முன்வைக்கப்பட்டுள்ள இச் செயற்றிட்டத்தின் அபிவிருத்தி நோக்கமானது, “நாட்டின் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் தொற்றா நோய்களால் இலகுவில் பாதிக்கப்படத்தக்க சனத்தொகையினரில் அந்நோய்களைக் கண்டுபிடித்து முகாமைத்துவம் செய்தலை முன்னிலைப்படுத்தி, அடிப்படைச் சுகாதார சேவைகளின் தரத்தையும் பயன்பாட்டையும் அதிகரித்தல்” என்பதாகும்.

இந் நோக்கமானது, இலங்கையின் அடிப்படைச் சுகாதார சேவை முறைமையை மீளச் சீரமைத்தலூடாகவும், பலப்படுத்துவதனூடாகவும் அடையப்படும். விசேடமாக, இச் செயற்றிட்டம், கொள்கைகளையும் தரங்களையும் உருவாக்குவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் மற்றும் இந்த முறைமைக்குரிய துணை முறைமைகளுக்கும் ஆதரவளிக்கும்.
இச் செயற்றிட்டத்தின் அடிப்படைப் பயனாளர்கள், நாட்டின் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்த, அடிப்படைச் சுகாதார சேவை அரச நிறுவனங்களைப் பயன்படுத்துவோராக இருப்பர். இவ்வாறான பயனாளர்கள் சனத்தொகையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாக இருக்க முடியும். இச் செயற்றிட்டத்தினால் பயன்பெறும் சமூகங்களுள், கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது பாதிக்கப்படத்தக்க அபாயத்திலுள்ளவர்கள் இலக்காகக் கொள்ளப்படுவர். தொற்றா நோய்களுக்கான சேவைகளைப் பலப்படுத்தும் உபாயங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான கிடைக்கத்தக்க வளங்களை உருவாக்குவதிலும், மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் சுகாதார சேவை ஆளணியினரது திறன்களை மேம்படுத்துவதிலும் இச் செயற்றிட்டம் தலையீடு செய்யும்.
இச் செயற்றிட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்:
• பொதுச் சுகாதார சேவை முறைமையை மீளச் சீரமைத்துப் பலப்படுத்தும் உபாயங்களை நடைமுறைப்படுத்துதல்
• செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளும் புத்தாக்கத்திற்கான நிதிகளும்
• எதிர்பாரா அவசர தேவைகளுக்கான பகுதி
செயற்றிட்டத்தை இயக்கும் குழுவொன்று தாபிக்கப்படுவதுடன், அது சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் உள்ளக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களது இணைத் தலைமையின் கீழ் செயற்படும். நிதி ஆணைக்குழுவின் செயலாளர், ஒன்பது மாகாணங்களினதும் பிரதம செயலாளர்கள், சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுப் பிரதிநிதிகள் மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மேலதிக அங்கத்தவர்களாகச் செயற்படுவார்கள்.
மேற்படி செயற்றிட்டத்திற்கான நிதியளிக்கும் ஒப்பந்தமானது, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க அவர்களாலும், உலக வங்கியின் சார்பில் இலங்கைக்கும் மாலதீவுக்குமான அதன் பணிப்பாளர் திருவாட்டி. இட் இஸட் ஸ்வராயி – றித்திஹூ (Ms. Idah Z Pswarayi – Riddihough) அவர்களாலும், 2019 ஜனவரி 23 இல், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.