ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் உருவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி, பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா (Sri Lanka CERT) கணினி அவசர காலப் பதிலளிப்புத் ஒன்றியம் அமைப்பிற்குப் பல புகார்கள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உருவங்களை மோசடியாகப் பயன்படுத்தி இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. Deep Fake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வஞ்சகமாகத் தயாரிக்கப்பட்ட இந்த வீடியோக்கள் மூலம் பண மோசடி செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை முதலீடு செய்து மாதாந்தம் லாபம் ஈட்டுமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கோரிக்கை விடுப்பது போன்று இந்த போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்கா சிஇஆர்டி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான போலிச் செய்திகளாகவும் இவ்வாறான படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த போலி வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் தோன்றும் இணைப்பிற்குள் (link) சென்று பணத்தை முதலீடு செய்து லாபம் பெற்றுக்கொள்ளுமாறு அந்தச் செய்திகள் மூலம் கோரப்படுவதாக 'சேர்ட்' (ஊநுசுவு) நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான இணைப்புகள் (link) ஊடாக இணையப் பயனாளர்களைப் போலி இணையத்தளங்களுக்கு திசைதிருப்பி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் திருடியுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இணையத்தில் உலா வரும் இதுபோன்ற போலி வீடியோக்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு 'சேர்ட்' நிறுவனம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த இணைப்புகளுக்குள் பிரவேசித்து உங்களது பெறுமதிமிக்க தரவுகளை மோசடிக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் எனவும், இவ்வாறான போலிச் செய்திகள் மற்றும் மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா CERT நிறுவனம் பொதுமக்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.