புத்தரின் திருவாழ்வின் மூன்று மகத்தான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் திருநாள், உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் மிக உயரிய பண்டிகையாகும். பௌத்த பாரம்பரியங்களால் செழுமை பெற்ற வளமான பண்பாட்டை உடைய இலங்கை மக்கள், உலகளாவிய பௌத்தர்களுடன் ஒன்றிணைந்து இந்தப் புனிதத் திருவிழாவை ஆழ்ந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
புத்த தர்மம் என்பது, முழு உலகிற்கும் நடைமுறையில் பொருந்தக்கூடியதும், காலத்தால் அழியாததும் ஆகிய அமைதியின் செய்தியை எடுத்துச் செல்லும் உன்னதமான தத்துவப் போதனையாகும். கௌதம புத்தபகவான் உபதேசித்த முழு தர்ம போதனைகள், அன்பு, கருணை, காருண்யம், பெருந்தன்மை எனும் நான்கு பிரம்மவிஹாரங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது.
அதேபோல், அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த உன்னதமான பாடத்தை புத்தபகவான் உள்ளிட்ட அனைத்து மகான்களும் போதித்த தர்மம் எடுத்துரைக்கிறது. வெளி உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முன், மனிதனின் உள்ளார்ந்த ஆன்மீக அமைதி உறுதியாக வேண்டும் என்பதைக் புத்த தர்மம் வலியுறுத்துகிறது. பொதுநல நோக்குகளுக்காக சமூகம் ஒன்றிணைவதற்கு புத்த தர்மம் காட்டும் இந்த உள்ளார்ந்த அமைதியான அணுகுமுறை, இதுவரை இல்லாத அளவிற்கு இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானது என்பதை நாம் உணர வேண்டும். சமீபத்தில் இலங்கையில் பாதயாத்திரை மேற்கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர ஸ்வாமிகள் கொண்டு வந்த செய்தியும் இதுவே என நான் நம்புகிறேன்.
மேலும், வெசாக் கொண்டாட்டம் ஒரு மத விழாவாக மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையின் அடையாளம், சமூக ஒற்றுமை மற்றும் கலைச்சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு மகத்தான பண்பாட்டு திருவிழாவாகவும் விளங்குகிறது. வெசாக் காலத்தில், கொள்கைப் பூஜைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடத்தப்படும் தானம், சீலம், தியானம்இ தர்ம போதனை நிகழ்ச்சிகள் மட்டுமன்றிஇ ஆமிச பூஜைகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகள், பௌத்த பக்திப் பாடல்கள், அழகிய விளக்குக் கூண்டுகள், கண்கவர் தோரணங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை, பௌத்தர்கள் மட்டுமல்லாது அனைத்து மதங்களையும் சேர்ந்த இலங்கையர்களின் ஒன்றுபட்ட பங்கேற்பால் மேலும் சிறப்புபெறுகின்றன. இதன் மூலம், அனைத்து இனங்களுக்கிடையேயான பரஸ்பர புரிதல்இ ஒற்றுமை மற்றும் இணைந்து வாழ்தல் வளர்க்கப்படும் இந்த வெசாக் திருவிழா, ஒற்றுமையின் ஒரு சின்னமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அஹிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிர்களிடமும் பரந்து விரிந்த மைத்ரியை முன்னிறுத்தும் புத்த தர்மத்தின் சாரங்களை எங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் இணைத்துக்கொள்ள அனைவரையும் அழைத்து, தர்மத்தின் குளிர்ச்சியில் அனைத்து உள்ளங்களும் அமைதியடைந்து மகிழும் ஒரு பாக்கியமிக்க வெசாக் திருநாள் அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
அனுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு




