2026ஆம் ஆண்டில் 2570-ஆவது ஸ்ரீ புத்த வருட அரச வெசாக் விழா எதிர்வரும் மே 27ஆந் திகதி ஜனாதிபதியின் தலைமையில் மாத்தறை, திஹகொடவில் உள்ள மிதெல்லவெல புராண விகாரையில் ஆரம்பமாகவுள்ளதாக பௌத்த சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

அரச வெசாக் விழா குறித்துத் தெரிவிப்பதற்காக, இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஜூன் 02 ஆந் திகதிவரை ஒரு வார காலத்திற்கு மாத்தறை மாவட்டம் முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு வெசாக் விழாவின் கருப்பொருள் "நன்மைக்காக ஒன்றிணைவோம்" என்பதாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இத்தகைய சூழலில் இது போன்ற ஒரு கருப்பொருள் நமக்குத் தேவை என்று கூறிய அமைச்சர், வருடாந்தம் தொடர்ச்சியாக அரசின் ஆதரவின் கீழ் புத்தசாசன அமைச்சின்  வழிகாட்டுதலின் கீழ், சாசன ரக்ஷகாய சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த அரச வெசாக் விழா, நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.

புத்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த விழாவைப் போல வேறு எந்த விழாவும் இவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆண்டு மாத்தறை மாவட்டத்தில் இதற்காகப் பல பெரிய நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.