பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக அறிவித்து, நேற்று (28) ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள், அதேபோல் அரசாங்க அச்சகம் உட்பட அரச ஊடகங்கள் அனைத்தும் இதில் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பிந்தைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீராக நடத்த அத்தியாவசியமானதாகவும், அவற்றுக்கு இடையூறு அல்லது தடங்கல் ஏற்படக்கூடும் என்பதையும் கவனத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்ட சேவைகள் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க அவர்களின் கையொப்பத்துடன் நேற்று (28) இரவு இந்த அத்தியாவசிய சேவை வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் பின்வருமாறு:
1. மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.
2. பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு உட்பட எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம்.
3. மருத்துவமனைகள், நர்சிங் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, சேர்த்தல், பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகள், பணிகள் மற்றும் தொழில்கள்.
4. பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள்.
5. நெடுஞ்சாலைகள், பாலங்கள், கழிவகற்றும் கான்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உட்பட, சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள், சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
6. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் தொடர்பான அனைத்து சேவைகள்.
7. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல், பாதுகாப்பு மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.
8. அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், விவசாயம் ஆராய்ச்சி உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் அதிகாரிகள், “க்ளீன் ஸ்ரீ லங்கா” மத்திய குழு அதிகாரிகள் உட்பட, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கள மட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அல்லது மேற்கொள்ளத் தேவையான அனைத்து சேவைகள், பணிகள் மற்றும் தொழில்கள்.
9. ஆம்புலன்ஸ் (கிலன் ரத) சேவைகள்.
10. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்பீட்டு சேவைகள்.
11. குடிநீர், மின்சாரம், கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகள், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் (மலக்கழிவு அகற்றல் உட்பட), கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் தொடர்பாக உள்;ராட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகள்.
12. நீர்ப்பாசனத் துறையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.
13. தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.
14. தாழ்நில நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அனைத்து சேவைகள்.
15. விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.




