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட காப்பகங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன. இம்முறை காப்பகங்களாகப் பெயரிடப்பட்ட ஐந்து காடுகளும் அனுராதபுரம் மாவட்டத்திலேயே அமைந்துள்ளன என்பதுடன், இக்காப்பகங்கள் சுமார் 2169 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டதாகும்.
சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சினால் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காடழிப்பைத் தடுப்பதற்காக ‘வனப் பாதுகாப்பு’ என்ற பெயரில் புதிய திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. முப்படைகள், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காடழிப்புத் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




