இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், MMC–ITN கல்வி வளாகம் நேற்று (7) கல்வித்துறை சிறப்பம்சம், மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பிற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி, வளர்ச்சியின் புதிய கட்டத்தை ஆரம்பித்திருந்தது.
நாட்டின் தொழில்முறை ஊடகக் கல்வியில் நீண்டகாலமாக நிலவி வந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட MMC–ITN கல்வி வளாகம், இலங்கையின் முன்னோடி மற்றும் முன்னணி அரச ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் (ITN) வழிகாட்டலின் கீழ் இயங்குகிறது. தற்போது, இவ்வளாகமானது, ஐந்து சான்றிதழ் மட்டத்திலான பாடநெறிகளை வழங்கி வருவதுடன், இந்த ஆண்டு முதல் அவற்றை டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு (Degree) மட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மூன்று புதிய டிப்ளோமா பாடநெறிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கோட்பாட்டு அறிவு மற்றும் விரிவான நடைமுறைப் பயிற்சிகள் இரண்டையும் வழங்கும் தனது நோக்கத்திற்கு இணங்க, MMC–ITN கல்வி வளாகம் மாணவர்களுக்கு மிக உயர்ந்த தரத்திலான தொழில்சார் கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, ITN நிறுவனத்தின் பரந்த உள்கட்டமைப்பு மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, நேரடி நடைமுறைப் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, MMC–ITN கல்வி வளாகம் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதுமையான மாணவர் பரிமாற்றத் திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், சீன மக்கள் குடியரசின் சென்யாங் சிட்டி பல்கலைக்கழகத்தின் (Shenyang City University) தூதுக்குழுவொன்று இன்று ITN வளாகத்திற்கு வருகை தந்தது. இந்தத் தூதுக்குழுவை ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ITN தலைவர் திரு. பிரியந்த வெதமுல்ல ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்கள், MMC–ITN வளாகத்திற்கும் சென்யாங் சிட்டி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்ற வாய்ப்புகள் மற்றும் எதிர்கால கூட்டுத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தின. வருகை தந்த தூதுக்குழுவினர் MMC–ITN வளாகத்தினையும் அதன் வசதிகளையும் பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு வழங்கப்படும் நடைமுறைப் பயிற்சிச் சூழலையும் அவதானித்தனர். மாணவர்களை உண்மையான ஊடகத் தயாரிப்பு செயல்முறைகளில் ஒருங்கிணைப்பது குறித்து தூதுக்குழுவினர் தமது விசேட பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறை முடிவுகளாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். MMC–ITN வளாகம் போன்ற நிறுவனங்கள் ஊடகக் கல்வியில் உலகளாவிய போக்குகளுடன் தேசிய அபிவிருத்தி இலக்குகளை சீரமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். கல்விச் சீர்திருத்தம் மற்றும் சர்வதேச ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இத்தகைய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



