சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

 

35,000-க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி பேரவலத்திற்கு இன்று (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சுனாமி மற்றும் பல்வேறு பேரிடர்களால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி இடம்பெறுகின்றது.  சுனாமியால் உயிரிழந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் “தேசிய பாதுகாப்பு தின” பிரதான நிகழ்ச்சி இன்று காலை காலி நகரில் உள்ள “பெரெலிய சுனாமி நினைவுச் சின்னம்” அருகில் நடைபெறும்.

மேலும் இந்த வருட “தேசிய பாதுகாப்பு தின” நிகழ்ச்சிகளை முன்னிட்டு, டிட்வா புயலால் நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட மட்டத்தில் அனைத்துத் மதங்களையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரழிவில் 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதுடன், பில்லியன் கணக்கில் மதிப்பிடப்படும் சொத்துக்கள் சேதமானது.

இலங்கையில் சுனாமி அபாயம் ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தால், அதனை உறுதிப்படுத்துவதற்கு பேரிடர் முகாமைத்துவ மையம், வானிலையியல் திணைக்களம் அல்லது புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியகங்களை விசாரிக்கலாம். பேரிடர் முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி எண் 117 மூலம் 24 மணிநேரமும் மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறே, சுனாமி காலத்தில் பாதிக்கப்பட்ட 3050 என்ற எண்ணைக் கொண்ட எஞ்சின் இணைந்த ரயிலை நினைவுகூர்ந்து, புகையிரதப் பொது முகாமையாளர் உட்பட உயர் அதிகாரிகள் குழு இன்று (26) காலை 9 மணிக்கு பெரெலிய ரயில் நிலையத்திற்கு வருகை தந்து நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.