இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கான உயர்தர தொழில்முறைத் தரங்களை அறிமுகப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியாகப் பேணுதல் ஆகிய நோக்கங்களுக்காக, "இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனம்" நிறுவனத்தை நிறுவுவதற்கான புதிய சட்டமூலம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில், 2026 ஜூன் மாதம் 05 ஆம் திகதியிட்டு இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்நாட்டின் ஊடகத்துறையின் தரத்தை உயர்த்துதல்,  ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சட்டரீதியான கட்டமைப்பிற்குள் முறைப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து தேவையான சட்ட விதிகளுக்கு வழிவகை செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கை ஊடகத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்துநிற்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பட்டய நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.