கிராமிய மட்டத்தில் உள்ள பாரம்பரிய கலைஞர்களின் அறிவு, ஆற்றல்களை அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் முடிவோடு முடிவுற இடமளிக்காது அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று அவசியமாகுமென தெரிவித்ததோடு, இவ்விடயம் தொடர்பில் அமைச்சுக்களின் மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுட்டிக்காட்டினார்.

29ம் திகதி பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம் அரச விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் கலைத்துறையின் மேம்பாட்டுக்காக சிறப்பான சேவைகளை ஆற்றிய கலைஞர்கள் 200 பேருக்கு இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விசேட விருதுகளை பெற்றோருக்கு ஜனாதிபதி அவர்கள் விருதுகளை வழங்கிவைத்தார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழா இம்முறை 34வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித நேயத்துடன் கூடிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக கலைஞர்கள் நிறைவேற்றும் செயற்பணிகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்வாறான விருது விழாக்களை ஏற்பாடு செய்வதற்கான ஊடாக கலைஞர்கள் தேசத்திற்காக நிறைவேற்றும் விசேட செயற்பணிகளை அனைவரும் அறிந்துகொள்ள முடிகின்றதென தெரிவித்தார்.
உள்நாட்டு திரைப்படத்துறை, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகக்கலை உள்ளிட்ட ஆவணக் கலைகளை பாதுகாத்து, மக்கள் மத்தியில் சிறந்த கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக அன்று தொட்டு இன்று வரை பணியாற்றிவரும் சகல கலைஞர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஹேமா பிரேமதாச அம்மையார், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் மொஹமட், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல, பேராசிரியர் ஆரியரத்ன கலுஆரச்சி, சரத்சந்ர எதிரிசிங்க மற்றும் சிரேஷ்ட கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.