உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் ஈதுல் அல்ஹா (ஹஜ்) திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, அல்லாஹ்வின் மீது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி மற்றும் அளவற்ற தியாகத்தைச் சின்னமாகக் காட்டும் இந்த ஹஜ் நினைவு, இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் மக்கா ஹஜ் யாத்திரையுடன் தொடர்புடையதனால் சிறப்புமிக்கதாகும்.
குழப்பமும் கலவரமும் நிறைந்த இன்றைய உலகில், மனிதர்களிடையே நிலைநிறுத்தப்பட வேண்டிய பரஸ்பர பிணைப்பின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் விரிந்த ஒரு முன்னுதாரணமாகவும் ஹஜ் திருநாள் விளங்குகிறது. இனம், சமூக அந்தஸ்து என்பவற்றை புறக்கணித்து, உலகின் பல திசைகளிலிருந்தும் வந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து மதச்சடங்குகளை நிறைவேற்றும் இந்தத் தருணம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் உன்னதமான ஒரு முன்மாதிரியை உலகிற்கு வழங்குகிறது என நான் நம்புகிறேன்.
மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையால் உலகம் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு மத்தியிலும், மக்கா ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நினைவுகூருவது, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வாழ்வில் காட்டிய அளவிலாத தியாகமும் அர்ப்பணிப்பும்தான்.
சுயநலத்தை விடப் பிரர் நலமே மேலோங்கும், அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர கருணையால் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் அரசின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தை கற்பிக்கும் ஹஜ் நினைவின் வழிகாட்டுதல்களை மேலும் மேலும் எங்கள் வாழ்க்கைக்கு நெருக்கமாக்கிக் கொள்வோம் என நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆன்மீக மதிப்புகளால் இலங்கை சமூகத்தை மேலும் மேலும் வளப்படுத்தி, அனைவருக்கும் பயன் அளிக்கும் ஒரு மேம்பட்ட நாட்டை உருவாக்க சகோதரத்துவத்துடன் முன்னேற அனைவரையும் அழைக்கின்றேன். இதனூடாக, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் உன்னதமான
ஈதுல் அல்ஹா திருநாள் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
ஈத் முபாரக்!
அனுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு



