பௌத்த சாசனத்தின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியால் ஆற்றப்பட்ட இப்பணி மகா நாயக்க தேரர்கள் பாராட்டு

புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதைப் போன்றே அதை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
புனித தேரவாத பௌத்த தர்மத்தின் மகத்துவத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பேணி பாதுகாக்கும்வண்ணம் புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு சங்கைக்குரிய மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 05ம் திகதி முற்பகல் மாத்தளையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அலுவிகாரையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களும், எதிர்கால தலைமுறையினரும் மிகச் சரியாக பாதுகாத்து பேணும் நோக்குடன் மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்காக ஜனாதிபதி அவர்களால் ஆற்றப்பட்ட பணிக்கு மகாசங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
விசேட உரையாற்றிய சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அநுநாயக்கர் வண. நியங்கொட விஜித்த சிறி தேரர் பௌத்த சாசனத்திற்கும் சம்பிரதாயங்களின் முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதி அவர்களினால் ஆற்றப்பட்ட இந்தப்பணி பாராட்டுக்குரியதெனத் தெரிவித்தார்.
பௌத்த போதனைகள் தவறாக போதிக்கப்படும் இந்த காலகட்டத்தில் அரச தலைவர் என்ற வகையில் இவ் விடயத்தில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தி மேற்கொண்ட இந்த பணி அவரது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு என இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்தார்.
இந்நிகழ்வைப் போன்றே 1818ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின்போது தேசத் துரோகிகள் என அறிவிக்கப்பட்ட எமது தேசிய வீரர்களின் பெயர் பட்டியலை தேசத்தின் வீரர்கள் என்று அறிவிப்பதற்கு ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் மகா சங்கத்தினரின் பாராட்டை பெற்றுள்ளதாக தேரர் அவர்கள் குறிப்பிட்டார்
நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் ஊடாக திரிபீடகத்தை தவறான முறையில் விவரிப்பவர்களிடமிருந்து திரிபீடகத்தை பாதுகாப்பதுடன், திரிபீடகத்திற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கக்கூடியதாகவும் இருக்குமென்று தெரிவித்தார். இன்று முதல் அரசாங்கத்தின் அனுமதியின்றி திரிபீடகத்தை திருத்துவதற்கோ, மொழிபெயர்ப்பதற்கோ அனுமதி வழங்கப்படாதென்றும் எதிர்வரும் காலங்களில் திரிபீடகத்தை மொழி பெயர்ப்பதற்கோ திருத்தங்கள் செய்வதற்கோ குறிப்பிட்ட வல்லுனர்கள் குழுவிற்கே அனுமதி வழங்கப்படுமென்றும், திரிபீடகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும்வண்ணமே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
திரிபீடகத்தின் ஊடாக புத்த பெருமானின் போதனைகளை புரிந்துகொள்வதற்கும் அவற்றை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு பாரிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மகாசங்கத்தினரின் வழிகாட்டலின் கீழ் தனது ஆட்சி காலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இன்று முற்பகல் மாத்தளை வரலாற்று சிறப்புமிக்க அலுவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் உத்தியோகபூர்வ பிரகடனத்தை ஜனாதிபதி அவர்கள் மகா நாயக்க தேரர்களிடம் கையளித்தார்.
ஆலோக்க விகாராதிபதி வண. கலாநிதி இனாமலுவே நந்தரத்தன தேரரால் விசேட நினைவுச் சின்னமாக “தம்ம சக்க தம்ம” உச்சாடனம் அடங்கிய ஓலை சுவடி ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆக்கபூர்வமான அறிக்கை தொகுப்பு ஒன்றும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டதுடன், அம்முத்திரை ஜனாதிபதி அவர்களால் மகா நாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது.
சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரையை சேர்ந்த மகா நாயக்கர் வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அனுநாயக்கர் வண. நியங்கொட விஜத்தசிறி தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச மகா நாயக்க தேரர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் வருகைதந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகாசங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை. 2019.01.05
இன்று இந்த புண்ணிய பூமியில் இடம்பெறும் இந்த நிகழ்வு உலகவாழ் பௌத்த மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் மதிப்பளிக்கும் தேரவாத போதனைகள் அடங்கிய திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் சந்தர்ப்பமாகும். இந்த உன்னத பணியை அரசாங்கம் என்ற வகையில் நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் மகாசங்கத்தினருடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடினோம். அதற்கமைய 2018 செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்தோம். அதில் நானும் புத்த சாசன அமைச்சரும் அப்போதைய கலாசார அமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களும் கையெழுத்திட்டோம். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மஹிந்த தேரரின் இலங்கை விஜயத்தால் எமக்கு கிடைக்கப்பெற்ற தேரவாத பௌத்த தர்மத்தை பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்த பிக்குகளால் வாய்ப்பாட்டினால் பாதுகாத்து வந்ததோடு வந்து கி.மு. 01ஆம் நூற்றாண்டில் வலகம்பா மன்னனின் ஆட்சி காலத்தில் மாத்தளை அலுவிகாரையில் நூலாக தொகுக்கப்பட்டது.
இலங்கையில் மிக பழமைவாய்ந்த அந்த நூல் கி.பி 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற 2500வது சம்புத்தத்து ஜயந்தியின்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திரிபீடகம் மீண்டும் புத்தகமாக அச்சிடப்பட்டது. வண. ஆனந்தமைத்ரி தேரரின் ஆலோசனைக்கமைய வண. லபுகம லங்கா நந்த தேரரின் தலைமையிலும் மற்றும் பல தேரர்களினாலும் எழுதப்பட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரகடனமாக அச்சிடப்பட்டது. உலகளாவிய ரீதியில் திரிபீடகம் முக்கியத்துவம்வாய்ந்த நூலாக கருதப்படுகிறது. இது இலங்கையில் பௌத்த வழிகாட்டலின் அடிப்படை விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கமைய திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக அறிவிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அன்று நாம் தாக்கல் செய்ததன் மூலமாகவே எமக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் வலகம்பா மன்னனின் ஆட்சிக் காலத்தில் திரிபீடகம் எழுத்து வடிவம் பெற்றது. அதன் பின்னர் மகாசங்கத்தினரின் வழிகாட்டலுக்கமைய அந்த புனித தர்மத்தை பாதுகாக்கும் செயலை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். நான் ஜனாதிபதியாக பதவிவகிக்கும் இக்காலகட்டத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றமை எனது பூர்வஜென்ம புண்ணியமாகவே நான் கருதுகின்றேன்.
முதலாவது பௌத்த மாநாட்டின்போது புத்த பெருமானால் 45 ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வந்த தர்ம போதனைகள் ஒழுக்கம், சூத்திரம், அபிதர்ம ஆகிய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக 2600 ஆண்டுகளாக அந்த தர்மத்தை எம்மால் பாதுகாக்க முடிந்துள்ளது. வாய் வழியாக தர்மத்தை போதித்து அதனை பாதுகாத்து வந்த தேரர்களே திரிபீடகத்தை நூலாக தொகுப்பதற்கு வித்திட்டவர்கள் என்பதை நாம் அறிவோம்.
புத்த பெருமானின் மறைவுக்குப் பின்னர் 236 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு வருகை தந்த மஹிந்த தேரரால் இரண்டு பெளத்த மாநாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட வாய்வழி திரிபீடகம் எமக்கு வழங்கப்பட்டது. திரிபீடகத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. 