டிட்வா சூறாவளியுடன் ஏற்பட்ட பேரழிவு நிலை காரணமாக சேதமடைந்த வீடுகளை மீளமைப்பதற்காக வழங்கப்படும் ரூ. 50 இலட்சம் நிவாரணம், ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்துக்குள் வழங்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அவர் இதனை, ஜனவரி (06) அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

டிட்வா சூறாவளி காரணமாக பேரழிவுக்கு உள்ளான வீடுகளை சுத்தம் செய்ய வழங்கப்படும் ரூ. 25,000 நிவாரணம் இதுவரை 92 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 2026 ஜனவரி 05 நிலவரப்படி, வழங்க தகுதியான 452,658 வீட்டு அலகுகளில் 415,818 வீடுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ரூ. 25,000 நிவாரணம் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களிலும் அதிக சதவீதத்தில் வழங்கல்கள் நிறைவடைந்துள்ளன. வழங்கப்படாத 36,840 வீட்டு அலகுகளில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்தில் உள்ளதாகவும், உறுதிப்படுத்தல் பணிகளை நிறைவு செய்து விரைவில் வழங்கல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ரூ. 50,000 நிவாரணத்திற்காக 2026 ஜனவரி 05 வரை 146,475 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், அவற்றில் 92,697 வீட்டு அலகுகளுக்கு நிவாரணம் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, நுவரெலியா, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நிவாரணம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 53,000 வீட்டு அலகுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இடரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ. 15,000 நிவாரணத்திற்கு மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 10,000 மேலதிக நிவாரணமும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 2026 ஜனவரி 05 நிலவரப்படி இதற்காக 200,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 31ஆந் திகதியாகும் போது 113,581 குழந்தைகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பேரழிவால் உயிரிழப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், இறந்தவரின் நெருங்கிய உறவினருக்கோ அல்லது முழுமையான ஊனமுற்ற நிலைக்கு உள்ளான நபருக்கோ ரூ. 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படுவதுடன், இது பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முழுமையாக சேதமடைந்த 6,056 வீடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், முழுமையாக சேதமடையாத போதிலும் மீளமைக்க முடியாத வீடுகளையும் உள்ளடக்கி, பொதுவாக சுமார் 25,000 புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.