தாய்லாந்தின் 10ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் சார்பில் அரச மரக்கன்றை தாய்லாந்துக்கு கொண்டு சென்ற புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, தாய்லாந்து இளவரசருக்கு ஜனாதிபதி அவர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அரச மரக்கன்றையும் 19ம் திகதி கையளித்தார்.
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் தேரவாத புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையாக இந்நிகழ்வு கருதப்பட்டதுடன், முடி இளவரசருக்கு இராஜதந்திர ரீதியில் கிடைத்த முதல் பரிசு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா மற்றும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அந்நாட்டு விசேட பிரதிநிதிகளின் பங்களிப்பில் குறித்த அரச மரக்கன்று தாய்லாந்தின் அயோத்யா நகரில் அமைந்துள்ள வஜிரதம்மாராம விகாரையில் நடப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துடன் அனுப்பிவைக்கப்பட்ட இந்த மகத்துவம் வாய்ந்த பரிசானது இரு நாடுகளுக்கிடையிலான நட்பின் அடையாளம் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.
அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர் மற்றும் தாய்லாந்து பிரதான சங்க நாயக்கர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.