உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் தலைமையிலான ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகர் குழு, கடந்த 27 ஆம் தேதி வெகுஜன ஊடக அமைச்சில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்னவுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தியது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் ஊடகங்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், இலங்கையில் ஊடகவியலாளர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியின் அவசியத்தை கலாநிதி கௌசல்யா அரியரத்ன உயர் ஸ்தானிகரிடம் குறிப்பாக வலியுறுத்தினார்.
கலந்துரையாடலின் போது, ஊடக செயல்திறன், சமூக ஊடக ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒழுங்குமுறை பொறுப்புகள் போன்ற விடயங்களில் ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த நடைமுறைகளை (Best Practices) உயர் ஸ்தானிகர் பகிர்ந்து கொண்டார். ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ஆஃப்காம் (Ofcom) மற்றும் மெட்டா (Meta) மற்றும் எக்ஸ் (x) போன்ற நிறுவனங்களின் ஒழுங்குமுறை அனுபவங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய இராச்சிய குழுவில் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் தவிர, அரசியலுக்கான முதன்மை செயலாளர் டாம் சோப்பர் மற்றும் அரசியல் ஆலோசகர் இன்சாஃப் பக்கீர் மார்க்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