12 ஆண்டுகளாக மக்களை வாட்டிய ”பெமிநித்யாசாய” எனப்படும் பஞ்ச காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த போதிலும் திரிபீடகத்தை மனனஞ்செய்து அதனை நினைவில் வைத்துக்கொள்வதற்காக தேரர்கள் பாரிய முயற்சிகளை மெற்கொண்டனர். அந்த காலகட்டத்தில் பல தேரர்கள் இலங்கையைவிட்டு சென்றதுடன், இலங்கையில் தங்கிய பிக்குகள் தாமரைத் தண்டுகளையும் பல்வேறு தாவரங்களையும் உணவாக உட்கொண்டு திரிபீடகத்தை வாய்மொழியாக பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிகளானது பாராட்டத்தக்கது. அந்த பஞ்ச காலத்தில் திரிபீடகத்தை மனனஞ்செய்து நினைவில் வைத்திருப்பதன் மூலம் அதனை பாதுகாப்பதில் உள்ள ஆபத்தை தேரர்கள் உணர்ந்தார்கள். எதிர்கால மக்களின் நினைவாற்றல் குறைவடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் திரிபீடகத்திற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டுமென அவர்கள் தீர்மானித்தார்கள்.
மாத்தளை அலுவிகாரையில் திரிபீடகத்தை நூலில் எழுதியதால் பௌத்த மதத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சரியான முறையில் எழுதப்பட்ட திரிபீடக நூல் உலகத்தினருக்கு கிடைப்பதற்கு வழிவகுத்தது. திரிபீடகமானது மத கலாசார உரிமையாகவே கருதப்படுகின்றது. திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதன் அர்த்தம் அது சிங்கள மக்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல. தேசியம் என்பதின் அர்த்தம் இலங்கையர் என்பதே ஆகும்.
ஆரம்ப காலத்தில் திரிபீடகம் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. பாளி மொழியில் எழுதப்பட்ட திரிபீடகம், கிழக்காசிய நாடுகளில் பாவனையில் உள்ளது. இலங்கையில் பணியாற்றிய ரீஸ் டேவிட் எனப்படும் வெளிநாட்டவர் இலங்கையில் பணியாற்றிய காலத்தில் பாளி மொழியினை கற்று ஐரோப்பிய நாடுகளில் பௌத்த மதத்தை பிரசாரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். தேரவாத பௌத்த திரிபீடகமானது சர்வதேச உரிமையாகும். அது ஒரு இனத்தை சார்ந்ததல்ல.
திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக மாற்றியதன் காரணமாக அதற்கு சட்ட பாதுகாப்பையும் வழங்கக்கூடியதாக உள்ளது. சிலர் அவர்களது சுய இலாபத்திற்காக திரிபீடகத்தை தவறான முறையில் விவரித்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர். திரிபீடகத்தில் சில பாளி சொற்களுக்கு தவறான அர்த்தங்களை சூட்டியுள்ளனர். பாளி மொழி தொடர்பில் பாண்டித்தியமற்றவர்கள் திரிபீடகத்தை சிங்களத்திற்கு மொழி பெயர்த்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தவறான முறையில் திரிபீடகத்தை பயன்படுத்திய சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம். இனிமேல் அரசாங்கத்தின் அனுமதியின்றி திரிபீடகத்தை மொழி பெயர்க்கவோ திருத்தங்கள் மேற்கொள்ளவோ இடமளிக்கப் போவதில்லை என்று நான் உங்கள் முன்னிலையில் தெரிவித்துக்கொள்கின்றேன். வரலாற்றில் பல்வேறு சவாலான காலகட்டங்களில் தேரவாத பௌத்த தர்மத்தை அரசர்களும் அமைச்சர்களும் பேணி பாதுகாத்தனர். தற்போது திரிபீடகத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து தவறான நடவடிக்கைகளையும் தவிர்ப்பதற்கே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டது. இனிவரும் காலங்களில் பாளி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களுக்கு மாத்திரமே திரிபீடகத்தை திருத்துவதற்கோ மொழி பெயர்ப்பதற்கோ அனுமதி வழங்கப்படும்.
திரிபீடத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். திரிபீடகத்தின் மூலமாக புத்த பெருமானின் போதனைகளை இலகுவாக புரிந்துகொள்ள முடியும். நான் தர்ம வழியில் பயணிப்பவன் என்ற வகையில் மகாசங்கத்தினரின் விருப்பத்திற்கமைய நான் இந்த முடிவினை மேற்கொண்டேன்.
“தர்ம நெறியில் வாழ்பவனை தர்மமே காக்கும்” நாம் அவ்வழியையே பின்பற்றி வருகிறோம். திரிபீடகத்தை உலக மரபுரிமையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யுனெஸ்கோ அமைப்பின் ஊடாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளோம்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு வழிகாட்டிய மகாசங்கத்தினருக்கும் இப்பணிக்கு பங்களிப்பினை வழங்கிய அனைவருக்கும் ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு, கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

07

08

09

10

11

13

14

{jathumbnail off}